கட்டுரைகள்

 

 WhatsApp Image 2025 02 25 at 16.16.32 0f9f2b5f

ஆசிரியர்: ஜான் பன்யன் (1626 - 1688)

1688 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிரசங்கிக்கப்பட்டது.

(ஆசிரியரின் விளக்கம்)

இந்தச் செய்தி மிகவும் சுருக்கமானதாயிருந்தாலும், தனித்துவமிக்கதாகவும் ஆர்வமூட்டக் கூடியதாகவும் உள்ளது: இது எப்படி பாதுகாக்கப்பட்டது என்று சொல்லப்படவில்லை; ஆனால், கேட்டவர்களில் ஒருவர் எடுத்த குறிப்புகளில் இருந்து வெளியிடப்பட்டதாகத் தோன்றுகிறது. இந்தச் செய்தியைக் குறித்து எந்த ஆவணங்களோ அல்லது குறிப்புகளோ உரையாற்றுபவரின் தனிச்சுய கையொப்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டதற்கான எந்த சான்றும் இல்லை.

சாஸ்டோ என்பவரால் வெளியிடப்பட்ட ஜான் பன்யனின் படைப்புகளின் பட்டியலில், 1690 -ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட 'Heavenly Footman' என்ற புத்தகத்தின் இறுதியில், எண். 44 -ல் இது இடம் பெற்றுள்ளது. முதல் முறை அச்சிடப்பட்ட தலைப்புப் பக்கத்தை வார்த்தை வார்த்தையாக வழங்குவதாக அவர் கூறுகிறார். அதாவது, "1688 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி, லண்டனில் வெள்ளை ஆலயத்திற்கு அருகிலுள்ள, திரு. காம்மனின் கூட்ட அரங்கிலே மதிப்புக்குரிய: ஜான் பன்யன் அவர்கள், யோவான் 1:13 -ஐ மையமாகக் கொண்டு அளித்த  இறுதி பிரசங்கத்திலே, மாம்சத்தின்படி பிறத்தல் மற்றும் ஆவியின்படி பிறத்தல் ஆகியவற்றின் ஒற்றுமையை விளக்கிக் காட்டி, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தாங்கள் மறுபடியும் பிறந்தவர்களா? என்பதை சோதிக்கவும் அறியவும் கூறுகிறார்". இது 1689 -ம் ஆண்டில் ஒரு தாளில் அச்சிடப்பட்டது.

இதன் மூலம், இந்த பிரசங்கத்தை அவர், தனக்கு மரணத்திற்கு ஏதுவான வியாதி ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது 1688 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 -ம் தேதி அவரது மரண நாளுக்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன்பு அளித்ததென்பதை நாம் அறியலாம். ஒரு தந்தையை மகனோடு ஒப்புரவாக்க வேண்டும் என்ற இரக்க உள்ளத்துடன் தொடங்கிய குதிரை பயணத்தினிமித்தம் அவர் சந்தித்த வியாதி, அவரது அற்புதமான வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது. தனது ஊழியத்தை அங்கு  நிறைவேற்றிய பின்பு, அவர் லண்டனுக்கு சென்று, அங்கிருந்து வீடு திரும்பும்போது கடுமையான மழையில் சிக்கினார். இதன் விளைவுகள் அடுத்த சில நாட்களில் தென்பட்ட நேரத்தில் அவர் தனது  இறுதி பிரசங்கத்தை செய்திருக்கிறார்.  அவரின் உடலை தாக்கிய காய்ச்சலை, அவர் மிகுந்த பொறுமையுடனும், முழுமையான அர்ப்பணிப்புடனும் தாங்கினார். தனது மனைவி மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தூரமாக, பனிமலையிலுள்ள அவரது நண்பர் திரு. ஸ்ட்ரூட்விக் என்பவரின்  வீட்டில் தனது ஓட்டத்தை முடித்து, இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார். தொடர்ந்து, பரலோகத்தின் இன்னிசையிலும், மகிமையிலும் விழித்தெழுந்தார்.

ஜான் பன்யன் அவர்களின் கடைசி பிரசங்கம்:

அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். (யோவான் 1:13)

இந்த வார்த்தைகள் முன்பகுதிகளுடன் தொடர்புடையவை என்பதால், இதை சரியாகப் புரிந்துக் கொள்வதற்காக நீங்கள் அவற்றைப் பார்ப்பது அவசியம்.

அதாவது: 'அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.'

முன் உள்ள வார்த்தைகளில் இரண்டு விஷயங்களை காண்கிறீர்கள். முதலாவது, அவர்களிடம் அவர் வந்தபோது, அவருக்கு சொந்தமான சிலர் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டாவது, அவரை அவருடைய சொந்தமான மற்ற சிலர் ஏற்றுக்கொண்டு, வரவேற்றனர்; அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர் கடந்து செல்கிறார், ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கோ அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாகும்படிக்கு அதிகாரம் கொடுக்கிறார்.

இதனை ஒருவரும் ஒரு அதிர்ஷ்டமாக அல்லது நல்ல வாய்ப்பாக கருதக்கூடாது என்பதற்காக, அவர்:  'அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்' என கூறுகிறார். அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மாம்சத்தாலும் இரத்தத்தாலும் மாத்திரமே பிறந்தவர்கள்; ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கோ தேவன் பிதாவானர்; அவர்கள் கிறிஸ்துவின் உபதேசத்தை மிக வாஞ்சையோடு ஏற்றுக்கொள்ளுகின்றனர்.

முதலாவது, "இரத்தம்" என்று எதைக் குறிப்பிடுகிறார் என்பதை நான் விளக்குகிறேன்.  விசுவாசிக்கிறவர்கள் ஒரு சுதந்தரத்திற்கான சுதந்தரவாளியாக பிறந்தவர்களைப் போலாவர்; அவர்கள் மாம்சத்தாலும், மனுஷ சித்தத்தாலும் பிறந்தவர்கள் அல்ல, தேவனால் பிறந்தவர்கள் ஆவர்.

"இரத்தத்தாலுமல்ல" என்பதன் பொருள் மரபுவழி பிறப்பினைக் குறிக்கவில்லை, தேவராஜ்யத்திற்கு, மாம்சத்தால் பிறந்தவர்களுமல்ல, இரத்தத்தினாலே நான் தேவனுடைய மனுஷன் அல்லது மனுஷி என்று சொல்லுகிறவர்களுமல்ல. (அப்போஸ்தலர் 17:26); அவர், 'மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணினார்'. இங்கே அவர் "இரத்தத்தாலுமல்ல" என்று கூறும்போது, அவர்கள் பெருமைக்கொண்டிருந்த மாம்சத்தின்படியான மேன்மைகளை மறுக்கிறார்:  அவர்கள் தங்களை அபிரகாமின் சந்ததியர் என்று கூறி பெருமைப்பட்டனர். இல்லை, இல்லை என்று அவர் சொல்லி, அது இரத்தத்தாலுமல்ல; நீங்கள் ஆபிரகாம் எங்களுக்கு பிதா என்று நினைக்க வேண்டாம்;  பரலோக ராஜ்ஜியத்திற்கு செல்ல வேண்டுமானால், நீங்கள் தேவனால் பிறக்க வேண்டும் என்று கூறுகிறார்.

இரண்டாவது, "மாம்ச சித்தத்தின்படியல்ல" என்பதன் பொருள் என்ன?

இந்த வார்த்தையை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?

மனுஷனுக்குள் இருக்கிற வல்லமையான சுபாவ தன்மைகள், அனைத்து விதமான ஒழுக்கக் குறைவுகளிலும் ஈடுபடுவதற்கும், மாம்ச ஆசைகளை நிறைவேற்றுவதற்கும் வழிவகுக்கின்றன: இங்கே அது இவ்விதமாக புரிந்து கொள்ளப்பட கூடாது; மனுஷர் அவர்களின் இச்சைகளை நிறைவேற்றுவதால் தேவனுடைய பிள்ளைகளாக முடியாது. இதை நல்ல முறையில் புரிந்துக்கொள்ள வேண்டும்: மாம்சத்திற்குரிய மனுஷரில் வெறும் தீயவற்றை விரும்பும் மனப்பான்மை மட்டுமல்ல, அவர்களுக்கு இரட்சிக்கப்பட வேண்டுமென்றும், பரலோகத்திற்கு செல்ல வேண்டுமென்ற மனப்பான்மையும் உண்டு. ஆனால் இதுவே போதுமானதாக இருக்காது; இதனால் ஒருவருக்கும் தேவனுடைய ராஜ்யத்தில் மேன்மை உண்டாகாது.  மற்ற உலகக் காரியங்களுக்கடுத்த சுபாவ விருப்பங்களால் ஒருவர் மரிக்கையில் பரலோகத்திற்கு செல்வர் என்ற வாதத்தை இது நிரூபிக்காது. நான் சுயசிந்தை நோக்கமுடையவனல்ல; அதனை வெறுக்கிறேன். ஆனாலும், துன்மார்க்க மனுஷனுக்கும் ஒருவேளை அல்லது மற்றொரு வேளையில் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்; அவர் ஒருகாலத்தில் அல்லது மற்றொரு காலத்தில் வாசிக்கலாம் அல்லது ஜெபிக்கலாம்; ஆனால் இதுவே போதுமானதாக இருக்காது: ‘ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். நோக்கமின்றி விரும்புவதும், ஓடுகிறதும் உள்ளது. (ரோமர் 9:16).  நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. (வசனம் - 31).  இதை நான் இங்கே, நேர்மையான வாழ்க்கை முறையினாலே பரலோகத்திற்கு போக முடியாது என்று அப். பவுல் கூறியதாகக் கருதுவதில்லை; மாறாக, கிருபையின்றி ஒருவர், சுபாவத்தின் வரங்களைக் கொண்டிருந்தாலும், தேவனுடைய ராஜ்யத்தை அடையவும் தேவனுடைய பிள்ளையாகும் மேன்மையும் அவருக்கு உண்டாகாது. கிருபையின்றி ஒருவர் இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்பலாம், ஆனால் தேவனுடைய வழியில் அவர் அந்த விருப்பத்தை அடைய முடியாது.  சுபாவத்தினாலே சுபாவத்தின் காரியங்களை மட்டுமே அறிய முடியும்; தேவனுடைய ஆவி இல்லாமல், தேவனுடைய காரியங்களை யாரும் அறிய முடியாது. தேவனுடைய ஆவி உங்களுக்குள் இல்லாவிடில், அது பரலோகத்தின் வாசல்களுக்கு புறம்பாக்கிவிடும். 'அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.' இஸ்மவேல் இரட்சிக்கப்பட வேண்டும் என்று சிலருக்கு விருப்பம் இருக்கலாம்; ஆனால் அது பிள்ளையை இரட்சிக்காது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது நம்முடைய சித்தமாக இருந்தால், நீங்கள் அனைவரும் பரலோகத்திற்குச் செல்ல விரும்புவேன். உலகில் எத்தனையோ பேர் தங்கள் பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறார்கள், அழுகிறார்கள், அவர்களுக்காக ஜீவனைக் கொடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனால் இதுவும் போதுமானதாக இருக்காது. தேவனின் சித்தமே அனைத்து விதிகளின் அடிப்படையாகும்; அது இயேசு கிறிஸ்துவின் மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும்: ‘அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்'.

இப்போது நான் உபதேசத்திற்குச் வருகிறேன்.

மனுஷர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கையில், அவரை உண்மையாக ஏற்றுக்கொள்ளுகின்றனர்; அவர்கள் அதற்காகவே பிறந்திருக்கிறார்கள்.

அவர், ‘அவர்கள் பிறப்பார்கள்’ என்று கூறவில்லை, ஆனால் ‘அவர்கள் பிறந்திருக்கிறார்கள்’ என்கிறார். அவர்கள் தேவனின்  நித்திய இரட்சிப்பை அடைவதற்கு முன்பே, தேவனால் பிறந்திருக்கிறார்கள், தேவனுக்காகவும், தேவனின் கிரியைகளுக்காகவும் பிறந்திருக்கிறார்கள். ‘ஒரு மனுஷன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான்’. ஒரு மனுஷன் தேவனால் பிறக்காத வரை, அவன் அதை காண முடியாது: எப்படியும் தேவ ராஜ்யத்தை, அவன் தேவனால் பிறக்குமுன் காண முடியாது. இதை சுவிசேஷமாக எடுத்துக் கொண்டால், அவன் மறுபடியும் பிறக்குமுன் அதை காண முடியாது. விசுவாசித்தல் என்பது மறுபடியும் பிறந்ததின் வெளிப்பாடாகும்; ‘இரத்தத்தாலும், மாம்ச சித்தத்தாலுமல்ல, தேவனாலாகும்.’

முதலில், இதற்கான ஒரு தெளிவான விளக்கத்தை ஒன்று அல்லது இரண்டு ஒப்புமைகளின் மூலம் தருகிறேன். ஒரு குழந்தை, உலகில் பிறப்பதற்கு முன்பு, தன் தாயின் இருளான கர்ப்பத்தில் இருக்கும்: அதுபோல், தேவ பிள்ளையும் மறுபடியும் பிறப்பதற்கு முன்பு, பாவத்தின் இருண்ட சிறையில் இருப்பார், தேவனின் ராஜ்யத்தைக் குறித்த எதையும் காண முடியாது; எனவே, இதையே மறுபடியும் பிறத்தல் என்று அழைக்கப்படுகிறது. மாம்சத்தின்படி ஒருவிதத்தில் அன்பைக் கொண்டிருந்த அதே ஆத்துமா, மறுபடியும் பிறந்தவுடன் வேறு விதத்தில் நேசத்தைக் காட்டும்.

இரண்டாவது, பிறப்பினை ஒப்பிடுகையில், தாயின் கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது, ஒரு மனிதன் கல்லறையில் இருந்து எழும்புவதற்கு ஒப்பிடப்படுகிறது; மறுபடியும் பிறத்தல் என்பது பாவத்தின் கல்லறையிலிருந்து எழும்புவதற்கு ஒப்பாகும்; ‘தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பார்'. பாவத்தின் கல்லறையிலிருந்து எழும்புவது என்பது மறுபடியும் பிறப்பதாகும். (வெளிப்படுத்தல். 1:5); இது கிறிஸ்துவின் பிரதானமான எடுத்துக்காட்டாகும்: அவர் ‘மரித்தோரில் முதற்பிறந்தவர்’ ஆவார்; அவர் மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர் ஆவார், அதற்கு நம்முடைய மறுப்பிறப்பை ஒப்பிடுகிறோம்; அதாவது, நீங்கள் மேலானவைகளைத் தேடி மறுபடியும் பிறக்கும்போது, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் புதிய சிருஷ்டியாவதற்கும் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது; அவரின் பிறப்பு, இந்த இருண்ட உலகிலிருந்து மீட்டு, இந்த இருண்ட உலக ராஜ்யத்திலிருந்து அவரது அன்பின் குமாரனின் ராஜ்யத்துக்கு மாற்றப்பட்டு, நித்திய ஜீவனை அளிக்கிறது. இதுவே மறுபடியும் பிறத்தல் ஆகும். தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளிப்படுபவன் தாயின் உதவியால் வெளிப்படுவான்; அதேபோல, தேவ ஆவியினாலேயே ஒருவன் தேவனால் பிறக்கிறான். நான் புதிய சிருஷ்டியின் சில காரியங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. முதலாவது, ஒரு குழந்தை, நீங்கள் அறிந்ததுபோல், உலகத்தில் பிறந்த உடனேயே அழுகிறது; ஏனெனில் எந்த சத்தமும் இல்லையெனில், அது இறந்துவிட்டதாக கூறுவர். தேவனால் பிறந்த கிறிஸ்தவர்களாகிய நீங்கள், அழுவதில்லை என்றால், உங்களிடம் ஆவிக்குரிய ஜீவன் இல்லை நீங்கள் தேவனால் பிறந்தவர்கள் என்றால், நீங்கள் அழுகிறவர்களாக இருப்பீர்கள்.

அவர் உங்களை பாவத்தின் இருண்ட கிடங்கிலிருந்து எழுப்பிய உடனேயே, நீங்கள் தேவனை நோக்கி அழாமல் இருக்க முடியாது, ‘நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்பீர்கள். தேவன் சிறைச்சாலைக்காரனைத்  தொட்டவுடன், அவர் அழுக்குரலோடு 'ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான்  என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார். (அப்போஸ்தலர் 16:30) லண்டனில் எத்தனை ஜெபிக்காத விசுவாசிகள் உள்ளனர்.

அவர்கள் ஒருபோதும் ஜெபிப்பதில்லை! காபி கடைகள் உங்களை ஜெபிக்க விடாது, வணிகம் உங்களை ஜெபிக்க விடாது, முகக் கண்ணாடிகள் உங்களை ஜெபிக்க விடாது; ஆனால் நீங்கள் தேவனால் பிறந்திருந்தால், ஜெபிப்பீர்கள்.

2. குழந்தைகள் அழுவது இயல்பானாலும், பால் குடிக்க நிச்சயம் அழும்; பால் இல்லாமல் அவர்களால் ஜீவிக்க முடியாது அதனால் பேதுரு இதை புதியதாக பிறந்த குழந்தையோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார்: நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள் (1 பேதுரு 2:3) நீங்கள் தேவனால் பிறந்தவராக இருந்தால், தேவனுடைய ஞானப்பாலாகிய வசனத்தின் மேலுள்ள வாஞ்சையை வெளிப்படுத்துங்கள். நீங்கள் வாக்குத்தத்த பாலுக்காய் ஏங்குகிறீர்களா? ஒரு மனிதன் உலகில் இருக்கும் போது ஒரு விதமாக வாழ்கிறான், ஆனால் இயேசு கிறிஸ்துவுக்குள் வந்த பிறகு வேறுவிதமாக வாழ்கிறான் (ஏசாயா 66). அவர்கள் பாலைக் குடித்து திருப்தி அடைவார்கள்;

நீங்கள் மீண்டும் பிறந்தவராக இருந்தால், தேவனுடைய வார்த்தையின் பாலை உங்கள் ஆத்துமாக்களுக்குள் பெற்றுக்கொள்ளுகிற வரைக்கும் திருப்திப்படமாட்டீர்கள் (ஏசாயா 66:11). ‘அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாவார்கள்’. மாம்சத்திலுள்ள மனுஷனுக்கான வாக்குத்தத்தம் என்ன? விபச்சார விடுதி அவனுக்கு இனிமையாக இருக்கலாம்; ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்தவராக இருந்தால், நீங்கள் பாலாகிய  தேவ வார்த்தையின்றி ஜீவிக்க முடியாது. ஒரு ஸ்திரீயின் மார்பகம் குதிரைக்கு எதற்கு? ஆனால் அது ஒரு குழந்தைக்கு எப்படி இருக்கும்? அங்கே  இரவும் பகலும் அதற்கு ஆறுதல் உண்டு, ஒத்தாசையும் இரவும் பகலும் அங்குதான் உண்டு. அங்கிருந்து  பிரிய விரும்பாதவர்களாக இருப்பர்: மாம்சத்திற்குரிய மனுஷனுக்கு பரலோக காரியங்களைக் குறித்து சிந்திப்பது விருதாவாகும்; தேவ பிள்ளைக்கோ அங்கு ஆறுதல் உண்டு.

3. புதிதாக பிறந்த குழந்தைக்கு, தாயின் கருவில் கிடைத்த வெப்பத்திலும், அதனை இதமாக வைத்துக்கொள்ளக்கூடிய ஒன்றும் இல்லையென்றால், அது மரித்துபோகும்; அது ஒத்தாசைக்காய் ஏதேனும் ஒன்றினை பெற வேண்டும்: அதேபோல கிறிஸ்துவிற்கும் குழந்தைகளை போர்த்தும் ஆடைகள் ஆயத்தமாக்கப்பட்டிருந்தன; இதேபோல மறுபடியும் பிறந்தவர்களும், கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களைப் பெற்றால் தான் ஜீவிக்க முடியும்; பிற காரியங்களால் மாம்சத்திலுள்ளோர் தங்களை அனலாக்கிக் கொள்வர்; ஆனால் மறுபடியும் பிறந்தவர்களால் கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களின்றி ஜீவிக்க முடியாது. எசேக்கியேல் 16:10-ல் அவர் பரிதாபமான நிலையில் இருந்த குழந்தையை உடுத்துவித்தார்: "நான் உனக்கு சித்திரத்தையலாடையை உடுத்தினேன்". இதேபோல, பிள்ளைகளையுடைய பெண்கள் தங்கள் குழந்தைக்காக எத்தனை உத்தமமான பொருட்களைத் ஆயத்தப்படுத்துவர்! அதேபோல, மறுபடியும் பிறந்தவர்களை மூடுவதற்காக கிறிஸ்து எத்தனை உத்தமமான ஆடைகளை ஆயத்தப்படுத்தியுள்ளார்! உங்களை மூடுவதற்கு எத்தனை உத்தமமான பொன் வஸ்திரங்களை கிறிஸ்து ஆயத்தப்படுத்தியுள்ளார்! பெண்கள் தங்கள் குழந்தைகளை அழகாக உடுத்துவிப்பர், அதனால் அனைவரும் அவர்கள் நேர்த்தியாக இருப்பதைக் காண்பர்; அதேபோல எசேக்கியேல் 16:11,12-ல்:

'உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும்போட்டு, உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்' என கூறுகிறார். மேலும், 13 - ஆம் வசனத்தில் அவர்: "நீ ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய்" என கூறுகிறார்.  இது உலகத்திலுள்ள எந்தவொரு பொருளையும் குறிப்பிடவில்லை, மாறாக  கிறிஸ்துவின் நீதியையும் கிருபையின் ஆவியையும் குறிக்கிறது. கிறிஸ்துவின் பொன்னான நீதி இல்லாமல், புதிதாக பிறந்த குழந்தையால் ஜீவிக்க முடியாது.

4. ஒரு குழந்தை தன் தாயின் மடியில் இருக்கும் போது, தாய் தனது குழந்தைக்கு ஆறுதலாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவாள்; அதேபோல், தேவனின் பிள்ளைகளும் அவருடைய முழங்காலில் தாலாட்டப்படுவர் (ஏசாயா 66:11): "நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாவீர்கள்"; 13- ஆம் வசனம்: "ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்".  இந்த காரியங்களில் உள்ள ஒற்றுமையைக் கண்டு உணர்வது, மறுபடியும் பிறந்தவர்களையே தவிர வேறு யாருக்கும் முடியாது.

5. பொதுவாக, தகப்பன் பிள்ளை இடையே சில ஒற்றுமைகள் காணப்படும். பிள்ளை தகப்பனைப் போல இருக்கக்கூடும்; அதேபோல, மறுபடியும் பிறந்தவர்களிடம் சில புதிய ஒற்றுமைகள் காணப்படும் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சாயலில் காணப்படுவர் (கலாத்தியர் 4 -ம் அதிகாரத்தில் தேவனால் பிறந்த ஒவ்வொருவரும் பரத்தின் சில தன்மைகளைத் தம்மில் கொண்டிருப்பார்கள். பொதுவாக, மனுஷர் தங்களைப் போல உள்ள பிள்ளைகளை அதிகமாக நேசிப்பார்கள்; அதேபோல் தேவனும் தன் பிள்ளைகளை நேசிக்கிறார், அதனால் அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறார்கள்; ஆனால் மற்றவர்கள் அவருடைய சாயலற்றவர்களாக இருப்பதால், அவர்கள் சோதோமியர் என்று அழைக்கப்படுகிறார்கள். பிசாசின் பிள்ளைகளுடைய  சுபாவங்களை கிறிஸ்து எடுத்துக்காட்டுகிறார் சாத்தானின் பிள்ளைகள் அவனது கிரியைகளைச் செய்வர்; அனைத்து அநீதியான கிரியைகளும் பிசாசினுடைய கிரியைகள் தான்: நீங்கள் பூமிக்குரியவர்களாக இருந்தால், பூமிக்குரிய சாயலுடையவர்களாய் இருப்பீர்கள்; நீங்கள் பரத்திற்குரியவர்களாக இருந்தால், பரத்தின் சாயலுடையவர்களாய் இருப்பீர்கள்.

6. ஒருவருக்கு ஒரு பிள்ளை இருக்கும்போது, அவர் தன் விருப்பப்படி அவனை வளர்க்கிறார். அவர்கள் தங்கள் தகப்பனின் வீட்டில் உள்ள வழக்கங்களை கற்றுக் கொள்கிறார்கள்; அதேபோல், தேவனால் பிறந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய மெய்யான தேவாலயத்தின் வழக்கங்களை கற்றுக் கொள்கிறார்கள்; அங்கே அவர்கள், ‘என் பிதாவே’,  ‘என் தேவனே’ என்று அழைக்க கற்றுக்கொள்கிறார்கள்; அவர்கள் தேவனுடைய வீட்டில் வளர்க்கப்படுகிறார்கள், இந்த உலகத்தில் தங்கள்  ஜீவியத்தை  சீர்ப்படுத்த தேவனுடைய வீட்டின் வழிமுறையையும், நடைமுறையையும் கற்றுக் கொள்கிறார்கள்.

7. தங்கள் தேவைகளுக்காக தகப்பனை பிள்ளைகள் நம்பியிருப்பது இயல்பாகும்; அவர்களுக்கு ஒரு ஜோடி காலணி வேண்டுமெனில், அவரிடம் போய் கேட்பார்கள்; அவர்களுக்கு அப்பம் வேண்டுமென்றாலும், அவரிடம் கேட்பார்கள்; அதேபோல தேவ பிள்ளைகள் செய்ய வேண்டும். உங்களுக்கு ஆவிக்குரிய அப்பம் வேண்டுமா? அதை தேவனிடம் கேளுங்கள். உங்களுக்கு கிருபையின் பலம் வேண்டுமா? தேவனிடம் கேளுங்கள். பிசாசுடைய சோதனைகளை எதிர்க்கத்தக்க பெலன் வேண்டுமா? தேவனிடம் கேளுங்கள். பிசாசு உங்களை சோதிக்கையில், வீட்டிற்கு சென்று பரம பிதாவிடம் சொல்லுங்கள் உங்கள் வேதனைகளை அவரிடம் ஊற்றிவிடுங்கள்; யார் தங்களை தவறாக நடத்தினாலும் போய் தகப்பனிடம் கூறுவது பிள்ளைகளின் இயல்பாகும்; அதேபோல, தேவனில் பிறந்தவர்களும் சோதனைகளை சந்திக்கையில், போய் தேவனிடம் சொல்ல வேண்டும். 

விண்ணப்பம்...

நீங்கள் தேவனால் பிறந்தவர்களா இல்லையா என்பதை, சுபாவ பிள்ளைகளையும் கிருபையின் பிள்ளைகளையும் குறித்து நான் முன்பு சொன்ன காரியங்களை கொண்டு உங்களை ஆராயுங்கள். நீங்கள் இந்த உலகின் இருண்ட கிடங்கிலிருந்து கிறிஸ்துவின் வெளிச்சத்திற்குள் வந்துவிட்டீர்களா? நீங்கள், ‘என் பிதாவே’ என்று அழைக்கக் கற்றுக்கொண்டீர்களா? (எரேமியா 3:4). 'நீ இது முதல் என்னை நோக்கி: என் பிதாவே, என்று சொல்லுவாய்'. தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் அழ அறிந்திருப்பவர்கள் தேவனுடைய வார்த்தையாகிய ஞானப்பாலால் வயிற்றை நிரப்பாமல அமைதியாக இருக்க முடியுமா? தேவனுடன் சமாதானம் இல்லாமல் திருப்தியாக இருக்க முடியுமா? ஜெபியுங்கள், உங்களைப் பற்றிய இந்த காரியத்தில் கவனமாக இருங்கள்; இந்த அடையாளங்கள் உங்களிடம்  இல்லையெனில், நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தை தவறவிடுவீர்கள். அதில் உங்களுக்கு ஆர்வம் இருக்காது. 'அங்கே' அத்துமீறி பிரவேசிக்க முடியாது. அவர்கள் ‘கர்த்தாவே, கர்த்தாவே, எங்களுக்கு திறக்க வேண்டும்’ என்று சொல்லுவார்கள்; ஆனால் அவர், ‘நான் உங்களை அறியேன்’ என்று சொல்லுவார். தேவனுடைய பிள்ளையல்லையெனில், பரலோகத்தில் சுதந்திரம் கிடைக்காது. நாம் எப்போதாவது நமது பிள்ளைகள் அல்லாதவர்களுக்கு சிலவற்றைக் கொடுப்போம், ஆனால் நமது நிலங்களை அவர்களுக்குக் கொடுக்கமாட்டோம். நீங்கள் பிள்ளைகளாக ஜீவக்கவில்லையெனில், தேவனுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து அவர்கள் சுதந்தரத்தைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டாம்.

ராஜாவின் மகன் ஒரு பிச்சைக்காரருடன் விளையாடுவது பொருத்தமற்றது; அதைப் போலவே, நீங்கள் ராஜாவின் பிள்ளைகளாக இருந்தால், ராஜாவின் பிள்ளைகளாக ஜீவியுங்கள். நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டானால், பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்; நீங்கள் ஒன்றாக கூடும்போது, உங்கள் பிதா உங்களுக்கு அருளிய வாக்குத்தத்தத்தைப் பற்றி பேசுங்கள்; நீங்கள் உங்கள் பிதாவின் சித்தத்தை நேசித்து, இந்த உலகில் நீங்கள் சந்திக்கும் சோதனைகளில் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருந்தால், அன்போடு ஒன்றாக ஜீவியுங்கள்; உலகம் உங்களை எதிர்க்கையில் கவலைப்படாதிருங்கள்; ஆனால் நீங்கள் ஒருவரோடொருவர் எதிர்த்து போராடுவது நல்லதல்ல; இவைகள் நம்மிடம் காணப்பட்டால், அது கலப்பினத்திற்கு அடையாளம் ஆகும். இது தேவனுடைய வார்த்தையில் உள்ள பிரமாணங்களுக்கு ஒத்ததாக இருக்காது. தேவ சாயலை தன் ஆத்துமாவில் கொண்ட ஒருவரை நீங்கள் கண்டதுண்டா? அப்படிப்பட்டவரை நேசித்து: இந்த மனுஷனும் நானும் ஒருநாள் பரலோகத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்; ஒருவருக்கொருவர் ஊழியம் செய்யுங்கள்; ஒருவருக்கொருவர் நன்மை செய்யுங்கள்; யாராவது உங்களை துன்பப்படுத்தினால், அவர்களுக்காக தேவனிடம் ஜெபியுங்கள், அவர்களை மன்னித்து, சகோதரத்துவத்தோடு நேசியுங்கள்.

கடைசியாக, நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றால், இந்த பாடத்தை கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளாக இருந்து, உங்கள் முந்தைய நடத்தையின்படி உங்கள் நடத்தையை மாற்றாமல் இருங்கள்; ஆனால் எல்லா விதமான நடத்தையிலும் பரிசுத்தமாக இருங்கள். ஒருநாள் சமாதானமாக உங்கள் பிதாவின் முகத்தை தரிசிக்க, பரிசுத்தமான தேவன் உங்கள் பிதா என்பதை நினைவுகூர்ந்து, தேவனுடைய பிள்ளைகளாக ஜீவியுங்கள்.

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.