கட்டுரைகள்

பிறந்துவிட்டோம், வாழ்ந்துதானே ஆகவேண்டுமென்று சலிப்போடும், வாழ்க்கை பளுவாகத் தோன்றுவதால் வருத்தத்தோடும், வாழும் ஜனங்களைப் பார்க்கின்றோம். அன்றாட வேலையில் அவசர அவசரமாக ஓடினாலும், எதற்காக இந்த கடின உழைப்பு என்பதை அறியாமல் வாழ்வோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவசரமான ஓர் உலகில் காலை முதல் மாலை வரை பொழுதுபோகவில்லையே என ஏங்குவோரும் உண்டு! வாழ்வில் நோக்கமின்றி வாழுவோர் ஒருபுறம்,ஏதாவது ஒன்றை சாதித்தே தீரவேண்டுமென்று வாழுவோர் மறுபுறம்! மனிதனுக்கு அதிகநாட்கள் வாழ வேண்டுமென்ற விருப்பம் வருகின்றது. அது சஞ்சலம் நிறைந்ததாகவே முடிகின்றது!

"என் பிதாக்களின் ஆயூசு நாட்களுக்கு என் வயது எட்டவில்லை" என்று பார்வோனிடம் கூறிய யாக்கோபு என் ஆயூசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுமுள்ளதாயிருக்கிறது என்றார். (ஆதி 47:9). வாழ்க்கையில் திடீர் இழப்பு, வியாதியை சந்தித்தபோது "ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்" என்று யோபு தன் ஜெபத்தில் கூறுகிறார். (யோபு 14:1). குழந்தை பாக்கியமில்லாத அன்னாளுடைய வாழ்க்கையிலும் சஞ்சலமே(1சாமு 1:8). ஆயுசு நாட்களைக்குறிப்பிடும் மோசே, "அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே" என்றே எழுதுகிறார்(சங் 90:10). அதுமட்டுமல்ல, மனவிருப்பத்தின்படியெல்லாம் வாழ்ந்து பார்த்த சாலமோன் ஞானி வாழ்க்கை சஞ்சலம் நிறைந்தது என்று கூறுவது பிரசங்கி புத்தகத்தில் 10 முறை இடம்பெறுகின்றது. இம்மைக்குரியவைகளுக்காக வாழுவோருக்கும், நோக்கம் இல்லாமல் வாழ்வோருக்கும் வாழ்க்கை சஞ்சலமே! ஆனால், நல்லதொரு விளைவு, முடிவினைப் பெறுவதற்காக வாழ்க்கையில் துன்பம், துயரம், கஷ்டம், நஷ்டங்களை கடந்துசெல்ல நேர்ந்தாலும் அந்த வேதனை அவர்களுக்கு சஞ்சலத்தையல்ல, சந்தோஷத்தையே கொடுக்கும்! ஆகையினால் வாழ்வின் சந்தோஷம் என்பது வாழ்வின் நோக்கத்தை சார்ந்ததாகும். உலகத்திற்காக, பாவத்திற்காக வாழுவோர் எத்தனை சந்தோஷம் கண்டாலும் முடிவு வேதனையே! ஆனால் பரமன் இயேசுவுக்காக பரலோக நோக்கத்திற்காக வாழுவோர் எத்தனை இடர், இன்னல்கள் நேர்ந்தாலும் இன்பமுகத்தோட இறுதியில் காண்பது சந்தோஷமே!. வாரினால் அடிக்கப்பட்டு, காயங்களோடு தொழுமரத்தில் மாட்டி வைக்கப்பட்ட பவுல், சீலாவுக்கு இரவிலும் கீதம் பாடமுடிந்ததே, காரணம், இதயத்தில் நிரம்பிநின்ற சந்தோஷம்தான். இயேசுவுக்காக வாழ்ந்து, பாடுகள்பட்டதினால்தான்! சீஷர்கள் இயேசுவின் நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தை விட்டு புறப்பட்டார்கள் என அப் 5:41ல் வாசிக்கிறோம்.

இன்று யாருக்காய் வாழ்கிறாய் நீ? என்ற கேள்விக்கு முன்பாக நிற்கிறோம். உலகார் வாழுவது உலகத்திற்கு, நரகார் வாழுவது பாவத்துக்கு, சுயநலவாதிகள் வாழுவது தங்களுக்கு! கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசி வாழ வேண்டியது இயேசுவுக்காகவே, அவருக்கு ஊழியம் செய்ய அழைக்கப்பட்டோர் வாழ்வது சுவிசேஷ ஊழியத்திற்காகவே!. விசுவாசிகள் ஏன் இயேசுவுக்காக வாழவேண்டும், எப்படி வாழவேண்டும் என்ற இரு கேள்விகளை சிந்தித்தால் நாம் யாருக்காக வாழ்கிறோம் என்பதில் தெளிவுபெற இயலும்.

பாவத்திற்காக வாழ்பவர்கள்:

உங்கள் வாழ்வு எதற்காக? மரணத்தைத்தரும் பாவத்திற்காகவா? அல்லது நீதியைக் கொண்டு வரும் கீழ்ப்படிதலுக்காகவா? பவுல் இதுகுறித்து கூறுவதை வாசியுங்கள்:. "எதற்கு கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாய் இருக்கிறீர்கள்" (ரோம 6:16). "சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களில்பாவம் ஆளாதிருப்பதாக" (ரோம 6:12). பாவத்திற்குக் கீழ்ப்படிய சரீரத்தை ஒப்புக்கொடுத்தால் அதற்கு நாம் அடிமைகளே, நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சைகளின்படி நடந்து, நமது மாம்சமும், மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போல் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம் (எபே 2:3). மாம்ச இச்சைகள் வெளியரங்கமாயிருக்கும் (கலா 5:19-21). அதை நிறைவேற்ற வாழும் கோபாக்கினையின் பிள்ளைகள் மேல் தேவகோபம் வந்திருக்கின்றது என்று கலாத்தியருக்கு மாம்ச இச்சையின் முடிவைக்குறித்துக்கூறும் பவுல் "இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை" (வச 21) என்கிறார். ஆம். பிரியமானவர்களே, மாம்ச இச்சைகளுக்காகத் தங்கள் வாழ்நாளை செலவிடுபவர் பரலோகம் செல்லலாம் என்பது பகற்கனவே!.

பரிசுத்த பேதுரு கூறுவதையும் கவனியுங்கள்: (2பேது 2:10-20). அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி வாழ்பவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும், இலச்சைகளுமாயிருந்து, தங்கள் வஞ்சனையில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள், விபச்சார மயக்கத்தால் நிறைந்தவர்கள், பாவத்தைவிட்டோயாத கண்களையுடையவர்கள், புதிய விசுவாசிகளையும் தந்திரமாய் பிடிப்பவர்கள்! இவர்கள் தங்கள் பாவக்கறைகளையே ஆதாயமாக்கப் பார்க்கும் பொருளாசைக்காரர்! இப்படிப்பட்டவர்கள் தண்டனைக்குத் தப்பிக்கொள்வதில்லை! என்னதான் உல்லாசம், ஆனந்தம் என்று கூறினாலும் அவர்களுக்கு மிஞ்சுவதோ சலிப்பும், சஞ்சலமும் தவிப்பும் விரக்தியும் நியாயதீர்ப்பைக் குறித்த பயமுமே!. ஏசாவைப்போல் வயிற்றுக்காக வாழ்பவர் பலர் உண்டு. ஒருவேளை போஜனத்துக்காகத் தன் சேஷ்ட புத்திரப் பாகத்தை விற்று, புசித்து, குடித்து, எழுந்திருந்து போய்விட்டவன் ஏசா (ஆதி 25:34). "ஏசாவையோ நான் வெறுத்தேன்" (மல் 1:3) என்று தேவன் வெறுப்பதற்கான காரணத்தை எபிரெயருக்கு ஆக்கியோன் எழுதுவதை வாசித்திருப்பீர்கள். ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதப்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (எபி 12:16). ஊழியத்தைப் பிழைப்பின் மார்க்கமாய்க் கொள்பவர்களைக் குறித்த எச்சரிக்கையும் தேவை என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்குத் தெரிவித்தார். "அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு.அவர்களுடைய மகிமை, அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்" (பிலி 3:19). பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறவர்களுக்குப் பரலோக ராஜ்யத்தில் பங்கில்லை என்பதால் இன்றே பரிசுத்தமாகுதலுக்கு அழைக்கப்படுகின்றோம்!.

இயேசுவுக்காக வாழ்பவர்கள்:

கர்த்தராகிய இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் சிலுவை என் முன்னே,உலகம் என் பின்னே என்றே வாழுவார்கள். இயேசுவுக்காக எதையும் கொடுக்கவும் செய்யவும் ஆயத்தமாகிவிடுவார்கள்! அப்படியானால் . . . . ஏன் இயேசுவுக்காக வாழவேண்டும்? இந்த கேள்விக்குப் பரி.பவுல் கூறும் பதிலைப் பாருங்கள். "கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது"ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும், பிழைத்திருக்கிறவர்கள் இனித்தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்துஎழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம் (2கொரி 5:15).

நான் இயேசுவுக்காகத்தான் வாழவேண்டும். ஏனெனில் அவர் என்னில் அன்புகூர்ந்தவர் (யோவான் 3:16). இயேசு எனக்காய் மரித்தவர் (ரோ 4:25,5:8, 1பேதுரு 2:24). இயேசு எனக்கு நித்திய ஜீவன் தந்தவர் (யோ 1:12,2 கொரி 5:17). ஆக்கினைத் தீர்ப்பில்லை என்றாக்கினவர் (யோ 5:24,ரோம 8:1,33). அவர் எனக்காக அபராதம் செலுத்தினவர் (ரோம 3:26,1யோ 2:2). அவர் என்னை நீதிமானாக்கிவர் (ரோம 3:24). அவர் எனக்கு ஜீவனும் உயிர்த்தெழுதலுமானவர் (யோ 11:25). அவர் எனக்காக ஓர் இராஜ்யத்தை ஆயத்தம் பண்ணுகிறவர் (யோ 14:2). அவர் என்னை அழைத்துச் செல்ல மீண்டும் வரப்போகிறவர்(யோ 14:3,கொலோ 1:4). இத்தனையும் இயேசுதாமே எனக்குச் செய்திருக்கும்போது நான் ஏன் அவருக்காக வாழக்கூடாது?.

எப்படி இயேசுவுக்காக வாழவேண்டும்?

முதலாவது, முழு இருதயத்தோடும் அவரில் அன்புகூரவேண்டும். "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுமனதோடும் அன்புகூறுவாயாக". (மத் 22:37) என்பதே நியாயப்பிரமாணத்தைக் குறித்த இயேசுவின் முதலாம் பிரதான கற்பனை. நாம் இயேசுவில் அன்பாயிருந்தால் அவரது கற்பனைகளையும் கைக்கொள்ளுவோம் (யோ 14:15) என்பது அவரது எதிர்ப்பார்ப்பு. இரண்டாவதாக, சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவைப் பின்பற்றி வாழவேண்டும். ஏனெனில் "தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரனல்ல" என்று இயேசுதாமே கூறுகிறாரே (மத் 10:38). எனக்காய் மரித்தவருக்காக நான் மரிக்கவும் ஆயத்தம் என்ற தீர்மானம் நமதாகவேண்டும்.

ஊழியர்கள் வாழ்வது சுவிசேஷத்திற்காக! விசுவாசி என்பார் தேவ பிள்ளைகள்! அதாவது, இயேசுவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளே (யோ 1:12)! மறுபடியும் பிறந்தவர்கள், ஆம். தேவபிள்ளையென்பது பிறப்பு சார்ந்தது!ஆனால் ஊழியர் என்பது பிறப்பு பற்றியல்ல, பிழைப்பு சார்ந்ததும் அல்ல, அது அழைப்பு சார்ந்தது!பிரியமான தேவ ஊழியரே, நீர் அழைக்கப்பட்டவரா? தேவன் என்னைத்தெரிந்துக்கொண்டு அழைத்தார் என்ற தெளிவும், யாருக்கு?, எதற்காக ஊழியம் செய்கிறோம், என் எஜமான் யார்? என்ற உறுதியும் உண்டா? என்ற கேள்விகளை அனைத்து ஊழியர்களும் கேட்டுப் பார்க்கவேண்டும். அது கர்த்தராகிய இயேசுவின் ஊழிய அழைப்பு என்றால் இயேசுவின் ஊழியம் என்ன?. "மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத் தோட்டத்தில் வேலை செய்" (மத் 21:28) என்ற உவமையை கூர்ந்து கவனியுங்கள்.வேலையாட்களை மறுபடியும் மறுபடியும் அழைத்துவரும் அவரது பணி (மத் 20) எத்தனை முக்கியமானது! அந்த வேலையானது, "என் சபையைக்கட்டுவேன்" (மத் 16:18)என்பதே. அவர் கட்ட வந்ததும், இறுதியாகக் கட்டளையிட்டுச் சொன்னதும் சுவிசேஷ ஊழியம்தானே!. அதில் எனக்குப் பங்கு உண்டா என்பதே ஊழியருக்குமுன் வைக்கப்படும் முதற்கேள்வி! எவ்வித ஊழியத்தில் ஈடுபட்டாலும் சரி, அது சுவிசேஷ ஊழியத்தை மையமாகக்கொள்ளாவிடில் பயனற்றதே!. 1நாளா 4:25ல் ஒர் சிறந்த குறிப்பு உண்டு. "இவர்கள் குயவராயிருந்து, ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம் பண்ணினார்கள்".

பொறுப்பு அல்லது தொழில் எதுவாயினும் ராஜாவின் வேலையில் இருக்கிறோமா? வயிற்றுக்காக, உலகத்திற்காக, சுயபெருமைக்காக ஊழியம் செய்தோர் கண்டது வறுமையும், வெறுமையுமே! சுவிசேஷத்தை குறிக்கோளாக்கி ஊழியம் செய்வோர் சிலுவைக்கொடியேந்தி முன்செல்கின்றார்! வாருங்கள், நம்மூலமாக இயேசு தம் சபையைக்கட்டுவதற்கு அணியணியாய் முன்வாருங்கள்! ஆமென்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.