கட்டுரைகள்
ஆசிரியர்: A.W. பிங்க்
தமிழாக்கம்: பி. ரஜினி

என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமூகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். சங் 42:5

சங்கீதக்காரன் இந்த வார்த்தைகளை சொல்லும்போது அவனுடைய ஆத்துமா மிகவும் நசுக்கப்பட்டு பாரத்துடன் இருந்தது. தாவீதின் வாழ்வில் பல ஏமாற்றங்களையும், சோதனைகளையும் நாம் பார்க்கிறோம். மலைமேல் கழுகு துரத்துவதுப்போல் சவுல் துரத்தியது, தனது தோழன் அகித்தோப்பேலின் துரோகம், அப்சலோமின் சதி மற்றும் தாவீதின் கடந்த கால பாவங்களின் நினைவுகள் அனைத்தும் பலவான்களையும்  பலவீனப்படுத்தக்கூடிய துன்பங்கள். தாவீதும் நம்மை போன்ற குணமுடையவர் தானே! தாவீது எப்பொழுதும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்ததில்லை. பலமுறை ஆழ்ந்த சோகத்திலும், மனச்சோர்வும் அவருக்கு நீண்டகாலமாக இருந்தது.

ஆனாலும் தாவீது அவருடைய வாழ்வில் சோர்வுக்கு இடமளிக்கவில்லை; அவர் துக்கங்களுக்கு அடிபணியவுமில்லை. தாவீது தரையில் விழுந்த வயதான மாட்டைப் போல ஆதரவற்றவராக இருக்கவில்லை. அவர் புத்திசாலித்தனமான மனிதனைப் போல நடந்து கொண்டார், மேலும் அவர் தனக்கு நேரிட்ட துன்பங்களை எதிர்க்கொள்ள போராடத் தொடங்கினார். தாவீது விழிப்புடன் சுயபரிசோதனை செய்து, அவரது மனச்சோர்வுக்கு தொடக்க காரணத்தைக் அறிய முயன்றார்.

"என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? என்று அவரையே கேட்டுக்கொண்டார். அவருடைய மனச்சோர்வுக்கான காரணத்தை அறிய முற்ப்பட்டார். மனச்சோர்விலிருந்து மீள்வதற்கான முதல் படி இதுவே ஆகும். கவலைப்படுவதும், வருத்தப்படுவதும் மற்றும் குறைகூறுவதாலும் தீர்வு காண முடியாது. பாரத்தோடு வெறுமையாய் இருப்பதால் ஆவிக்குரிய ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ‌ எந்த பயன்னுமில்லை! ஒருவன் தன்னை தானே கேள்வி கேட்டு, சுயபரிசோதனை செய்து, அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

"என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? நம்மை நாமே கண்டிப்பது அவசியம், சில நிகழ்வுகளை தைரியமாக எதிர்கொள்வதும் அவசியம். மனச்சோர்வுக்கு இடமளிப்பதினால் என்ன பலன்? அவ்வாறு இருப்பதினால் ஒரு பயனுமில்லை! துக்கமுகத்தொடு உட்கார்ந்திருப்பதும், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பதும் வருத்தத்துடன் அழுவதும் நிலைமையை மேம்படுத்தாது. (எபேசியர் 5:16) எனவே மனச்சோர்வடைந்த ஒவ்வொருவரும் தனது மனச்சோர்வு மற்றும் அதிருப்திக்கான காரணத்தைப் பற்றி அவர்களுடைய வாழ்க்கையில் கேள்வி எழுப்புவது முக்கியம்.

“பாவத்தை குறித்து வருந்துவதற்கும், நம்மை கெடுக்கும் அசுத்தங்களுக்கு எதிராக பாரத்தோடு ஜெபிப்பதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், வெளிப்புற துன்பங்கள் காரணமாக இருந்தாலும், உள்ளான சோதனைகள் காரணமாக இருந்தாலும், மனச்சோர்வு என்பது நம்மை அவிசுவாசம் மற்றும் கீழ்படியாமையிலிருந்தே உண்டாகிறது. எனவே அதற்கு எதிராக நாம் போராடி ஜெபிக்க வேண்டும் - தாமஸ் ஸ்காட்.

"என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? மற்றவர்களிடம் கலந்தாலோசிக்காமல் இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க முடியாதா? உங்கள் பிரச்சனைகளின் மூலத்தை நீங்களே அறிந்திருக்கிறீர்கள் அல்லது குறைந்தபட்சம் சந்தேகிக்கிறீர்கள் என்பது உண்மையல்லவா? உங்கள் அறியாமைக்கு காரணம் நீங்களே ஏற்படுத்திக்கொண்ட வலிமிகுந்த சூழ்நிலைகளா? "கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். சங் 119:75 என்று சங்கீதக்காரனுடன் ஒப்புக்கொள், ஏதேனும் பாவத்தில் விழுந்து, எந்த விஷயத்திலும் உங்கள் சுய விருப்பத்தைப் பின்பற்றி, அல்லது எந்த விதத்திலும் உன்னுடைய மாம்ச இச்சைகளின்படி விதைத்து, இப்போது உங்கள் மாம்சத்திலிருந்து அழிவை அறுவடை செய்கிறீர்களா? ஆனால் அதை தேவனிடம் ஒப்புக்கொண்டு, "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி 28:13) என்ற வாக்குறுதியை நிறைவேற்றும்படி தேவனிடம் வேண்டிக்கொள். அல்லது மற்றவர்களைப் போல நீங்களும் வாழ்வடைய வேண்டும் என்பதற்காக தேவனின் ஏற்பாடு உங்களை விட்டுவைக்காதது உங்கள் மனச்சோர்வுக்குக் காரணமா? ஆனால் சங்கீதம் 37:1-ல் உள்ள எச்சரிப்பை நினைவுக்கொள். "பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.

மேலே குறிப்பிட்டுள்ள சூழ்நிலைகள் சிலருக்குப் பொருந்தாது. சிலர், 'நான் பண தேவையில் இருக்கிறேன்; உதவியின்மையே என் கண் முன்னே உள்ளது; ஆகையால், என் ஆத்துமா பலவீனமானது; என் இருதயம் பாரமாக இருக்கிறது, இது ஒரு பாரமான சோதனையே; இவை ஏற்படுத்தும் மனச்சோர்வுக்கு ஆளாவது இயல்பு தான். ஆனால் அன்பு நண்பரே! இதுப்போன்ற சூழ்நிலையில் கூட மனச்சோர்வுக்கு சிகிச்சை இல்லாமல் இல்லை. சங் 50:10 "ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்" என்று சொன்னவர் இன்று உயிரோடே சர்வாதிகாரியாக ஆளுகிறார். சுமார் 20 லட்சம் இஸ்ரவேல் மக்களை 40 வருடங்கள் வனாந்திரத்தில் பராமரித்தவர் இன்று உன்னையும், உன் குடும்பத்தையும் பராமரிக்கமாட்டாரா? பஞ்ச காலத்தில் எலியாவுக்கு உணவளித்த அவரால், உன் பசிக்கு உணவளிக்க முடியாதா? "அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” மத் 6:30.

இந்த தலைப்பை மீண்டும் கவனித்தால், தாவீது மனச்சோர்வுக்கு அடிபணியாமலும், தன் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி, தன்னுடைய அவிசுவாசத்தை கண்டித்து தனக்குத்தானே அறிவுரை கூறிக்கொண்டிருப்பதைக் காணலாம். "கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருங்கள்." இதுவே மனச்சோர்வடைந்தவர்களுக்கு உண்மையான நிவாரணம். தற்போதைய சூழ்நிலை இருளானதாகத் தோன்றலாம், ஆனால் தேவனின் வாக்குறுதிகள் வெளிச்சத்தைக் கொண்டுவருபவை. உனக்கு உதவ இந்த படைப்பு தவறியிருக்கலாம். ஆனால் படைப்பாளர் என்றுமே தவறுவதில்லை, ஆனால் உங்கள் விசுவாசம் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும். முழு உலகமும் விரக்தியில் இருந்தாலும் கூட, கிறிஸ்தவன் விரக்தியடைவதில்லை. நம்முடைய தேவன் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர் (சங் 46:1). தேவனை தங்கள் அடைக்கலமாய் கொண்டவர்கள் என்றும் கைவிடப்படுவதில்லை. இந்த எழுத்தாளரின் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் வாழ்வில் இந்த அனுபவம் உண்டு. எதார்த்தம் என்னவெனில், நமது இக்கட்டான சூழ்நிலைகள் அனைத்தும் தேவனின் கிருபையை அறிவதற்கு மாபெரும் வாய்ப்புகளாகும். நம்முடைய தேவைகளெல்லாம் கிடைக்கும் போது விசுவாசம் தேவைப்படாதல்லவா!

கர்த்தருக்கு காத்திரு:"அவருடைய கருணைக்கு காத்திரு" நீ பாவம் செய்திருக்கலாம். உன் பாவம் மோசமானதாக இருக்கலாம். அதன் விளைவுகளை நீ இப்போது அனுபவிக்கலாம், ஆனாலும் நீ மனந்திரும்பி உன் பாவங்களை தேவனிடத்தில் ஒப்புக்கொண்டால், அவர் உன் பாவங்களைத் துடைக்கும் கருணையாளர்.

அவருடைய வல்லமைக்கு காத்திரு: அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருக்கலாம். உதவி வருவதற்கு எல்லா வகையிலும் தடைகள் இருக்கலாம். ஆனாலும் சர்வ வல்லமையுள்ள  தேவனால் முடியாதது எதுவுமில்லை.

அவர்மீது விசுவாசித்து காத்திரு: மனிதர்கள் உன்னை ஏமாற்றியிருக்கலாம். அல்லது வாக்குறுதிகளில் தவறியிருக்கலாம். தேவைப்படும் நேரத்தில் உன்னைத் கைவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனாலும் பொய்யுரையாத தேவனிடம் திரும்புங்கள். அவருடைய வாக்குறுதிகளை சந்தேகப்பட வேண்டாம்.

அவருடைய அன்பிற்கு காத்திரு: "...இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். யோவா 13:1. "தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்" சங் 42:5. இதுவே தேவனை விசுவாசிப்பவர்ளுக்கு எப்போதும் இருக்கும் ஆசீர்வாதமான உறுதி. “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்." (சங் 34:19) என்பதை அவர்கள் அறிவார்கள். "சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்." (சங் 30:5) என்று தேவன் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார், எனவே கிறிஸ்துவுக்குள் சகோதரனே, நெருப்புச் சூளை தனது வேலையை முடித்து, உன் கட்டுகளை எரித்தவுடன், நீ இப்போது செய்யும் பணிக்காக நீ அவரை துதிப்பாய். எனவே, காத்திருப்போடு வருகிற வாழ்க்கையை எதிர்நோக்கியிரு தேவன் மீது நம்பிக்கையாயிரு  அவர் எப்போதும் கைவிடுவதில்லை.

ஓ கிறிஸ்துவ வாசகரே, நீ தற்போது ஆழமான தண்ணீரின் மீது நடக்கவில்லை என்றாலும், தேவனுடைய மக்கள் அனுபவிக்கும் "தற்போதைய பிரச்சனைகளில்" அவர்களுடைய ஆவிக்குரிய நன்மைக்காகவும், அவர்களின் தற்காலிகத் தேவைகளுக்கு இரக்கம் காட்டவும், தேவனுடைய கிருபைக்காக உற்சாகத்துடன் மன்றாடுவொம்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.