ஆசிரியர்: சாம் ராமலிங்கம்
எபே.6:10 “ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங் களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு”.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் அல்லது ஒரு யுத்தம் போன்றது. ஆனால் அது மாம்சத்தோடும் (Self), இரத்தத்தோடும் (Blood Relatives) செய்யும் யுத்தமல்ல. அது துரைத்தனங்கள் (Principalities/Rulers of the Nation) அதிகாரங்கள் (Powers/Officers) இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகள் (Rulers of The Darkness of this World) வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள் (Spiritual Wickedness in High Places) ஆகியவைகளோடு நாம் செய்ய வேண்டிய ஒரு யுத்தம் என்று பவுல் சொல்கிறார்.சாத்தான் தனியாக இல்லை - அவனோடு திரளான சேனைகள் உள்ளன. சாத்தானக்கு எதிரான இந்தப் போரில் நாம் ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பமும் திட்டமுமாயிருக்கிறது. இயேசு கிறிஸ்து சாத்தானோடும் அவனுடைய தூதர்களோடும் யுத்தம் செய்து வெற்றி பெற்றவராய் நமக்கு மாதிரியை வைத்துச் சென்றுள்ளளார். யுத்தகளத்தில் உள்ள நாம் அனைவரும் பலவீனர்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே எபே.6:14ல் நாம் வல்லமையாய்ப் பலப்பட்டு, சத்துருவை எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவம் திரானியுள்ளளவர்களாகவும்படிக்கு தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்ள வேண்டும் என்று பவுல் ஆலோசனை சொல்கிறார்.
சர்வாயுத வர்க்கம் என்றால் என்ன? (எபே.6:11)
தேவனுடைய சர்வாயுத வர்க்கம் என்பது ஓர் ஆவிக்குரிய ஆயுதம் ஆகும். இந்த சர்வாயுத வர்க்கம் என்ற ஆயுதம் நம்மை நமது ஆவிக்குரிய சத்துருவாகிய சாத்தானிடமிருந்து பாதுகாக்கும். பொதுவாக யுத்த களத்தில் இருக்கும்படி அழைக்கப்பட்டுள்ள நாம் சில அடிப்படையான விஷயங்களை அறிந்துகொள்ளுதல் அவசியம்.முதலாவதாக நமது எதிராளி யார் என்ற அறிவு தேவை. இரண்டாவது, அவனது பலம் மற்றும் பலவீனம் குறித்த அறிவு தேவை. மூன்றாவது, அவன் கையில் உள்ள யுத்த ஆயுதங்களைக் குறித்த அறிவு தேவை. நான்காவது, நம்மை பாதுகாக்கும் சர்வாயுதங்களை குறித்த அறிவு தேவை. அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 6:14-17 வரையிலுள்ள வசனங்களில் தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தின் ஆறு பாகங்களை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இன்னொரு வகையில் சொல்லப்போனால் இந்த சர்வாயுதவர்க்கம் என்னும் ஆயுதத்திற்கு ஆறு பாகங்கள் உண்டு.
சத்தியம் என்னும் அரைக்கச்சை (வச.14)
சாத்தான் பொய்யனும் பொய்க்கு பிதாவுமாய் இருக்கிறான் (யோ. 8:44). அவனது பொய்யான காரியங்கள் நமக்கு உண்மையானவைகள் போலத் தோன்றுகின்றன. பிசாசானவன் ஆதிமுதல் பொய்சொல்லுகிறவனாய் இருக்கிறான். பிசாசின் பொய்யான காரியங்களை மேற்கொள்ள தேவனுடைய சத்தியம் மாத்திரமே நமக்கு உதவ முடியும். உண்மைக்கும் (Fact) சத்தியத்திற்கும் (Truth) வித்யாசமுண்டு. உண்மை மாறக்கூடியது. சத்தியம் மாறாது. நான் வியாதியாயிருக்கிறேன் என்பது உண்மை…. யெகோவா இராஃப்பா என் பரிகாரி என்பது சத்தியம். தேவனுடைய சத்தியம் ஒன்றே சாத்தானை தோற்கடிக்க முடியும் (யோவா.8:32). தேவனுடைய சத்தியம் என்பது அவருடைய வார்த்தையே (யோவா.17:17).
நீதி என்னும் மார்க்கவசம் (வச.14)
பிசாசானவன் அநேக வேளைகளில் நம் இதயத்தை பாதிக்கும் வகையில் தாக்குதலை மேற்கொள்கிறான். இதினிமித்தம் உணர்வுப் பூர்வமாக கோபம், கவலை, சோர்வு, அதைரியம், தாழ்வு மனப்பான்மைகள் ஏற்படுகின்றன. இது போன்ற வேளைகளில் நீதியென்னும் மார்க்கவசமானது நம் இதயத்தை காக்கிறது. தேவன் விசுவாசிகளை கிறிஸ்துவுக்குள் நீதிமான்கள் என்று அறிவித்துள்ளார் (ரோம.5:1). எனவே நாம் தேவனுடைய நீதியென்னும் மார்க்கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் பிசாசானவன் நம்மை அநீதியுள்ளளவர்கள் என குற்றம் சாட்டும் நிலை ஏற்படும் (சகரி.3:1-5). தேவனுடைய நீதியை அணிந்து கொள்ளாமல் நாம் தேவனுக்கு முன்பாக நிற்கவே முடியாது. நம்முடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தையைப் போல இருக்கிறது (ஏசா.64:6). நானே உங்களை பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் (யாத்.31:13 - யெகோவா மக்காதேஷ்) என்று ஆண்டவர் சொல்கிறார். எனவே நாம் தேவனுடைய நீதி என்னும் மார்க்கவசத்தை அணிந்து கொண்டு நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை (வச.15)
கிறிஸ்துவின் சுவிசேஷமானது சமாதானத்தையும், இரட்சிப்பபையும், கொடுப்பதற்கேற்ற தேவபெலனாக உள்ளளது. ஓவ்வொருவரும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதை தேவன் கட்டளையாக கூறியுள்ளார் (1 கொரி.9:16, 2 இராஜா.7:9). ஆனால் பிசாசானவன் நற்செய்தியை அறிவித்தல் பணியை தடை செய்கிறவனாகவும், அது ஒரு பிரயோஜனமற்ற செயல் என்ற கருத்தையும் பரப்புகிறவனாக இருக்கிறான். இதனை மேற்கொள்ள நாம்; ‘ஆயத்தம்’ என்னும் பாதரட்சையை கால்களில் அணிந்து கொள்ள வேண்டும். நாம் அணியும் இந்த ‘ஆயத்தம்’ என்னும் பாதரட்சை நமது கால்களை காக்கக்கூடியதாகவும், நாம் இடறி விழாதபடி நம்மைக் காக்கும் ஆயுதமாகவும் உள்ளது.
விசுவாசம் என்னும் கேடகம் (வச.16)
பவுலின் காலத்தில், ஒரு போர்வீரனுடைய கேடகம், நான்கரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டதாயிருந்ததென்று சொல்கிறார்கள். அது அவனுடைய முழு சரீரத்தையும் பாதுகாப்பதற்குப் போதுமானதாய் இருந்தது. அது போலவே, விசுவாசம் என்னும் கேடகமானது நம்மை நோக்கி பிசாசு எய்யும் அக்கினியாஸ்திரங்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. சாத்தானின் அக்கினியாஸ்திரங்கள் பயம், சந்தேகம், சோர்வு, குழப்பம் மற்றும் அவிசுவாசம் போன்றவைகளாகும். இவைகளிலிருந்து நம்மை கர்த்துக் கொள்ள விசுவாசமென்னும் கேடகத்தை கையில் பிடித்துக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இரட்சனியமெனனும் தலைச்சீரா (வச.17)
“தலைக்கவசம் அது உயிர்க்கவசம்”. ஒரு போர்வீரனின் தலைக்கவசம், எதிரி அவனைக் கொல்ல முடியாதபடி அவன் தலையைக் காக்கும். அது போலவே, இரட்சிப்பு என்னும் தலைக்கவசம் நாம் சாத்தானால் கொல்லப்படாதபடி நம்மை பாதுகாக்கும். இந்த தலைக்கவசம் நமது இரட்சிப்புக்கும், நித்திய ஜீவனுக்கும் உத்திரவாதமாகும். நாம் தலைச்சீராவை அணிந்திருக்கும் போது, சாத்தான் நமது நித்திய ஜீவனை அழித்துப் போடமுடியாது (சகரி.3:5). எனவே இரட்சன்யமென்னும் தலைச்சீராவை அணிந்து கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம் (வச.17)
தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தின் ஆறாவது பாகம், ஆவியின் பட்டயம் ஆகும் - அதாவது தேவனுடைய வார்த்தையாகும். சர்வாயுதவர்க்கத்தின் முதல் ஐந்து பாகங்களும் தற்காப்புக்கான (Defensive weapons) ஆகும். ஆனால் ஆவியின் பட்டயமாகிய தேவனுடைய வார்த்தை மாத்திரமே தாக்குதலின் ஆயுதமாகும் (Offensive weapon). ஆவியின் பட்டயம் இன்றி சாத்தானை தாக்க முடியாது. இயேசு தன்னை சோதித்த பிசாசை தேவனுடைய வார்த்தையினால் தான் ஜெயித்தார். எனவே சாத்தானுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டயத்தை பயன்படுத்துவது மிக அவசியமாகும். ஆவிக்குரிய யுத்தம் செய்யும் வேளையில் தேவனுடைய வசனத்தின் மீது உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாய் நாம் வசனத்தைக் கையாள வேண்டும்.
எனவே கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு யுத்தம் ஆகும். அது கத்தியின்றி இரத்தமின்றி செய்யப்படும் ஒரு யுத்தம். இந்தப் போராட்டங்களில் வெற்றி பெற வேண்டுமெனில், நம்மைக் காத்துக்கொள்ளும் ஆயுதங்களான சத்தியம் என்னும் அரைக்கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசவாசமென்னும் கேடகம், இரட்சன்னயம் என்னும் தலைச்சீராவையும்; தாக்கும் ஆயுதமான தேவவசனம் என்னும் ஆவியின் பட்டையத்தையும் எடுத்துக் கொண்டு துரைத்தனங்களோடு, அதிகாரங்களோடு, இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடு, வானமண்டலங் களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்கிருக்கும் போராட்டத்திலே ஜெயம் பெற ஆண்டவர் உதவிசெய்வாராக!