தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து அவருடைய வழிகளில் நடந்து, அவருடைய ஊழியங்களை நிறைவேற்றும் ஒரு தம்பதி தங்கள் உள்ளத்தில் ஒரு பெரிய ஏக்கத்தோடும், பாரத்தோடும் காணப்பட்டார்கள். அவர்களுக்கு திருமணமாகி அநேக ஆண்டுகளாகி யிருந்தாலும் அவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கவில்லை. பிள்ளைகள் இல்லை என்கிற ஏக்கம் அவர்களை ஆட்க்கொண்டிருந்தது. அவர்கள் துக்கப்படுவதற்கு ஒரு காரணம் மற்றவர்களுடைய வசையான பேச்சு, அது என்னவென்றால் அவர்களுடைய பாவத்தினாலோ அல்லது அவர்களுடைய பெற்றோரின் பாவத்தினாலோ அவர்கள்மேல் சாபம் இருக்கிறது. ஆகையினால் அவர்களுக்குப் பிள்ளைகளில்லை என்று சிலர் கூறினார்கள். பிள்ளையில்லாமைக்குக் காரணம் கணவன்தானென்றும் சிலர் மனைவிதானென்று கூறுகிறவர்களும் உண்டு. நம்முடைய சமுதாயத்தில் நாம் காணும் குறை இது.
பிள்ளையில்லாத நிலையைப்பற்றி திருமறை என்ன கூறுகிறதென்று நாம் அறிந்துக் கொள்ளவேண்டும். நம் சமுதாயத்தில் சொல்லப்படும் காரியங்களையும்,பண்பாடு சொல்லும் காரியங்களையும் பற்றிக்கொண்டு, அவைகளை நம்புவதால் அது நம்முடைய குடும்ப வாழ்வைப் பாதிப்பதற்கு நாம் இடங்கொடுத்துவிடுகிறோம். இப்படித் தங்கள் சொந்த பிள்ளைகளைத் துக்கத்துள்ளாக்கும் பெற்றோர் அநேகர் உண்டு. அப்படியே தங்கள் மனைவிகளைத் குறை அவளிடத்தில்தான் என்று கூறி துக்கத்துள்ளாக்கும் கணவன்மார்கள் உண்டு. கணவன்மாரைத் துக்கத்துள்ளாக்கும் மனைவிகளுமுண்டு. பிள்ளையில்லாமைக்கு தாங்கள்தான் காரணமென்று கணவனும்-மனைவியும் ஒருவரையொருவர் குறை சொல்லிப்பயனில்லை.
குழந்தைகள் தேவனால் வரும் ஆசீர்வாதம் என்று திருமறை போதிக்கிறது. உபா 28:11ல் 'உனக்கு கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாகளுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும்,உனக்கு பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்' என்று பார்க்கிறோம். 'பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்,கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்' என்று சங்கீதம் 127:4ல் கூறுகிறது. தேவன் தம் சித்தப்படி தம்முடைய ஈவாகப் பிள்ளைகளைத் தருகிறார் என்று இந்த வசனங்களிலிருந்து தெளிவாகிறது. ஆனால் பிள்ளையில்லாத நிலை எல்லா சூழ்நிலைகளிலும் சாபமென்று வேதம் போதிக்கவில்லை. தேவனுக்குப் பிரியமாய் நடக்கிறவர்களுக்கும் கூட பிள்ளைகள் இல்லாமல் இருப்பதை நாம் வேதத்தில் பார்க்கிறோம்.
உபா 28:18ல் 'உன் கர்ப்பத்தின் கனியும்,உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்' என்று கடவுள் கூறுகிறார். இந்த அதிகாரத்தில் ஆசீர்வாதத்தின் வழியைப்பற்றியும், சாபத்தின் வழியைப்பற்றியும் தேவன் தம் மக்களுக்குப் போதிக்கிறார். இந்த வசனத்தில் சாபத்தின் வழியில் கர்ப்பத்தின் வழி சபிக்கப்பட்டிருக்கும் என்று கூறுகிறார். கனியில்லாமல் இருக்கும் என்று கூறவில்லை. ஆகையால் பாவம் செய்கிறவர்களுக்கும் பிள்ளைகள் பிறக்கலாம். பிள்ளைகள் பிறப்பதினால் அவர்கள் தேவனைப் பிரியப்படுத்தி, அவரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்களென்று சொல்லமுடியாது. உப 28:32ல் 'உன் குமாரரும்,உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்: அவர்களைக்காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போம்: உன் கையில் பெலனில்லாதிருக்கும்' என்று கூறுகிறார். பிள்ளைகள் பிறந்தாலும் அவர்கள் சபிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் அந்நிய ஜனங்களிடம் ஒப்புக்கொடுக்கப் படுவார்கள் என்று இதிலிருந்து அறிந்துக்கொள்ளுகிறோம். இது சாபத்தின் வழி. இன்னும் உபா 28:41ல் 'நீ குமாரனையும், குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடகூட இரார்கள்: அவர்கள் சிறைப்பட்டுப் போவார்கள்' என்று கூறியிருக்கிறது. சாபத்தின் பாதையில் கணவனும்-மனைவியும் பிள்ளைகள் இல்லாமலிருப்பார்களென்று தேவன்கூறவில்லை. பிள்ளைகள் பிறந்தாலும் அந்த பிள்ளைகள் பெற்றோருக்கு மகிழ்ச்சியைத் தரமாட்டார்கள். அவர்களோடு வாழமாட்டார்கள், சாபத்துக்குள்ளாகிவிடுவார்கள் என்றுதான் தம் வசனத்தில் கூறுகிறார்.
நம் சொந்தப் பிள்ளைகள் திருமணமாகி, குழந்தை இல்லாமல் இருப்பார்களானால் அவர்களிடத்தில் அன்போடும்,கரிசனையோடும் நடந்துக்கொள்ளவேண்டும். வசைச்சொல் எதுவும் சொல்லக்கூடாது. பிள்ளைகள் இல்லாத தம்பதிகளைக் காணும்போது அவர்களிடத்தில் கரிசனையோடு பழகவேண்டும். பிள்ளையில்லையே என்கிற ஏக்கத்தோடு உள்ளத்தில் புண்பட்டிருக்கிறவர்களை ஆறுதல் படுத்த வேண்டுமேஒழிய அவர்கள் புண்படும்படி பேசக்கூடாது. அவர்களை நியாந்தீர்த்து அவர்களுடைய சாபத்தினால் தான் பிள்ளையில்லை என்று கூறிவிடக்கூடாது. ஓசி 9:12ல் 'அவர்கள் தங்கள்; பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்' நான் அவர்களை விட்டுபோகையில் அவர்களுக்கு ஐயோ? என்று கடவுள் கூறுகிறார். தேவனுக்குத் துரோகம் பண்ணி, அவரை விட்டுப் பின்வாங்கிப்போன, தம்முடைய மக்களுக்கு அவர் கூறும் சொற்கள் இவை. அவர்களுடைய பிள்ளைகள் சபிக்கப்பட்டிருப்பார்கள் அல்லது அவர்கள் பிள்ளைகளற்றவர்களைப்போலிருப்பார்கள். இந்த வசனங்களிலிருந்து பிள்ளையில்லாத நிலை சாபத்தின் விளைவு என்று நாம் முடிவு கட்டவிட முடியாது. தீமை செய்கிறவர்களுக்கும், தெய்வ பயமற்றவர்களாய் வாழுகிறவர்களுக்கும் குழந்தை இருப்பார்கள். ஆனால், அந்த குழந்தைகள் ஆசீர்வாதமாய் இருக்கமாட்டார்கள். அப்படி அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தாலும் அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கமாட்டார்கள்.
சில வேளைகளில் கடவுளுடைய நியாயத்தீர்ப்பினால் கர்ப்பங்கள் அடைக்கப்படலாம். ஆதி 20:17,18ல் 'ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின் நிமித்தம் கர்த்தர் அபிமெலெக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால், ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்'. அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும் அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளை பெறும்படி அநுக்கிரகம் பண்ணினார் என்று வாசிக்கிறோம். அபிமெலேலுக்கு செய்த தவறான செயலுக்காகக் கர்த்தர் அவனுடைய குடும்ப மக்களின் கர்;ப்பங்களை அடைத்தார். ஆனால் பிள்ளையில்லாத நிலையிலுள்ள எல்லாத் தம்பதிகளுடைய வாழ்க்கையிலும் இப்படித்தான் என்று நாம் ஒரு முடிவு கட்டிவிடமுடியாது.
சாராளுக்கு ஈசாக்கு பிறந்தது ஒரு அற்புதம். ஆதி 18:11,12ல் 'ஆபிரகாமும்-சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள். ஸ்தீரிகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. ஆகையால்,சாராள் தன் உள்ளத்திலே நகைத்து நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்' என்று எழுதியிருக்கிறது. பிறகு 14வது வசனத்தில் 'கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?உற்பவ காலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்: அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்' என்று கர்த்தர் கூறினார். இவ்விதமாய் மலடியாயிருந்த சாராளுக்கு அவருடைய அற்புதத்தினால் குழந்தை கிடைத்தது. ஆனால் சாராளுக்கு வயதுமுதிர்ந்த பிறகுதான் ஈசாக்கு பிறந்தான். அதுவரைக்கும் சாராள் மலடியாயிருந்ததற்கு அவளுடைய பாவம் அல்லது ஆபிரகாமின் பாவம் காரணம் என்று நாம் கூறிவிடமுடியாது. கர்த்தரின் திட்டப்படி எல்லாம் நடைபெற்றது. பிள்ளையில்லாத நிலையும் அவர் கரத்தில்தான் இருக்கிறது.
1 சாமுவேல் 1:2ல் (எல்க்கானாவுக்கு) இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருத்தி பெயர் அன்னாள், மற்றவள் பெயர் பெனின்னாள். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை என்று வாசிக்கிறோம். ஆனால் பெனின்னாள் கர்த்தருக்குப் பிரியமானவள் என்றோ,அன்னாள் கர்த்தருக்குப் பிரியமில்லாதவள் என்றோ நாம் வாசிக்கவில்லை. 5வது வசனத்தில் புருஷன் 'அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான். கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார். கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும் படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்' என்று பார்க்கிறோம். கர்த்தர் அன்னாளின் கர்ப்பத்தை அடைத்திருந்தார் என்று மட்டும் கூறியிருக்கிறது. அவள்மேல் அவர் கோபங்கொண்டு அவளுடைய கர்ப்பத்தை அடைத்திருந்தார் என்று கூறவில்லை. கர்ப்பத்திற்கு அதிகாரியாக கடவுள் இருக்கிறார் என்பது திருமறை கற்றுத்தரும் உண்மை. ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் கர்ப்பத்தை அடைக்கும்பொது நியாயத்தீர்ப்பாக அதைச் செய்கிறார் என்று திருமறை போதிக்கவில்லை. அன்னாளின் கர்ப்பத்தை அடைத்திருந்த தேவன், அவளுடைய விண்ணப்பத்திற்கு இணங்கி, அவளுடைய கர்ப்பத்தை திறந்தார் என்று திருமறை கூறுகிறது.
லூக் 1:36ல் 'இதோ, உன் இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள். மலடி எனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்' என்று கூறியிருக்கிறது. அவளை மலடி என்று மற்றவர்கள் அழைத்தார்கள். அவளும் தன்னுடைய நிந்தையைப்பற்றிக் கூறுகிறாள். லூக் 1:24ல் 'அந்நாட்களுக்குப்பின்பு அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாக கர்த்தர் இந்நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து, எனக்கு இப்படி செய்தருளினார் என்று சொல்லி ஐந்துமாதம் வெளிப்படாதிருந்தாள்' என்று வாசிக்கிறோம். அவளுடைய பாவம் அல்லது அவளுடைய கணவரின் பாவம் என்று இங்கு சொல்லப்படவில்லை. லூக் 1:6ல் 'அவர்கள் இருவரும் (சகரியாவும்,எலிசபெத்தும்) கர்த்தரின் சகல கற்பனையின்படியேயும், நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாய் இருந்தார்கள்' என்று எழுதியிருக்கிறது. எலிசபெத் மலடியாய் இருந்ததால் அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது, இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள். லூக் 2:36ல் அன்னாளைப்பற்றி பார்க்கிறோம். 'ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள். அவள் கன்னிப் பிராயத்தில் விவாகமானது முதல் ஏழு வருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும் அதிக வயது சென்றவளுமாயிருந்தாள்' கன்னிப்பிராயத்தில் விவாகமாகி ஏழு வருஷம் புருஷனுடனே வாழ்ந்தவள், ஆனால் அவளுக்குப் பிள்ளைகள் இருந்ததாக நாம் வாசிக்கவில்லை. அவளைக் கர்த்தர் நியாந்தீர்ததால் அவ்விதமாய் இருந்தாள் என்று இங்கு கூறவில்லை. இரவும்,பகலும் தேவலாயத்தைவிட்டு நீங்காமல் உபவாசித்து, ஜெபம்பண்ணி தேவனை ஆராதித்துக் கொண்டிருந்தாள். ஆக்கில்லா,பிரிஸ்கில்லாள் தம்பதியருக்கும் குழந்தைகளில்லை என்று திருமறையிலிருந்து நாம் அறிந்துக்கொள்ளலாம். அவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி ஒன்றும்கூறப்படவில்லை. ஆனாலும் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒற்றுமையாக சந்தோஷமாக ஊழியம் செய்தார்கள் என்று பார்க்கிறோம்.
பெற்றோர் அருமையாகப் பேணி வளர்த்த மகளுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. இது பெற்றோருக்கு மிகுந்த மனக்கலகக்கத்தை உண்டாக்கிற்று. மற்றவர்கள் என்ன சொல்லுவார்களென்று பயம் அவர்களைப்பற்றி பிடித்தது. நம்முடைய சமுதாயத்தில் திருமணமானவுடன் குழந்தை பிறக்கவில்லையானால் ஏதோ குறை ஏற்பட்டுவிட்டது என்று கணவனும்,மனைவியும் அவர்களுடைய பெற்றோரும் எண்ணுவது இயல்பு. அதைப்பற்றி குடும்பத்தினரும் உறவினரும் நிந்திப்பதும் இகழ்ச்சியாய் பேசுவதும் சாதாரணமாய் நாம் பார்க்கிற சம்பவங்கள். திருமறை இதைக்குறித்து என்ன சொல்லுகிறதென்றறிந்து கடவுளின் சித்தத்தின் வெளிச்சத்தில் இதைப்பார்க்கவேண்டும். தன் மக்களுக்கு பிள்ளையில்லையே என்று பெற்றோர் அங்கலாய்த்து தங்களை புண்படுத்தி கொள்ளக்கூடாது. அப்படியே கணவனும்-மனைவியும் தங்கள் வாழ்க்கையையும், அன்பையும் சந்தோஷத்தையும் கெடுத்துவிடக்கூடாது. பிள்ளையில்லாத நிலை ஏற்படும் பொழுது, பெற்றோர் தங்கள் மருமகளையோ,மருமகனையோ நிந்திக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். கணவனும்,மனைவியும் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொள்ளுகிறார்கள். இதனால் எவ்வளவோ துக்கமும், பிரிவினைகளும் குடும்ப சண்டைகளும் ஏற்படுகின்றன. பிள்ளையில்லாத நிலை ஒரு பெருங்களங்கம் அல்லது சாபமென்று எண்ணக்கூடாது. திருமணமான பிறகு, குழந்தை பிறக்காததால் திருமண வாழ்வில் ஏதோ குறை ஏற்பட்டதென்று எண்ணக்கூடாது.
திருமணத்தின் நோக்கம் குழந்தை பெறுவதுதான் என்று வேதம் போதிக்க வில்லை.ஆதி 2:18ல் தேவனாகிய கர்த்தர் மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்று கூறினார். திருமணம் என்பது வாழ்க்கையில் தனிமையைப் போக்கி, துணைவரைக் கொடுப்பதற்கு கொடுக்கப்பட்டதென்று வேதம் போதிக்கிறது. பிள்ளைப்பேறு ஒரு பாக்கியமாக கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் பிள்ளைபேறு தான் திருமணத்தின் முக்கியமான நோக்கம், பிள்ளைகள் பிறக்காவிட்டால் திருமண வாழ்வே குறைப்பட்டுவிட்டதென்று நாம் எண்ணக்கூடாது. தாம் ஏதோ,குறைவுபட்டவர், வாழ்க்கையில் தம்மேல் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்று கணவர் எண்ணக்கூடாது. மனைவியும் அவ்விதமாய் எண்ணக்கூடாது. இருவரும் ஒருவரையொருவர் இவ்விஷயத்தில் குறை சொல்லக்கூடாது. தங்களுடைய அன்பும் ஒருமைப்பாடும் சரீர சந்தோஷமும் கெட்டுவிடுவதற்கு இடங்கொடுத்து விடக்கூடாது. மனைவியை வெறும் பிள்ளைபெறும் இயந்திரமாகக் கணவரும், கணவரின் குடும்பத்தாரும் கருதுவார்களானால் அது தவறு.
நம்முடைய பெயரும் குடும்பத்தின் புகழும் தொடர்ந்து காக்கப்படவேண்டும். நம்முடைய சொத்துகளுக்கு வாரிசு இருக்கவேண்டும். அதற்காக பிள்ளை அவசியம். அதற்காகத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென்ற கருத்து நம்முடைய சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால் திருமறை அவ்விதமாய் போதிக்கவில்லை. நமக்கு வாழ்க்கைத் துணைவராக மனைவியையோ,கணவரையோ தேவன் தருகிறார். அந்த உறவில் பிள்ளைகளை அவருடைய ஈவாகவும், ஆசீர்வாதமாகவும் தருகிறார். ஆனால் பிள்ளைகள் பெறவில்லையானால் திருமணம் களங்கம் அடைந்துவிட்டது என்று அவர் கூறவில்லை. சில கலாச்சாரங்களில் பிள்ளை பிறக்கவில்லையானால் கணவர் மனைவியை துன்புறுத்துவது, மாமியாரும்,மாமானரும் சேர்ந்துக் கொண்டு மருமகளைத் துன்புறுத்துவது இன்னும் மிதமிஞ்சிபோனால் அந்த மருமகளை எப்படியாவது ஒழித்துகட்டிவிட்டு, தங்கள் மகனுக்கு வேறு ஒரு மனைவியைத் தேடிக் கொள்ளலாம் என்று எண்ணுவது கடவுளுக்கு விரோதமான பாவம்.
குழந்தையில்லாத கணவனும்,மனைவியும் மருத்துவரிடத்தில் சென்று பரிசோதித்துக் கொள்ளுகிறார்கள். அவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு குழந்தை உருவாகாததற்கு மனைவி, அல்லது கணவர் காரணம் என்று கூறலாம். அதற்கான சிகிச்சையும் செய்யலாம். அம்முயற்சி தவறில்லை. அப்படியெல்லாம் செய்து பார்த்தும் குழந்தை பிறக்கவில்லையானால் கணவனிடத்தில் அல்லது மனைவியிடத்தில் பாவம் அல்லது சாபமிருக்கிறதென்று எண்ணக்கூடாது. சாராள் வயது முதிர்ந்தவாளாயிருந்தும் அவளுக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறவில்லை. ஏன் என்கிற கேள்விக்கு வேதத்தில் பதில் கிடையாது. ஆனால் தமக்கேற்றவேளையில் ஆபிரகாமுக்கும்,சாராளுக்கும் அவர் ஈசாக்கை கொடுத்தார். சகரியாவும்,எலிசபெத்தும் தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தவர்கள். ஆனால் முதிர்வயதுள்ள நிலையிலும் எலிசபெத்துக்கு பிள்ளை இல்லை. இங்கேயும் அது ஏன் என்கிற கேள்விக்கு வேதத்தில் பதில் இல்லை.
சிலவேளைகளில் அது ஏன் என்று நாம் அறிந்துக்கொள்ளலாம். கணவனும்,மனைவியும் காலம் கடந்து பிந்தித் குழந்தை உருவாகும் வயது கடந்த திருமணம் செய்துகொண்டபடியால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருக்கக்கூடும். பிந்தித் திருமணம் செய்கிறவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒத்துக்கொள்ளவும் வேண்டும். அப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கையிலும்கூட அற்புதங்களை செய்யும் தேவன் குழந்தைகளைக் கொடுத்திருக்கிறார். வயதான சாராளுக்கு திருமணமாகி அநேக ஆண்டுகளான பிறகுதானே ஈசாக்கைத் தேவன் கொடுத்தார். சிலருக்கு அவர்களுடைய உடலில் உள்ள குறையினால் குழந்தைகள் இல்லாமல் இருக்கக்கூடும். இது ஒருவேளை கணவனின் உடலில் காணப்படலாம், அல்லது மனைவியின் உடலில் காணப்படலாம். குழந்தை இல்லாத நிலைக்கு மனைவி மட்டும் காரணம் என்று கருதி மனைவியை கணவர் துன்புறுத்தக்கூடாது. கணவரின் பெற்றோரும் குழந்தை உண்டாகவில்லை என்பதால் தங்கள் மருமகளைத் துன்புறுத்தக்கூடாது. குழந்தை இல்லாத நிலைக்கு கணவரும் காரணமாய் இருக்கக்கூடும். லூக் 1:7ல் எலிசபெத் மலடியாயிருந்தபடியினால் அவர்களுக்கு பிள்ளையில்லாதிருந்தது. இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது. எலிசபெத் மலடியாய் அல்லது பிள்ளை பெறுவதற்குரிய சரீர பக்குவமில்லாத நிலையில் இருந்தபடியால் அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என்று இதிலிருந்து அறிந்துக்கொள்கிறோம்.
சில வேளைகளில் தேவன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறபடியால் குழந்தைகள் இல்லாமல் இருக்கக்கூடும். தேவன் கர்ப்பத்தை அடைத்தார் என்று கூறும்பொழுது அவர் தண்டனையாக அதை செய்தார் என்று நாம் கூறமுடியாது. கர்ப்பம் அவருடைய அதிகாரத்தின்கீழ் இருக்கிறது என்ற சத்தியத்தைத்தான் அது எடுத்துக்காட்டுகிறது. இதை அன்னாளின் அனுபவத்தில் பார்க்கிறோம். சாமு 1:5ல் '(எல்க்கானா) அன்னாளை சிநேகித்தபடியால் அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான் கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்' இந்த இருவரும் பாவம் செய்தவர்கள் என்று வேதம் கூறவில்லை என்று பார்க்கிறோம். பிள்ளையில்லாத நிலையைக் கர்த்தர் தம்முடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கிறார் என்று இதிலிருந்து அறிந்துக்கொள்ளுகிறோம். ஆகையால் பிள்ளையில்லாத நிலைக்குக் காரணம் என்னவென்று நம்மைநாமே அலட்டிக்கொள்ளக்கூடாது. பிள்ளையில்லாத நிலை நிந்தைக்குள்ளானநிலைதான் . இதை அன்றைய சமுதாயத்திலும் பார்க்கிறோம். பிள்ளையில்லையானால் குடும்பத்தினர், உறவினர் நிந்திக்கிறார்கள். சமுதாயத்திலும் மலடியான பெண்ணுக்கு அதிக நிந்தனை உண்டு. 'கர்த்தர் அன்னாளின் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்'(சாமு 1:6). ஒரு பெண்ணுக்கு பிள்ளையில்லாததால் அவளுடைய கணவரின் சகோதரிகள், கணவரின் பெற்றோர் அல்லது அவளுடைய சொந்த சகோதரிகள் அவளைப்பற்றி இகழ்ச்சியாக பேசுவதை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட நிலையில் நீ இருப்பாயானால் ஆண்டவருக்குள் உன்னைத் தேற்றிக்கொள்ள வேண்டும். அது உன்னை பாதிக்கும்படி இடங்கொடுத்துவிடக்கூடாது. கடவுளுக்கு பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடக்கூடாது. 'அவள் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்'(சாமு 1:8). கணவனாகிய எல்க்கானா தம் மனைவி,தன்னுடைய பிள்ளையில்லாத நிலையை ஏற்றுக்கொள்ளும்படி அவளை ஊக்குவிக்கிறார். இப்படித்தான் கணவன்மார்கள் நடந்துக்கொள்ளவேண்டும். பிள்ளையில்லாததால் மனைவியை துன்புறுத்தக்கூடாது. அவளைத் தள்ளிவிடவேண்டுமென்று எண்ணக்கூடாது. அது ஆண்டவருக்கு விரோதமான துரோகம், திருமண உடன்படிக்கைக்கு விரோதமான துரோகம், மனைவியை ஆதரிக்கவேண்டும் அவளை உற்சாகப்படுத்த வேண்டும். அன்னாள் என்ன செய்தாளென்று சாமு 1:7ல் பார்க்கிறோம். 'அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு போகும் சமயத்தில் அவன் வருஷந்தோறும் அந்த பிரகாரமாய் செய்வான், இவன் அவளை மனமடிவாக்குவாள் அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்'. அன்னாள் சாப்பிடாமல் துக்கத்தோடு அழுதுகொண்டிருந்தாள். ஆலயத்துக்குப்போனபொழுது, அவள் போய் மனங்கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி, சேனைகளின் கர்த்தாவே தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப்பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக்கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்' என்று கூறி பிராத்தனை செய்தாள்.சாமு 1:10,11). 'அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள் அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது. அவள் சத்தமோ கேட்கப்படவில்லை. சாமு 1:13. மனதுக்கத்தோடும்,பாரத்தோடும் தன் உள்ளத்தை ஆண்டவருடைய சந்நிதியில் ஊற்றிவிட்டாள். ஆகவே இப்படிப்பட்டவர்கள் பிள்ளையில்லை யென்று மனதை அலட்டிக்கொள்ளாதபடி கர்த்தரிடத்தில் அதை சொல்ல வேண்டும், மற்ற விசுவாசிகளையும் ஜெபிக்கும்படி கேட்கலாம். அப்படி ஜெபித்தும் குழந்தை பிறக்கவில்லை யானால் முழுவதுமாய் அவர் கரத்தில் நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டு, அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தையில்லாத தம்பதியர் மருவத்துவரிடம் சென்று தங்களை பரிசோதித்துக் கொள்ளலாம். கணவரின் உடலிலுள்ள குறையினாலோ குழந்தை பிறக்காமலிருந்தால் அதை மருத்துவச் சிகிச்சையின்மூலம் சரி பண்ணிக்கொள்ளலாம். அது தவறு அல்ல. அப்படி இருவரின் உடலிலும் எந்த குறையும் இல்லை என்று கண்டுகொண்டால் ஏன் என்று கேட்டு நம்மை அலட்டிக்கொள்ளக்கூடாது. உன் வாழ்க்கையில் குழந்தையில்லாததால் நிந்தைக்கும் இகழ்ச்சியான பேச்சுக்கும் உள்ளாகிஇருப்பாயானால், அதை ஆண்டவரிடத்தில் எடுத்து சொல். அவர் முன்பாக உன் இருதயத்தை ஊற்றிவிடு. அவர் உன் ஜெபத்துக்குப் பதிலாக குழந்தையைக் கொடுக்கக்கூடும். அவரால் ஆகாதது ஒன்றுமில்லை. விசுவாசத்தோடு அவர்மேல் முழுவதும் சார்ந்து அவருடைய நாமத்தின் மகிமைக்காக குழந்தை வேண்டுமென்று கேள். அற்புதம் செய்யும் தேவன் குழந்தையைத் தருவாரானால் அந்த குழந்தையை அவருக்கே அர்ப்பணம் செய்து, அவருடைய மகிமைக்காக வளர்ப்போம் என்று அவரிடத்தில் ஜெபியுங்கள். அப்படி ஜெபித்தும் குழந்தை பிறக்கவில்லையானால் விசுவாசத்தில் கோளாறு அல்லது நம் வாழ்க்கையில் ஏதோ குறை என்று எண்ணிக்கொள்ளக்கூடாது. நம் எதிர்காலத்தை அவர் அறிவார். ஆகையால் அவருடைய திட்டம் நமக்கு நன்மையாகத்தான் இருக்குமென்று விசுவாசித்து, நம்மை முழுவதும் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டு அவருக்கு ஊழியம் செய்வதிலும் அவருடைய நாமத்தில் மற்றவர்களின் கண்ணீரைத் துடைப்பதிலும் நம் கவனத்தை செலுத்தவேண்டும். நமக்கு எது நல்லது நம்முடைய வாழ்க்கைக்கு ஏற்ற வழி எது என்று அறிந்திருக்கும் தேவன் நமக்கு நன்மையானதைக் கொடுக்காமல் இருப்பாரா? சங் 84:11ல் 'தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்: கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்'என்ற அருமையான வாக்குத்தத்தத்தைப் பார்க்கிறோம். நீ அவருடைய வழிகளில் நடந்து, அவரைக் கனம்பண்ணும்பொழுது, தேவன் உன்னுடைய பிள்ளையில்லாக் குறையைக் கண்டு, அதைத் தீர்க்காமல் இருப்பாரா? அப்படி அவர் தீர்க்காமல் இருப்பாரானால் ஏதே ஒரு நோக்கத்திற்காக அவ்விதம் செய்திருக்கிறார். அதை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளவேண்டும். 'கர்த்தர் நன்மையானதைத் தருவார். நம்முடை தேசமும் தன் பலனைக் கொடுக்கும்'.சங் 85:12. நமக்கு நன்மையானதை அவர் நிச்சயமாகத் தருவார். அவர் தரவில்லையானால், ஏதோ ஒரு நோக்கத்திற்காக தராமல் இருக்கிறாரென்று நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
குழந்தையில்லாதவர்களுக்கு ஒரு சிறந்த ஆலோசனை:
அநாதைகளாய் வறுமையிலும்,துன்பத்திலும் பிறந்த குழந்தைகளைத் தத்து எடுத்து சொந்த மக்களாய் ஏற்றுக்கொள்வதற்கு தேவன் வழி நடத்தலாம். கணவனும்-மனைவியும் கிறிஸ்துவின் நாமத்தில் மற்ற மனிதர்களின் தேவைகளைத் தீர்ப்பதில் நிறைவு காணலாம். கடவுள் ஊழியத்துக்காக தங்களை ஒப்புக்கொடுத்து தங்கள் குழந்தையில்லாத நிலையிலும் முழுவதுமாய் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய மக்கள் உண்டு.லூக் 2:36ல் விதவையான அன்னாள் கன்னிப்பிராயத்தில் விவாகமான முதல் ஏழு வருஷம் மட்டுமே புருஷனுடனே வாழ்ந்திருந்தாள் என்று பார்க்கிறோம். பிள்ளைகள் இருந்ததாக நாம் வாசிக்கவில்லை. ஆனால் இரவும்,பகலும் தேவலாயத்தைவிட்டு நீங்காமல் உபவாசித்து ஜெபம்பண்ணி ஆராதனை செய்து கொண்டிருந்தாள். அவளுடைய வாழ்க்கை இவ்விதமாக நிறைவுள்ள வாழ்க்கையாயிருந்தது. ஆக்கில்லா,பிரிஸ்கில்லாள் என்கிற தம்பதியரை எடுத்துக்கொள்வோம். அப் 18:1-3, 24:26லும், ரோம 16:3-5லும்,கொரி 16:4-6லும், தீமோ 4:19லும் அவர்களைப்பற்றி நாம் வாசிக்கிறோம். அவர்களுக்குப் பிள்ளைகள் இருந்ததாக நாம் வாசிக்கவில்லை. ஆனால் இருவரும் தங்கள் வீட்டை தேவனுக்கு திறந்துகொடுத்திருந்தார்கள். பவுலைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோய் உற்சாகப்படுத்தினார்கள். அப்பொல்லோவை அழைத்துக்கொண்டு போய் அவருக்கு திருமறையின் சத்தியங்களை போதித்தார்கள். அவர்களுடைய வீட்டில் சபைகூடி வந்தது. இவ்விதமாய் கர்த்தரின் ஊழியத்திற்கென்று தங்களை முழுவதும் ஒப்புக்கொடுத்திருந்தார்கள். பிள்ளையில்லாத தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும்,துணையாகவும் இருக்கவேண்டும். அப்படி இல்லையானால் பிள்ளையில்லாத குறையை அவர்கள் அதிகமாக உணரக்கூடும். கணவர் மனைவியைவிட்டுப் பிரிந்து வாழ்ந்து, தனிப்பட்டு செயல்படுவாரானால் மனைவிக்கு அது பெரிய ஏக்கத்தையும், வெறுமையையும் உண்டாக்கிவிடும். மனைவி அப்படிச் செயல்படுவாளானால் அது கணவருக்கும் பெரிய வெறுமையை உண்டாக்கிவிடும். ஆகையால் குழந்தையில்லாத தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆதராவாக இருக்கவேண்டும். தங்கள் வாழ்க்கைத்துணைக்கு உண்மையானதுணையாக இருக்கவேண்டும், சேர்ந்துசெயல்பட வேண்டும்.
என் தனிப்பட்ட ஆலோசனை என்னவென்றால்: தன் வயிற்றின் மூலமாய் தங்களுக்கு பிறந்த ஒரு குழந்தையை வளர்ப்பது பெரிய காரியமல்ல, ஆனால் தாய் தந்தையில்லாத ஒரு அனாதை குழந்தைக்கு நீங்களே தாயும்,தந்தையுமாக இருந்து அந்த குழந்தையை கர்த்தருக்கென்று வளர்த்துவீர்களோயானால் அதைவிட சிறந்த செயல் வேறு இருக்கமுடியாது. இந்த சிறிவர்களில் ஒருவருக்கு எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று இயேசுகிறிஸ்து கூறி உங்களை ஆசீர்வதிப்பார். குழந்தையில்லாததை சாபமாக, தண்டனையாக எடுக்காதபடி தேவ சித்தத்துக்கு முற்றிலும் விட்டுக்கொடுத்து புருஷன்-மனைவி ஆத்துமாவிலும்,அதோடு சரீர சந்தோஷத்திலும் ஒரு குறைவும் வைக்காது வாழ்வதே கர்த்தருக்கு பிரியமான காரியம். இந்த ஆலோசனையை கேட்டு என் வாசகர்களில் பலர் அனாதை குழந்தையை தெரிந்தெடுத்து வளர்த்தி புதிய குடும்ப சந்தோஷத்துடனே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழ்த்துகிறேன்.
'அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரனைச் சிறுமையாக்கி சஞ்சலப்படுத்துகிறதில்லை' புல 3:33. 'தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள் தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்';. 1சாமு 30:6. ஜெபத்திற்கு பதில் கிடைக்காமல்போகும்போது ஒரு விசுவாசி பாடவேண்டிய பாட்டு: ' அத்திமரம் துளிர்விடாமல்போனாலும்-திராட்சைசெடிகளில் பழம்உண்டாகாமல் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுபோனாலும்,வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடுஇல்லாமற்போனாலும்,நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூறுவேன்'. ஆபகூக் 3:17,18. நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்க கற்றுக்கொண்டேன். பிலி 4:11. நான் இவ்வாறு சொல்வது எனக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு குறையினாலன்று, ஏனெனில் எந்நிலையிலும் போதுமென்ற மனதோடு வாழக் கற்றுக்கொண்டேன்.
(முனை.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் எழுதிய 'பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்' என்ற நூலிருந்து எடுத்தாளப்பட்ட செய்தியாகும்).