கட்டுரைகள்

 

 WhatsApp Image 2025 02 25 at 16.03.47 81a3293f

ஆசிரியர்: சி.எச். ஸ்பர்ஜன் 1834 - 1892

"நான் கர்த்தர், நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நீர்மூலமாகவில்லை" (மல்கியா 3:6)

தேவனுடைய தன்மையைப் படிப்பது, ஒரு கிறிஸ்தவனைக் குறித்து சரியாய் அறிந்துகொள்ள நமக்கு பெரிதும் உதவும். ஒரு தேவனுடைய பிள்ளை படிக்க வேண்டிய உன்னதமான ஞானம், மேலான தத்துவம் என்னவென்றால், தேவனுடைய நாமம், தன்மை, ஆள்தத்துவம், அவருடைய செயல்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்ளுவதே. இது கடலைப்போன்று பரந்த விரிவானது, ஆழமானது. இதைக் குறித்து சிந்திப்பதைப் போல நம்முடைய பெருமையை உடைத்து நம்மை தாழ்மைப்படுத்துவது வேறொன்றுமில்லை. அவ்விதமாக நாம் சிந்திக்கும் பொழுது "மிகப்பெரிய தேவனே நீர் எல்லையற்றவர். நாங்களோ தகுதியற்ற புழுக்கள்" என்று சொல்லுவோம். இந்த சிந்தை நமது இருதயத்தை தாழ்த்தினாலும் அதை விரிவடையச் செய்கிறதாய் இருக்கிறது.

இவ்விதமாக தேவனை அடிக்கடி சிந்திக்கிறவன் இந்த குறுகிய உலகத்தைச் சுற்றிவருகிறவனைக் காட்டிலும், அதிக அறிவுள்ளவனாய் இருக்கிறான். தேவனின் இவ்விதமான தன்மையை ஆராய்வது, அவனுடைய அறிவின் எல்லையை விரிவாக்குகிறது, அவனுடைய முழு ஆள்தத்துவத்தையும் தேவனுக்குள்ளாக பக்தி வைராக்கியமுள்ளவனாக உருவாக்குகிறது. அதே சமயத்தில் இவ்விதமான சிந்தை ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறதாக இருக்கிறது. அது காயத்தில் சுகமும், துயரத்தில் ஆறுதலும், துக்கத்தில் நம்பிக்கையும் கொடுக்கிறதாயிருக்கிறது. பொங்கி எழும் கடலைப்போன்ற சோதனைகளில் நம்பிக்கை கொடுக்கின்றதாக இருக்கிறது.

நாம் தேவனுடைய பல தன்மைகளில் அவருடைய மாறாத தன்மையைக் குறித்து சிந்திப்போம். அவர் மகிமையான யேகோவா, என்றென்றும் மாறாதவர். நாம் பார்த்த அந்த வசனத்தில் "நான் கர்த்தர் (யேகோவா), நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நீர்மூலமாகாமலிருக்கிறீர்கள்"

இதை மூன்று தலைப்புகளில் நாம் சிந்திப்போம்...

முதலாவதாக "மாறாத தேவன்"

இரண்டாவதாக இந்த உன்னத தன்மையினால் பிரயோஜனப்படுவர்கள் "யாக்கோபின் புத்திரர்"

மூன்றாவதாக அவர்கள் அடையும் பயன் "நீங்கள் நீர்மூலமாகாமலிருக்கிறீர்கள்"

1. கர்த்தர் மாறாதவர்:

i. தேவன் தன்னுடைய தன்மையில் மாறாதவர். இந்த உலகத்தில் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன, அனைத்து சிருஷ்டிகளும் மாறிவருகின்றன. ஆனால் தேவனோ நித்திய நித்தியமாய் மாறாதவராக இருந்துவருகிறார். காலங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தாலும் அவர் இருக்கிறவராகவே இருக்கிற மிகப்பெரிய தேவன். ஆதிமுதல் அந்தமட்டுமாக அவர் இருக்கிறவராகவே இருக்கிறார். அவர் சோதிகளின் பிதா, அவரிடத்தில் யாதொரு மாறுதலும், யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் நித்திய நித்தியமாய், அநாதி காலமாய் இருக்கிறவராகவே இருந்துவருகிறார்.

ii. அவர் அவருடைய குணங்களில் மாறாதவராகவே இருக்கிறார். அவரில் ஆதியில் இருந்த குணங்கள் அதே விதமாக இன்றும் இருந்து வருகின்றன. அவர் வல்லமையுள்ளவராக இருந்தாரா? ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தை சிருஷ்டித்தாரா? இந்த உலகத்தில் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் மகிமைகரமாக உருவாக்கின சர்வ வல்லவராக இருந்தாரா? காற்றையும் கடலையும் தமது மகிமையினால் உருவாக்கினாரா? ஆம்! அவ்விதமாக செய்த அவருடைய கரங்கள் இன்றும் வலுவிழந்து போகவில்லை. வல்லையுள்ள கர்த்தரின் கரம் பராக்கிரமஞ்செய்ய பெலனற்றுப் போகவில்லை. வானமண்டலத்திலுள்ள அனைத்தையும் உண்டாக்கின அவர் இன்றும் அதே வல்லைமையோடும் ஞானத்தோடும் இருக்கிறவராகவே இருக்கிறார். மனிதனுடைய இரட்சிப்பை அநாதிகாலமாய், நித்திய நித்தியமாய் நிர்ணயித்த அவருடைய ஞானம் இன்றும் குன்றிப்போகவில்லை. அவருடைய கண்கள் மங்கி, ஒளியிழந்து போகவில்லை. அவருடைய செவிகள் தம் மக்களின் ஜெபத்தைக் கேட்டுக் கேட்டு சலித்துப் போகவில்ல. அதே வல்லைமையோடும் ஞானத்தோடும் ஜெபத்தைக் கேட்கிறவராக இன்றைக்கும் இருக்கிறார்.

சகலத்தையும் அறிந்திருக்கிற அவருடைய எல்லையில்லா ஞானம் அதே மகத்துவத்தோடும் இன்றும் இருக்கிறது. அவர் தம்முடைய நீதியிலும், பரிசுத்தத்திலும் மாறாதவர். அவர் தம்முடைய சத்தியத்திலும் மாறாதவராகவே இருக்கிறார். அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றினார், நிறைவேற்றுகிறார், நிறைவேற்றுவார். அவர் சொன்னதை நடப்பிக்கிறவராகவே இருக்கிறார்.

கர்த்தர் நல்லவராகவே இன்றும் இருக்கிறார். ஒருகாலத்தில் நல்லவராக இருந்த அவர், இன்றைக்குக் கடினப்பட்டுப் போகவில்லை. அவருடைய அன்பிலும் அவர் மாறாதவரே. இந்த உலகத்தின் அக்கிரமம் என்ற சூறாவளி அவருடைய அன்பு என்ற கன்மலையைத் தகர்த்தெறிய முடியாது, அவர் தம்முடைய உடன்படிக்கையை முதலாவது எழுதின பொழுது தம்முடைய மக்களுக்காகக் கொண்டிருந்த எல்லையில்லாத அன்பு இன்றும் குறைந்து போகவில்லை. அந்த உடன்படிக்கையை நிறைவேற்றும்படியாக தன்னுடைய சொந்த குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி அகோரமான மரணத்தை சந்தித்து இரத்தத்தை சிந்த வேண்டுமென்று அறிந்திருந்தும் அதை நிறைவேற்றாமல் பின்வாங்கவில்லை. இந்த உலகத்தில் சூரியனும் சந்திரனும் தங்கள் ஒளிக்கதிர்களை வீசுவதை நிறுத்தினாலும் அவர் அன்பின் ஒளிக்கதிகள் நித்திய நித்தியமாய் வீசிக்கொண்டேயிருக்கும். "தேவனுடைய எந்தத் தன்மையையும் குணத்தையும் பார்த்தாலும் என்றென்றும் மாறாதது" என்ற முத்திரை அதின்மேல் பதிந்திருப்பதைப் பார்க்க முடியும். "நான் கர்த்தர், நான் மாறாதவர்" என்பது ஒருக்காலும் உடைபடாத முழுமையான ஒன்று.

iii. தேவன் தம்முடைய திட்டங்களிலும் மாறாதவரே. மனிதன் கட்ட ஆரம்பிக்கிறான், ஆனால் முடிக்காமல் போவதுண்டு. தேவன் எப்போதாகிலும் கட்ட ஆம்பித்து முடியாமல் போனது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த உலகத்தைப் போல ஆயிரம் உலகங்களை உருவாக்க இன்றும் அவரால் முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம். அல்லது எப்போதாகிலும் தம்முடைய திட்டத்தை செயல்படுத்த முடியாததினிமித்தம் மாற்றியோ அல்லது திருத்தியோ அமைத்துண்டா? அல்லது ஒரு சிலர் தேவனுக்கு திட்டமென்பது கிடையாது என்று மதியீனமாய்ச் சொல்லலாம். நீ எந்த திட்டமுமில்லாமல் எங்காகிலும் செல்வதுண்டா என்று கேட்டால், இல்லை நான் திட்டத்தோடு போகிறேன் என்று சொல்லுகிறாய். அப்படியானால் தேவனுக்கு மட்டும் திட்டமில்லை என்று எப்படி உன்னால் சொல்லமுடியும்? தேவன் அவ்விதமாகவே திட்டமுள்ளவர் என்பதை மறந்துவிடாதே. அவர் தம்முடைய சர்வ ஞானத்தைக் கொண்டு சகலத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துகிறார். ஒருபோதும் அவர் அதை மாற்றுவதில்லை. இது நடைபெறும் என்று அவரால் திட்டமிடப்படுவது ஒருக்காலும் நடைபெறாமல் போவதில்லை. தேவன் "இது என்னுடைய நோக்கம், என்னுடைய தீர்மானம், இது என்னுடைய பிரமாணம் என்கிறார்".அவருடையவைகளை எந்த வல்லமையும் அல்லது நரகத்தின் எந்த சக்தியும் நிறைவேறாமல் தடுக்கவோ, அழிக்கவோ முடியாது. அவர் தம்முடைய திட்டங்களை மாற்றுவதில்லை. ஏன் அவர் மாற்ற வேண்டும்? அவர் சர்வ வல்லவர். அவர் விருப்பத்தின்படி அவரால் செய்யமுடியும். அவர் சர்வ ஞானமுள்ளவர். ஆகவே அவர் ஒருக்காலும் தவறாகத் திட்டமிடமுடியாது. அவர் நித்தியமான தேவன். ஆகவே அவர் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே மரித்துவிட மாட்டார். இன்று தோன்றி நாளை மடிந்து போகிற நீயும் நானும் திட்டங்களை மாற்றலாம் அல்லது முடியாமல் போகலாம். ஆனால் தேவனைக் குறித்து அவ்விதம் ஒருக்காலும் எண்ணாதே. என்னுடைய நாமத்தை அவர் கையில் வரைந்திருக்கிறார். நித்திய நித்தியமாக அது ஒருக்காலும் அழியாது. அவருடைய உள்ளத்தில் நான் பதிந்திருக்கிறேன். அது என்றென்றும் இருக்கும் கிருபையின் சின்னமாகவே இருக்கிறது.

iv. தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களிலும் மாறாதவராய் இருக்கிறார். தேவனுடைய இனிமையான வாக்குத்தத்தங்களைக் குறித்துப் பேச விரும்புகிறோம். அவைகளில் ஒன்றாகிலும் மாறுமென்று எண்ணுவோமானால் வேதத்தை நம்புவதில் பிரயோஜனமொன்றுமில்லை. எனக்கு மாறாதவைகளே தேவை. வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்கள் மாறாதவைகளும், அவைகள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன. தேவனுடைய மகிமைக்கென்று அவைகள் நேற்று, இன்று, என்றல்ல. என்றென்றும் மாறாத மகிமை பொருந்தினவைகளாக இருக்கின்றன. இந்த உலகத்தில் வாழும்படியான சிறந்த வழிமுறை ஒன்றைச் சொல்லுகிறேன், கேளுங்கள். ஒருவர் ஒரு நீக்ரோ மனிதனைப் பார்த்து "நீ கர்த்தருக்குள் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருக்கிறாய், நானோ அடிக்கடி துவண்டு போகிறேன், ஏன்?" என்று கேட்டார். அப்பொழுது நீக்ரோ மனிதன் அவரைப் பார்த்து, நீங்கள் வாக்குத்தத்தத்தின் மேல் "நின்று" கொண்டிருக்கிறீர்கள். நானோ வாக்குத்தத்தத்தின் மேல் முகங்குப்புற விழுந்து "படுத்து" இருக்கிறேன். அதை முழுமையாய் பற்றிக்கொள்ளுகிறேன். பலமான காற்று வீசும் போது நின்று கொண்டிருக்கிற நீங்கள் அதினால் தாக்கப்பட்டு விழுந்து விடுகிறீர்கள். எனக்கோ விழுந்து விடுவேன் என்ற பயமில்லை என்றார். அப்படியானால் நாமும் தேவனை நோக்கி "ஆண்டவரே இது உம்முடைய வாக்குத்தத்தம் அதை நிறைவேற்ற நீரே உத்திரவாதமுள்ளவர்" என்று அதின் மேல் முழுமையாய் படுத்துப் பற்றிக் கொள்ளுவோமாக. தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தமும் மாறாத நித்திய கன்மலையாய் இருக்கிறது. ஆகவே அவருடைய பாதங்களில் முற்றிலும் விழுந்து என்றென்றும் இளைப்பாறுவோமாக.

v. அவர் சொல்லியிருக்கும் தண்டனைகளும் மாறாதவைகள் என்பதை மறந்துவிட வேண்டாம். அவரை விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டாயிற்று என்பதும் ஒருக்காலும் மாறாதது. உன் சன்மார்க்கமும் நல்நெறியும் உன்னை ஒருக்காலும் இரட்சிக்காது.

vi. தேவன் எவர்கள் மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அதிலும் ஒருக்காலும் மாற்றமிருக்காது. அவருடைய அன்பில் எவ்விதமான மாற்றமும் இல்லை. ஒரு தேவனுடைய பிள்ளை நடுவில் விழுந்துவிடுவான் என்போமானால், முடிவுபரியந்தம் அவர் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் என்ற வாக்குத்தத்தம் என்னவாயிற்று? தேவன், "எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்" (ரோமர் 8:30). சர்வ லோகத்தையும் உண்டாக்கி, அவைகளைத் தொடர்ந்து வழிநடத்துகிற உன்னத தேவன், நிலைமாறாத உண்மைகளால் வெளிப்படுத்துகிற இந்த வல்லவர் எப்படி மாறுகிறவராய் இருக்கக்கூடும் என்று எண்ண முடியும்? கடந்த காலத்தை நோக்கிப்பாருங்கள்.

தேவனின் மாறாத தன்மையை நாம் அதில் காணமுடியும். அவர் சொல்லியும் செய்யாதவைகள் உண்டோ? அவர் நிச்சயத்தும் நடக்காமல் போனவைகள் உண்டோ? அவருக்குச் சித்தமானவைகள் எல்லாவற்றையும் அவர் செய்திருக்கிறார். அவருடைய திட்டங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றியிருக்கிறார் என்றே இந்த யேகோவாவாகிய தேவனைக் குறித்துச் சொல்ல முடியும். ஏதோம் பாழாகும் என்று சொன்னார். (எரேமியா 49:17). இப்பொழுது ஏதோம் எங்கே இருக்கிறது? பாபேலும் நினிவேயும் எங்கே போயிற்று? மோவாபும் அம்மோன் புத்திரரும் எங்கே? நான் அழிப்பேன் என்று சொன்ன தேசங்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றன? அவைகளை முற்றிலும் வேரறுக்கப்பண்ணி அவைகளைக் குறித்த நினைவையும் பூமியிலிருந்து எடுத்துப்போட்டாரே. தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை நினைவு கூறாமல் போனதுண்டோ? அவருடைய உடன்படிக்கையை முறித்து அவருடைய திட்டத்திலிருந்து எப்போதாகிலும் அவர் விலகிப் போனதுண்டோ? இல்லை, ஒருக்காலும் இல்லவேயில்லை. ஒருவேளை எசேக்கியாவை குறித்து மாறினார் என்று சொல்லலாம். எசேக்கியாவைப் பார்த்து தேவன், ஏசாயா மூலம் "நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்” (2 இராஜாக்கள் 20:1) என்று சொன்னார். அப்பொழுது எசேக்கியா தன் முகத்தை சுவர்புறமாக திருப்பிக்கொண்டு கர்த்தரை நோக்கி ஜெபித்தான். ஏசாயா பாதிமுற்றத்தை விட்டு அப்புறம் போகிறதற்கு முன்னே, திரும்பி வந்து உன் நாட்களோடே 15 வருடங்களைக் கூட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொன்னார்.

இங்கு தேவன் மாறிடவில்லை. மனிதர்களாகிய நமக்கு நடக்கும் காரியம் தெரியாது. ஆகவே நாம் மாறிவிட வாய்ப்பு உள்ளது. தேவன் இங்கு நடக்கும் காரியத்தை ஏற்கனவே அறிந்தவராகவே செயல்பட்டார். எசேக்கியா இராஜாவின் மகன் மனாசே இந்த சம்பவத்திற்கு பிறகு 3 வருடங்கள் கழித்தே பிறந்தான். மனாசேவின் மகன் யோசியா வழியிலேயே இயேசு பிறந்தார். ஆகவே மனாசே பிறவாமல் இருந்திருந்தால் தேவனுடைய திட்டத்தின்படி தாவீதின் வம்ச வழியில் இயேசு எப்படி பிறந்திருக்கக்கூடும்? தேவன் சகலத்தையும் அறிந்தவராக செயல்பட்டிருக்கிறார். இதில் தேவன் தம்முடைய திட்டத்தை மாற்றிக்கொண்டு செயல்படவில்லை.

2. தேவனின் மாறாத தன்மையினால் பிரியோஜனப்படுபவர்கள்:

"நான் கர்த்தர், நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நீர்மூலமாகாமலிருக்கிறீர்கள்"

i. யார் இந்த யாக்கோபின் புத்திரர்கள்? இந்த மாறாத தேவனில் யார் களிகூறமுடியும்? முதலாவது அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். "பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான்... அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது" (ரோமர் 9:11-13). ஆகவே யாக்கோபின் புத்திரர் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு நித்தியமான இரட்சிப்புக்கு முன் குறிக்கப்பட்டவர்கள்.

ii. யாக்கோபின் புத்திரர் விசேஷித்த தேவ அதிகாரங்களை, நாமங்களைப் பெற்றவர்கள். "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்" (யோவான் 1:12). ஆண்டவராகிய இயேசுவின் மூலமாய் அவர்கள் நித்திய நகரத்திற்குள் பிரவேசித்தவர்கள். அவர்கள் நித்திய மகிமைக்கு வாக்குப்பண்ணப்பட்டவர்கள்.

iii. யாக்கோபின் புத்திரர் விசேஷித்த சோதனைகளைக் கடந்து செல்லுபவர்கள். ஏழை யாக்கோபு எத்தனை சோதனைகளைக் கடந்து செல்ல வேண்டியதாய் இருந்தது. தகப்பனுடைய வீட்டை விட்டு மாமன் லாபானிடத்திற்கு ஓடிச் செல்ல வேண்டியதாய் இருந்தது. லாபானோடு இருந்த நாட்களிளெல்லாம் அவனுடைய மனைவியைக் குறித்தும், சம்பளத்திலும் ஏமாற்றப்பட்டான். லாபானை விட்டு விலகி ஓடிவந்த பொழுது ஏசாவை 400 பேர்களோடு சந்திக்க வேண்டியதாய் இருந்தது. பிறகு தன்னுடைய மனைவியாகிய ராகேல் இறந்து. தன்னுடைய மகள் தீனாளின் மூலமாய் சந்தித்த பிரச்சனைகள். தான் அதிகமாய் நேசித்த யோசேப்பை அவன் சொந்த பிள்ளைகளால் ஏமாற்றப்பட்டு குறிப்பிட்ட காலம் இழக்க வேண்டியதாய் இருந்தது. யாக்கோபின் மகனாகிய ரூபன் தன் தகப்பனுடைய படுக்கையை தீட்டுப்படுத்தினான். பிறகு பென்யமீனும் யாக்கோபினின்று அழைத்துச் செல்லப்பட்டபொழுது இருதயம் உடைந்தவனாய்

"யோசேப்பும் சிமியோனும் இல்லை. இப்பொழுது பென்யமீனையும் எடுத்துச் செல்லுகிறீர்களா?" என்று அழுதான். தன்னுடைய சகோதரனை ஏமாற்றிய ஒரு பாவத்திற்காக வாழ்க்கை முழுவதும் இவ்விதமான சோதனைகளின் ஊடாய் கடந்து செல்ல வேண்டியதாய் இருந்தது. யாக்கோபை போல உங்களில் அநேகர் இவ்விதமான பல சோதனைகளின் வழியைக் கடந்து செல்லலாம். ஆனாலும் சிலுவையை சுமக்கிற உங்களைப் பார்த்து தேவன் சொல்லுகிறார். "நான் கர்த்தர், நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகமலிருக்கிறீர்கள்". அதிகமாய் சோதிக்கப்படும் என் அருமையான ஆத்துமாக்களே! தேவனின் மாறாத தன்மையினிமித்தம் நீங்கள் நீர்மூலமாய் போவதில்லை. நான் அதிகமாய் சோதனைகளைக் கடந்து போகிறேன் என்று மனஞ்சலித்து போகவேண்டிய அவசியமும் இல்லை. தெய்வக் குமாரனே பாடுகளுக்குட்படுத்தப்பட்டார். நிந்தைக்குரியவரானார். அவருடைய பாடுகளைப் பார்க்கும்பொழுது நம்முடைய பாடுகள் மிக மிக சொற்பமே. நீங்கள் அவ்விதம் ஒருக்காலும் சோதிக்கப்படவில்லை. அவருடைய பாடுகள் எவ்விதமானவைகள் என்பதை நம்மால் விளங்கிக் கொள்ளவும் முடியாது. அவர் "பாடுகள்" என்னும் முழு பாத்திரத்தையும் குடிக்க வேண்டியதாய் இருந்தது. அதில் நம்முடைய பாடுகள் ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் கூட கிடையாது. "நான் கர்த்தர், நான் மாறாதவர்" ஆகவே விசேஷித்த சோதனைகளின் ஊடாய் கடந்து போகிற யாக்கோபின் புத்திரரே! நீங்கள் நிர்மூலமாவதில்லை.

iv. நான் யாக்கோபின் புத்திரர்கள் யார் என்று சொல்வதின் மூலம் உங்களை நீங்கள் ஒப்பிட்டுப்பாருங்கள். அவர்கள் விசேஷித்த ஆவிக்குரிய குணங்களை அல்லது தன்மைகளை உடையவர்கள். யாக்கோபில் பல குறைகள் காணப்பட்டாலும் அவனில் காணப்பட்ட இரண்டு ஆவிக்குரிய தன்மைகளை மறுக்க முடியாது. அதில் ஒன்று யாக்கோபின் விசுவாசம், மற்றொன்று ஜெபம். விசுவாசத்தினால் வாக்குத்தத்தங்களைப் பெற்றவர்களில் யாக்கோபும் ஒருவன். அருமையானவர்களே! நீங்கள் விசுவாசத்தின் மக்களா? நீங்கள் விசுவாசத்தில் நடக்கிறவர்களா? விசுவாசத்தில் நின்று வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் விசுவாசத்தின் மூலம் பெற்று வாழுகிறீர்களா? விசுவாசத்தினால் நீங்கள் ஆளப்படுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் யாக்கோபின் புத்திரர். "நான் கர்த்தர், நான் மாறாதவர் ஆகையால் நீங்கள் நிர்மூலமாவதில்லை".

யாக்கோபு ஒரு ஜெப வீரன். தேவனிடத்தில் போராடி, மன்றாடி ஜெபித்தவன். இங்கே ஜெபிக்காத ஒரு மனிதன் இருக்கிறான். மனிதனே! ஜெபமில்லாதபடி நீ வாழ்ந்து மரி. நீ நரகம் சென்று அங்கு நீண்டகாலம் ஜெபிப்பாய். உனக்கு ஜெபிக்க நேரமில்லையா? உண்ண நேரமிருக்கிறது, உடுக்க நேரமிருக்கிறது, ஆனால் ஜெபிக்க மட்டும் நேரமில்லை. யாக்கோபின் புத்திரர் ஜெபிக்காமல் வாழ முடியாது. அவர்கள் மன்றாடி. ஜெபிக்கும் ஆவிக்குரிய வீரர்கள். சுவாசிக்காமல் எப்படி வாழ முடியாதோ அப்படி ஜெபிக்காமல் அவர்களால் ஜீவிக்க முடியாது. அவர்கள் ஜெபித்தே ஆகவேண்டும். யாக்கோபின் புத்திரரே! தேவன் மாறாதவர், ஆகவே களிகூருங்கள்.

3. யாக்கோபின் புத்திரர் மாறாத தேவனிடத்திலிருந்து பெறும் நன்மைகள்:

"ஆகையால் யாக்கோபின் புத்திரரே, நீங்கள் நிர்மூலமாகிறதில்லை. அதாவது பட்சிக்கப்படுகிறதில்லை". ஒரு மனிதன் எப்படி பட்சிக்கப்பட முடியும்? இரண்டு விதங்களில் இது நடக்ககூடும். ஒன்று நரகத்தில் பட்சிக்கப்படுவது, மற்றொன்று இந்த உலகத்தில் பட்சிக்கப்படுவது. அதாவது உயிருள்ளவராய் வாழ்ந்தாலும் ஏற்கனவே தேவனின் ஆக்கினைக்குட்பட்டவராய், உயிருள்ளவர்கள் என்று பெயர் பெற்றாலும் ஆவியில் மரித்தவர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பது.

தேவன் நம்மை நம்முடைய சொந்த வழிக்குவிட்டிருப்பாரானால் நாம் இப்போது எங்கிருப்போம்? குடிகாரர்களோடும், தேவனை, சர்வ வல்லவரை தூஷிக்கிறவர்களோடும் வாழ்ந்துகொண்டிருப்போம். கேட்டிலும் கேட்டின் அழிவிலும் அழிந்து கொண்டிருப்போம். என்னைப் போலவும் நீங்கள் வாழ்க்கையில் இவ்விதமாக உணர்ந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். நான் சோதனையின் விளிம்பிற்குள் தள்ளப்பட்டு மேற்கொள்ள பலனற்றவனாய் திகைத்த வேளைகள் உண்டு. சாத்தானின், வீழ்ச்சியின் விளிம்பிற்கு தள்ளிச் சென்ற வேளைகளுண்டு. நான் விழுந்து விடக்கூடிய பாவத்தின் பயங்கரத்தை நினைக்கும் பொழுது உடல் சிலிர்க்கிறது. விழுந்து விடக்கூடிய படுபாதாளத்தை நோக்கிப்பார்த்த போது கதி கலங்கினேன். என் சிந்தனைகளைக் கடந்து சென்ற பொல்லாத நினைவுகள் செயல் பூர்வமாக ஆக்கப்பட்டிருக்குமானால் அது எவ்வளவு கொடிய பாவம். இவைகள் எல்லாவற்றின் மத்தியிலும் நான் நிர்மூலமாகாமலிருப்பது அவரின் மாறாத தன்மையினிமித்தமே. சுயமே ஒரு கிறிஸ்தவனின் பயங்கர எதிரி. அவர் மாறாதவராக இல்லாதிருப்பாரானால் நீயும் நானும் பட்சிக்கப்பட்டிருப்போம். தேவனை நாம் பிதாவென்று அழைக்கிறோம். மெய்யாலும் அவர் நம்முடைய தகப்பனார். அவரைப் போல் இந்த உலகத்தில் துன்புறும் தகப்பனார் ஒருவருமில்லை. அவருக்கு அவிசுவாசமான, நன்றில்லாத, கீழ்ப்படியாத, கலக குணமுள்ள, முறுமுறுக்கிற பிள்ளைகளாய் நாமிருக்கிறோம். அவர் மாறாதவராக இல்லாதிருப்பாரானால் நாம் இந்நேரம் நிர்மூலமாயிருப்போம். அவர் நீடிய பொறுமை இல்லாதவராய் இருந்திருப்பாரானால் பட்டயத்தை எடுத்து நம்மை வெட்டிபோட்டிருப்பார். அவர் நம்மை நேசிக்கும்படி நம்மில் நற்குணம் ஒன்றுமில்லை.

ஜான் நியூட்டன் என்ற தேவ மனிதன் தன்னிடம் ஒரு பெண் இவ்விதம் சொன்னதை நினைவு கூர்ந்து "தேவனின் தெரிந்துகொள்ளுதலின் சத்தியத்திற்கு நானே சாட்சி. நான் பிறப்பதற்கு முன்பு தேவன் என்னை நேசிக்காதிருப்பாரானால் நான் பிறந்த பின்பாக அவர் என்னை நேசித்திருக்க முடியாது. என்னுடைய பாவங்களும் அக்கிரமங்களும் பெரிது". இவ்விதமாகவே நானும், நாமெல்லாரும் சாட்சியிடக்கூடும். ஏனென்றால் பிறந்த பின்பு நம்மில் மேன்மை பாராட்ட என்ன உண்டு? அவருடைய தெரிந்து கொள்ளுதல் நம்முடைய கிரியைச் சார்ந்ததாயிராததினால் இன்னும் அவர் நம்மை நேசிக்க முடிகிறது. முதன் முதலில் நம்முடைய நீதினிமித்தம் அவர் நம்மை நேசிக்கவில்லை.

ஆகவே நம்முடைய பாவம் அவருடைய அன்பின் கயிறை துண்டிக்க முடிவதில்லை. அவர் கிருபையினால் நம்மில் அன்பு கூறுகிறார். தேவன் மாறுகிறவராக இருந்திருப்பாரானால் நாம் சாத்தானால், உலகத்தால், நமது சொந்த பாவங்களினால், மற்றும் நூற்றுக்கணக்கான வழிகளினால் நிர்மூலமாய் போயிருப்போம். யாக்கோபின் புத்திரரே! தேவன் மாறாதவர் என்ற சத்தியத்தை உட்கொண்டு உங்களை பெலப்படுத்துங்கள். பரிசுத்த ஆவியானவர் மகிமைகரமான இந்த சத்தியத்தை உங்கள் இருதங்யகளில் எழுதுவாராக. தேவன் மாறாதவர் என்பது கொழுமையான பதார்த்தம், சுத்தமாக்கப்பட்ட திராட்சரசமுமாய் இருக்கட்டும். எல்லாம் மாறிப்போகலாம், ஆனால் தேவன் மாறாதவர். உங்கள் நண்பர்கள் மாறலாம். உங்கள் போதகர் உங்களை விட்டு எடுக்கப்படலாம். மற்றவர்கள் உங்களை வெறுத்து மாறிப்போகலாம். ஆனால் தேவன் உன்னை நேசிக்கிறார்.

வாழ்க்கையில் உன் நிலைமை மாறலாம். உன் அந்தஸ்து மாறலாம். உன் சொத்துக்கள் அனைத்தும் போகலாம். உன் வாழ்க்கை முழுவதுமே மாறினது போல காணப்படலாம். ஆனாலும் தேவன் மாறாதவர் என்பதில் உறுதியாயிரு. மாறுதல் என்பது தொடக்கூடாத ஒரு இடம் உண்டு. அது தேவனே. மாறுதல் என்பது அழிக்காத ஒரு நாமமுண்டு, அது தேவனின் இருதயமே. அவரை நம்பு ஒருக்காலமும் ஏமாற்றமடைய மாட்டாய். அவர் ஒருக்காலமும் உன்னை விட்டு விலக மாட்டார். அவரை விட்டு நீ விலகவும் உன்னை விட மாட்டார். கர்த்தர் தாமே இந்த வார்த்தைகளை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.