பல தெய்வவழிபாடு மிக்க சூழ்நிலையில் பழைய ஏற்பாட்டாகமங்கள் இயற்றப்பட்டமையால் அவை பன்முறை கடவுளின் ஏகத்துவமாகிய ஒருமையை அழுத்திக்கூறுகின்றன. எனினும் பழைய ஏற்பாட்டிலும் திரித்துவக்கொள்கை ஆங்காங்கு நிழலாட்டமாய்க் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, "நமது சாயலின்படி நமக்கொப்பாக மனிதனை உண்டாக்குவோமாக" என்று கடவுள் கூறியதை கவனிக்கவும். (ஆதி 1:29). "இப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் என்னையும் தமது ஆவியையும் அனுப்புகிறார்" என்று மேசியா ஏசாயா 48:16ல் கூறினார். நற்செய்தி நூல்கள் நான்கிலும் இயேசுகிறிஸ்து அடிக்கடி தம்முடைய தந்தையையும் குறிப்பிட்டுப்பேசினார். சில வேளைகளில் தாமே பரிசுத்த ஆவியானவரை அனுப்பப்போவதாக வாக்களித்ததுண்டு.
இந்த உபதேசம் நமது அற்பபுத்திக்கு விளங்கக்கூடியதன்று, ஆகவே இதை மறுக்கும் வேதபுரட்டர் அநேகர் காலாகாலத்தில் தோன்றித்தவறான கொள்கைகளைப் பிறப்பித்துள்ளார்கள். ஒரு சிலர் கடவுளின் ஏகத்துவத்தை மிஞ்சி வற்புறுத்திப் போதித்தமையால் இயேசுகிறிஸ்துவை மெய்த்தேவனாகவும், பரிசுத்தாவியானவரைத் தெய்வீக ஆளாகவும் ஒப்புக்கொள்ள மறுத்தனர். ஆனால் நாம் நம் மூளையினால் கிரகித்துக்கொள்ளக்கூடிய உண்மைகளை மட்டும் ஒப்புக்கொள்வது கிறிஸ்தவ இலட்சணமன்று, வேதாகமம் கூறுவதையெல்லாம் நாம் நம்பவேண்டும்.
வேறு சிலர் மும்மூர்த்திகளுக்கு ஒப்பாகத் திரித்துவத்தை பொருள்படுத்தித் தந்தையையும், குமாரனையும், பரிசுத்த ஆவியானவரையும் மூன்று தேவர்களெனக் கருதி வழிப்படுகிறதாகத் தெரிகிறது. இதுவும் முற்றிலும் தவறு. ஒன்றுக்கொன்று எதிரிடையாய் நிற்கும் இவ்விரண்டு புரட்டுகளுக்கும் நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். இந்தச் சிக்கலான கொள்கை இறையியலின் நுண்ணிய கருத்துக்களை உற்றாராய்ந்து கற்றறிந்த நிபுணர்களுக்கேயல்லாமல் பொதுமக்களுக்கு அடுத்ததல்ல என்று நாம் எண்ணலாகாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஏக கடவுளாக மக்களை இரட்சிப்பது எப்படி என்பதை நாம் எல்லாரும் அவசியமாய் அறியவேண்டும்.
திரித்துவக்கொள்கையில் அடங்கியுள்ள சத்தியங்களை நாம் காண்போம்:
1.கடவுள் ஒருவரே: அவர் பிரிக்கக்கூடாதவர்,
2.மேற்கண்ட பிரிக்கமுடியாத தேவதன்மை முழுவதும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரில் ஒவ்வொருவருக்கும் உண்டு. இம்மூவர் ஒவ்வொருவரும் மாறாத்தன்மையையும், சர்வ வல்லமையையும் அழிவில்லாத நித்தியத்துவத்தையும் உடையவர்.
3.மேற்கண்ட மூவரில் ஒவ்வொருவருக்கும் மற்ற இருவரிடத்தில் காணப்படாத விசேஷித்த ஆற்றல்களும் இலட்சணங்களும் உண்டு. இம்மூவருக்குள்ளும் காணும் வெவ்வேறு இலட்சணங்கள் ஆள்தத்துவக்குரிய தனி சிறப்புகளாகும்.
4.மேற்கண்ட மூவரில் ஒவ்வொருவரும் கடவுளின் ஒவ்வொரு பாகமாயிருந்தாலும் கடவுள் மூவராய்ப் பிரிந்திருக்கவில்லை. தேவதன்மை ஒன்றாயிருப்பதாலும், தேவனுடைய பண்புகள் யாவும் அந்தத் தன்மையில் அடங்கியிருப்பதாலும் இம்மூவரில் ஒவ்வொருவருக்கும் தேவ தத்துவங்கள், குணங்கள் யாவும் பொதுவானதாகும்.
5.மூவருக்குள் காணப்படும் ஆள்தத்துவத்தின் தனிச்சிறப்பும் வேற்றுமைகளும் காலவட்டத்தில் உண்டானவையல்ல, கடவுளது அனாதி இருப்பில் எப்பொழுதும் இருந்துகொண்டேயிருந்தவைகள். கடவுள் செயலாற்றியபோதுதான் இந்த ஆள்தத்துவத்திற்குரிய வேற்றுமைகள் உண்டாயின என்று கூறுவது தவறு. கடவுள் எப்பொழுதும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவராயிருந்தார். இருந்துக்கொண்டே வருகிறார், இருக்கக்தான் போகிறார்.
திரித்துவத்தின் அடக்கம் இப்படியிருக்க, இதை நிலைநாட்டப் பின்வரும் நான்கு கருத்துரைகளை மெய்யெனக்காட்டல் வேண்டும்.
1.கடவுள் ஒரே ஒருவர்.
2.நசரேயனாகிய இயேசு மெய்க்கடவுள், அதே சமயத்தில் அவர் பிதாவுக்கு வேறுபட்டவர்.
3.ஆவியானவர் மெய்க்கடவுள், அதே சமயத்தில் அவர் பிதாவுக்கும், குமாரனுக்கும் வேறுபட்டவர்.
4.மேற்கண்ட மூவரும் ஒரே கடவுள்.
1.கடவுள் ஒருவர் என்ற உண்மையை நாம் 2ஆம் அத்தியாயம் 2ம் பத்தியில் நிலை நாட்டியாயிற்று.
2.இயேசு மெய்க்கடவுளாயிருக்கிறார் என்பதை மறுக்கும் பல பொய்க்கதைகள் தோன்றியிருக்கின்றன. கி.பி.325ம் ஆண்டில் ஆரியஸ் என்னும் ஒரு வேதப்புரட்டன் தோன்றி, கிறிஸ்து பிதாவினால் உண்டாக்கப்பட்டவர் என்றும் அவர் இல்லாத காலம் ஒன்று இருந்ததென்றும் கூறினான். தெய்வத்தன்மை போன்ற தன்மையுள்ளவர்: எனினும் அவர் பிதாவுக்குச் சமமல்ல, அவர் கடவுள் அல்லர் எனச் சாதித்தான். யேகோவாவின் சாட்சிகள் (Jehovahs Wittness), ஏழாம் நாள் சபையார் (Seventh Day Adventists) இதைப்போன்ற வேதத்துக்குப் புறம்பான கொள்கைகளை நிலைநாட்டப் பார்க்கிறார்கள். ஆனால் திருச்சபைக்குப் புறம்பேயுள்ள சமயக்கட்சிகளின் வேத விரோதக் கருத்துக்களைப் பார்க்கிலும் உள் சபையாரின் குரு துரோகமே பயங்கரமானது. கிறிஸ்தவ இறையியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றுத் திருச்சபைகளில் நுழைந்து கிறிஸ்துவின் முழு தெய்வீகத்தை மறுக்கும் குருமாருக்கு எச்சரிக்கையாயிருப்போமாக! கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய குமாரன்? (மத் 22:42) என்ற கேள்வியே தக்க உரைகல்.
அ. பெத்லகேமில் பிறவாததற்கு முன் இருந்தார். ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன். (யோ 8:58) என்றபோது இருக்கிறவராகவே இருக்கிறேன் என்கிற கருத்துக்கொண்ட யேகோவா என்னும் திருநாமத்தைத் தமக்கு எடுத்துக்கொண்டார். "அவர் ஆதியில் கடவுளோடிருந்தார்" (யோவான் 1:2) "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று" (யோவான் 1:3) "அவர் பரலேகத்திலிருந்து இறங்கி வந்ததாகக் கூறியிருக்கிறது" (யோவான் 3:13,31, 13:3, 16:28, பிலி 2:6-11).
ஆ. "கிறிஸ்து காணப்படாத கடவுளின் தற்சொரூபம் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது" (கொலோ 1:16). அவர் கடவுளின் சாயல் (2கொரி 4:4). இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும் அவர் தத்துவத்தின் சொரூபமுமாயிருக்கிறார் (எபி 1:3).
இ. கடவுளுக்கேயல்லாமல் வேறொருவருக்கும் பொருந்தாத சில பெயர்களும் பட்டங்களும் இயேசுகிறிஸ்துவுக்குரியன என திருமறையில் வாசிக்கிறோம். (யோவான் 1:1,20:28, அப் 20:28, ரோம9:15).
ஈ. கடவுளேயல்லாமல் வேறொருவரும் செய்ய இயலாத கிரியைகளைக் குமாரனாகிய இயேசு கிறிஸ்து செய்ததாகத் திருமறை கூறுகிறது. பொதுவாக, பிதா எவைகளைச் செய்கிறாரோ அவைகளைத் தாமும் அப்படியே செய்து வருகிறதாக இயேசு உரிமை பாராட்டினார் (யோவான் 5:19). பாவங்களை மன்னிக்கவும், மரித்தோரை உயிர்ப்பிக்கவும், மக்களை இரட்சிக்கவும், உலகத்தை நியாயந்தீர்க்கவும் கடவுளுக்கே உரிமையுண்டு. இயேசுகிறிஸ்து பாவங்களை மன்னித்தார் (மாற்கு 2:10). மரித்தோரை உயிர்ப்பித்தார் (யோவான் 5:21) சர்வத்தையும் சிருஷ்டித்தார் (யோவான் 1:3, கொலோ 1:15-17, எபி1:2)சகல ஜாதிகளையும் நியாயம் விசாரித்துத்தீர்ப்பிடுவார் (யோவான் 5:22, மத் 25:31,32, 2கொரி 5:10).
உ. கடவுளுக்கே உரித்தாகும் பண்புகள் இயேசுவுக்குரியன என்று வேதாகமம் கூறுகிறது. மாறாமைஒரு தெய்வீக பண்பு. ஆகவே இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று அழைக்கப்படுகிறார் (எபி 1:11,12,13:18). எங்கும் வியாபித்திருக்கும் உரிமை கடவுளுக்கே, இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்திலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவில் இருக்கிறேன் என்று இயேசுதாமே உரிமை உணர்வுடன் வாக்களித்தார். (மத் 18:20,28:20).
ஊ. கடவுளுக்கேற்கும் மகிமை இயேசுகிறிஸ்துவுக்கும் அளிக்கப்பட்டாயிற்று. கடவுளுக்குரிய மகிமையை வேறோருவருக்கும் கொடுக்கக்கூடாது என வேதாகமம் வற்புறுத்திக் கண்டிப்பாய்க் கூறியும்(ஏசாயா 42:8,45:22 23,48:11). அதே மகிமை கிறிஸ்துவுக்குமுரியது என்று கண்கூடாகக் காட்டுகிறது. திருச்சபையில் ஆசீர்வாதம் கூறும்போதெல்லாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியயினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக என்று சமமாகக் கனம் பண்ணுகிறவர்களாவோம் (2கொரி 13:14). விசுவாசிகளுக்கு நாம் ஞானஸ்நானம் கொடுக்கும்போது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் எனக்கூறுவது வழக்கம் (மத் 28:19)கிறிஸ்துவைக் கனம் பண்ணுவது பிதாவையும் கனம் பண்ணுவதாகும். குமாரனைக் கனம் பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனே (யோவ 5:23).
எ. கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு அவருடைய தெய்வீகத்திற்கு சாட்சியாகும். அவர் தம்மையு மேசியா என்று கூறினார் (யோ 4:26) பேதுரு, பர்னபா, பவுல் அப்போஸ்தலர்கள் மக்களது வணக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்று சொல்லி அவனைத் தூக்கி எடுத்தான். (அப் 10:29). தேவதூதர் முதலாய்த் தங்கள் கால்களில் விழுந்தவர்களை அதட்டி, வேண்டாம், வேண்டாம்.... நானும் ஓர் ஊழியக்காரன், கடவுளையே வணங்கு என்றார்கள். (வெளி 19:10, 22:8),இயேசுவோ (மத் 28:17, மாற்கு 1:40, யோவான் 9:38) தமது காலில் விழுந்து பணிந்து கொண்டவர்களைத் தடைசெய்யாது, அவர்களுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டார்.
இயேசுகிறிஸ்து தமது உபதேசத்திற்குத் தம்மையே ஆதாரமாகக்கொண்டு போதித்தார். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிற மக்களைக் கடவுளிடத்திற்குப் போகும்படி சொல்லாமல் தம்மிடத்தில் வரவழைத்தார் (மத்11:28) தம்மைப்பின்பற்றுகிற மக்கள், எல்லாவற்றையும், பெற்றோரையும் வெறுத்துத் தம்மைப் பின்பற்றவேண்டுமென்று அழைப்புவிடுவித்தார். கடவுளல்லாத ஒரு மனிதன் இவ்வாறு பேசத் துணியமாட்டான். தம்மையே நடுநாயகராகத் காட்டினவர் கடவுளாயிருக்க வேண்டும்.
பிதா, என்னிலும் பெரியவர், (யோ 14:28) என்ற வசனத்தைச் சில வேதக்கருத்துக்களை மாற்றுபவர்கள் தங்கள் தவறான கொள்கைகளுக்கு ஆதாரமாகக்கொள்வதுண்டு, ஆனால், உள்ளபடி இந்த வாக்கியம் கிறிஸ்துவின் தெய்வீகத்திற்கு ஒரு பலத்த சாட்சியாகும். ஒரு வகையில் பிதாவுக்கு நிகரானவரும்(தெய்வீக துறையில்) இன்னொரு வகையில் பிதாவுக்கு கீழ்ப்பட்டவருமான (மனுஷீக துறையில்) கிறிஸ்து, பிதா என்னிலும் பெரியவர் எனக்கூறுவது கருத்து நிறைந்ததாகும். எந்த வகையிலும் பிதாவுக்கு நிகராகாத ஒரு வெறும் மனிதன் பிதா என்னிலும் பெரியவர் எனக்கூறுவது கருத்தில்லாத மூடத்தனமாகும்.
இயேசுகிறிஸ்துவின் தெய்வீகத்தன்மைக்கு வேதாகமமே போதிய அத்தாட்சியும் ஆதாரமுமாயிருந்தும், திருச்சபையின் அனுபவம் ஒரு பலத்த துணை நியாயமாகும். ஆதி சபை முதற்கொண்டு இருபது நூற்றாண்டுகளாய்க் கிறிஸ்தவர்கள் பெரும்பாலோர் இயேசுவைக் கடவுளாகக் கருதி வணங்கி வருகிறார்கள். ஆதிச்சபையார் ஏகத்துவவாதிகளான யூத சமய வெறியர், தர்சு சவுலைப்போல நாசரேத்தூர் தச்சரும், குருசில் தூக்கப்பட்டவருமாகிய இயேசுவை மேசியாவாக ஒப்புக்கொள்ள மனமற்றிருந்தார்கள். என்றாலும் மூடப்பற்றுள்ள இந்த ஏகத்துவவாதிகள் முதலாய் இயேசுவின் காலில் விழுந்து அவரைக் கடவுளின் குமாரனென்றும், மெய்த்தேவனென்றும் வணங்கினார்கள். மெய்யான ஒரே கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் (யோ17:3).
நானும், பிதாவும் ஒன்றே (யோவான் 10:30) எனச் சாதித்தவர் மேற்படி யோவான் 17:3ல் தம்மைப் பிதாவுக்கு வேறுபட்டவராகக் காட்டினார். கணவன், மனைவி சிந்தையிலும், நோக்கத்திலும், வாழ்க்கையிலும் ஒன்றாயிருந்தும் ஒருவருக்கொருவர் வேறுபட்ட தனி ஆட்களாயிருக்கிறார்கள் என்பது மேற்படி திருமறைப்பொருளுக்கு நிழலாட்டமான ஓர் எடுத்துக்காட்டாகும். தன்மையிலும், தத்துவப் பண்புகளிலும், சிந்தையிலும், பிதாவும், குமாரனும் ஒருவரே, ஆள்தத்துவத்திலோ இருவர், பிதா அவரை அனுப்பினார். பிதாவினிடம் கட்டளை பெற்றார் (யோ 12:49). பிதாவின் சித்தத்தைச் செய்ய வந்தார். குமாரன் பிதாவினிடத்தில் அன்பு கூர்ந்தார். பிதாவை நோக்கி ஜெபித்தார் (யோவான் 17). பிதாவை நீர் என்றும் அவர் என்றும் அழைத்தார். இருமுறை பிதாவானவர் அசரீரி வாக்காய் இவர் என் நேச குமாரன் என்றார்.
ஆகவே, நசரேயனாகிய இயேசு மெய்யான மனிதனாயும், அதே சமயத்தில் அவர் மெய்க்கடவுளாயுமிருந்தார். பிதாவுக்கு வேறுபட்டவர்.
திரித்துவம்
பிதாவையும், குமாரனாகிய கிறிஸ்துவையும் பற்றி நாம் ஆராய்ச்சி செய்து அத்துடன் நின்றுபோனால் நமது கிறிஸ்தவ அனுபவம் மிகவும் குறைவாகவேயிருக்கும். பரிசுத்த ஆவியானவரையும் ஓர் ஆள் என்றும் ஒரு தெய்வீக ஆள் என்றும் நாம் ஒப்புக்கொண்டு அறிவதே திருமறை உபதேசத்துக்கும் கிறிஸ்தவ அனுபவத்திற்கும் பொருந்தும். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வல்லமை எனக்கூறுவது போதாது. அவர் வல்லமை வாய்ந்த கடவுளாகவேயிருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் கடவுளது மூச்சு எனக்கூறுவது போதாது. அவர்தாமே மனிதருக்குள் தமது சுவாசத்தை நாசியிலே ஊதுகிற கடவுள். சில ஏழாம் நாள் சபையாரும் இன்னும் சில வேத வசனங்களுக்கு தவறான விளக்கமளிப்பவர்களும் பரிசுத்த ஆசியானவருக்கு ஆள்தத்துவமில்லை எனச்சாதிப்பார். எபேசுவில் பவுல் சந்தித்த பன்னிரண்டு பேர் பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை (அப் 19:2) என்று சொன்னதுபோல இன்றுள்ள கிறிஸ்தவ சபைகளில் ஏராளமானவர்கள் இவ்விதமாய்க்கூறும் நிலையில் இருக்கின்றனர். பரிசுத்த ஆவியானவர் ஓர் ஆள் என்பதைக்குறிக்கும் புதிய ஏற்பாட்டு வாக்கியங்களைக் கவனிப்போம். அவருக்கு அறிவு உண்டு. (1கொரி 2:10,11, எபே 4:30) அவருக்குச் சித்தமுண்டு (1கொரி 12:11) அவர் துக்கப்படக்கூடியவர் (எபே 4:30). அந்தியோகியா சபை மூப்பன்மாரோடு பேசினார் (அப் 13:2). முதல் மிஷனரிமார்களை அனுப்பினார் (அப் 13:4) தம்மால் அனுப்பப்பட்ட அந்த ஆதிகாலத்துப் பிரசங்கிமாரை அவர் நடத்தினார். (அப் 16:6,7) அப்போஸ்தலர் நடபடிகள் என்ற ஆகமத்தைப் பரிசுத்த ஆவியானவரின் நடபடிகள் எனக்கூறினாலும் தவறாகாது. இவ்வாகமத்தின் ஒவ்வொரு ஏட்டிலும் பரிசுத்த ஆவியானவர் செய்துவருகிற கிரியைகளை நாம் காண்கிறோம். அறிவு, சித்தம், ஆள்தத்துவம் இவைகளைப் படைத்திருப்பவர் மாத்திரம் செய்யக்கூடிய கிரியைகளைப் பரிசுத்த ஆவியானவர் செய்துகொண்டே வருகிறார். நாம் பரிசுத்த ஆவியானவரைக் கனம் பண்ணவேண்டும். பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாய்த் தூஷணம் சொல்பவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாவான் (மத் 12:31,32, மாற் 3:28,29) அவருக்குத் "தேற்றரவாளன்" என்றும் "சகாயர்"என்றும் வேறு பெயர்கள் சூட்டப்பட்டன. அவரைக் குறிக்கும்படி உயர்திணைப் பெயர்ச்சொற்களும், உரிச்சொற்களும் வழங்கப்படுகின்றன. "எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து நினைப்பூட்டுவார்" (யோவ 14:26), "உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்" (16:8) "உங்களை நடத்துவார்" (16:13). ஆகவே அவர் வெறும் காற்று அல்ல, தெய்வீக மூச்சு அல்ல, பரவசப்பேச்சுதான் பரிசுத்த ஆவியானவர் என்று கருதக்கூடிய நிலைக்க ஒரு சிலர் வந்துள்ளதாகத்தெரிகிறது. பரிசுத்த ஆவியானவர் வேறே: ஆவியானவரின் வரங்கள் வேறே. வரங்கள் பலவுண்டு, அவைகளை அளிக்கும் ஆவியானவர் ஒருவரே.
ஆள்தத்துவம் படைத்த பரிசுத்த ஆவியானவர் கடவுளாயிருக்கிறார். பிதா,குமாரன், எப்படி கடவுளாயிருக்கிறார்களோ, அதே அளவுக்குச் சரியாய் பரிசுத்த ஆவியானவரும் கடவுளாயிருக்கிறார். அவருக்கு அறிவு உண்டு என்று கண்டோம். அவருக்கிருக்கும் அறிவு கடவுளின் ஆழங்களையும் ஆராயக்கூடிய (2கொரி 2:9-13). சகல சத்தியத்திற்குள்ளும் சீடர்களை நடத்தக்கூடிய ஓர் அறிவு (யோவ16:13). இந்த அற்புத அறிவு கடவுளுக்கேயல்லாமல் வேறொருவருக்கும் இருக்காது. அவருக்கு வல்லமையுண்டு என்றறிந்தோம். அவருக்கிருக்கும் வல்லமை அற்புதங்களை நடப்பிக்கக்கூடிய வல்லமை(1கொரி 12:4-12) மீறுதல்களினாலும் பாவங்களினாலும் செத்துக்கிடக்கும் மக்களை மீண்டும் பிறப்பிக்கக்கூடிய வல்லமை (யோ 3:5, தீத்து 3:5) அசுத்தமான மக்களைப் பரிசுத்தமாக்கக்கூடிய வல்லமை (2தெச 2:13, 1பேதுரு 1:2) சாவுக்குரிய நமது சரீரங்களை உயிர்ப்பிக்கக்கூடிய வல்லமை (ரோம 8:11). இவ்வாறான சர்வவல்லமை கடவுளுக்கேயுரியது. எல்லாம் வல்ல பரிசுத்த ஆவியானவர் உலகெங்கும் உள்ள மக்களிடையே தமது கிரியைகளை நடப்பித்து வருகிறார் (சங் 139:7, 1கொரி 12:13). எங்கும் நிறைந்துள்ள கடவுளாவார், மேற்சொல்லிய இந்தப் பரிசுத்த ஆவியானவரே பரிசுத்த மனிதரை ஏவி, பரிசுத்த வேதஎழுத்துக்களை எழுதுவித்தார் (1பேது 1:21) அவைகள் தேவ ஏவுதலினால் அருளப்பட்டவை யாகும். (2தீமோ 3:16). பரிசுத்த ஆவியானவராகிய கடவுளே தாம் தெரிந்து பயிற்றுவித்த மனிதரைப் பயன்படுத்தி ஏவி அவர்களைக் கொண்டு திருமறை எழுத்துக்களை அருளினார்.
கடவுளாயிருக்கிற இந்தப் பரிசுத்த ஆவியானவர் பிதாவுக்கும் குமாரனுக்கும் வேறுபட்டவர் என்றறிக. பிதா அவரைச் சகாயராக அனுப்பித்தந்தருளினார் (யோவான் 14:16,26). இயேசுகிறிஸ்து உயிர்தெழுந்து பரத்துக்கேறின பிறகு தாம் விட்டு வந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்க அவரை அனுப்பினார் (யோவான்15:26). கிறிஸ்தவ ஆராதனையின் இறுதியில் கூறும் ஆசீர்வாத ஜெபத்திலும், ஞானஸ்நான அறிக்கையிலும் அவர் வெறுபட்டவராய்க் குறிப்பிடப்பட்டார் (மத் 28:19, 2 கொரி 13:14). இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றபோது பிதாவானவர் பரலோகத்திலிருந்து அசரீரி வாக்காய்ப்பேசவே பரிசுத்த ஆவியானவர் புறா ரூபங்கொண்டு இறங்கிக் தண்ணீரைவிட்டுக் கரையேறிய ஆண்டவர் பேரில் அமர்ந்தார்(மத் 3:16,17). கடைசியான பரிசுத்த ஆவியானவருக்குத் தனி வேலையுண்டு. அனாதி காலத்திலும் எண்ணிறந்த மக்களைத்தெரிந்து, அவர்களில் அன்புக்கொண்ட பிதா நமக்கு எட்டாத் துயரத்தில் இருக்கிறவராகவே இருக்கலாம். மனிதரில் மனிதராய் நமது மத்தியில் பிறந்து வாசஞ்செய்த இயேசு முதலாய் நமக்குத் தூரமானவராகக் காணப்படலாம். அவர் வந்து இரண்டாயிரம் ஆண்டுகளாயின, அன்றோ? அவர் நம்மைவிட்டுப் பிரிந்து பரலோகம் போய்விட்டார். அன்றோ? மேற்சொல்லியவாறு நமக்குச் சற்றுத் தொலைவாகத் தோன்றும் பிதாவையும், குமாரனையும் நமக்குப் பக்கமாகக்கொண்டு வந்து காட்டி மகிமைப்படுத்துவது பரிசுத்த ஆவியானவரின் செயல். அவர் நமது உள்ளங்களில் செயலாற்றிப் பாவத்தை உணர்த்தி (யோ 16:8-11). கடவுள் தெரிந்துகொண்டவர்களை மறுபடியும் பிறப்பித்து, அவர்களுக்கு அருளூட்டிப் பரிசுத்தப்படுத்தி அவர்களை இயேசுவின் சாயலாக மாறும்படி செய்கிறார். திருமறை எழுத்துக்களையும், பதங்களையும் எழுதுவித்தவர் அவரே, நமக்குள் வாசஞ்செய்து தாம் எழுதுவித்த மறைபொருளை நமக்கு விளங்கச்செய்து வருபவரும் அவரேயாவார். ஆகவே, பரிசுத்த ஆவியானவர் ஆள்பண்பு படைத்தவரும், மெய்க்கடவுளாகவுமிருக்கிறார். அவர் நம் உள்ளங்களில் குடிகொண்டிருந்து நம்மை நாள்தோறும் கிறிஸ்து இயேசுவுக்கு ஒப்பாக மறுரூபப்படுத்தி வருகிறார்.
ஒருவகையில் கடவுள் ஒருவராயிருக்கிறார் என்றும் வேதாகமம் கூறுகிறது. மூவராயிருக்கிறார்என்றும் வேதாகமம் கூறுகிறது. மூவருக்கும் கடவுள் என்று பெயரிட்டு மூவரையும் நாம் வழிப்படக் கடமைப்பட்டவர்களே, பிதாவாகிய கடவுள் என்றும், குமாரனாகிய கடவுள் என்றும், பரிசுத்த ஆவியானவராகிய கடவுள் என்றும் கூறுவது சரி. எனினும் இந்த மூவரை மூன்று தேவர்கள் என்று அழைப்பதும், நினைப்பதும் தவறாகும். இயேசு சீஷராக்கப்பட்ட விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக்கட்டளையிட்டபோது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமங்களிலே என்று கூறாமல் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினாலே கொடுக்கும்படி கட்டளை கொடுத்தார். மேற்படி திரித்துவ உபதேசம் இரட்சிப்புக்கு அவசியமானது. பொதுமக்கள் யாவரும் இந்தக் கருகலான உபதேசத்தில் மிக நுட்பமான விவரங்களையெல்லாம் உற்றாராய்ந்து அறிய வேண்டுமென்பது கருத்தல்ல. எனினும் உண்மையான விசுவாசிகள் தாங்கள் பிதாவின் அனாதி அன்பினாலும், குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் திருகரத்தினாலும் பரிசுத்த ஆவியின் வல்ல செயலாலும் இரட்சிக்கப்பட்டாயிற்று என்று அறியவேண்டும். இந்த மூவகை அறிவும், இந்த மூவகை அனுபவமும் இன்றியமையாத அவசியம். பிதாவின் அனாதி அன்பை உணராதவன் கிறிஸ்தவனல்ல, "நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்" என்று சொல்ல இயலாதவன் கிறிஸ்தவனல்ல, பரிசுத்த ஆவியானவர் வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு தனக்குள் வேண்டுதல் செய்கிறார் என்று உணர்ந்து அனுபவிக்காதவன் கிறிஸ்தவனல்ல. திரித்துவம் இரட்சிப்புக்கும், கடவுளை அறிகிற அறிவுக்கும் நமது பரிசுத்த கிறிஸ்தவ ஜீவியத்திற்கும் அவசியமாயிருக்கிறதென்பது தெளிவு.
கடவுள் அன்பாயிருக்கிறார் என்ற சத்தியத்தை விளங்கச்செய்வது இந்த திரித்துவக் கொள்கையே. இன்று அன்பாயிருக்கிற கடவுள் என்றுமே அன்பாயிருந்திருக்க வேண்டும். மக்கள், தேவதூதர் முதலிய படைப்புகள் இல்லாததற்கு முன் அவர் எப்படி அன்பாயிருக்க முடிந்தது? யாரிடம் அன்பு கூர்ந்திருப்பார்? நாம் வழிபடுகிற கடவுள் நித்தியமாய் ஏகவாசம் செய்து தம்மை மட்டும் நினைக்கும் ஓர் ஏகனல்ல. ஏகத்துவத்தில் ஒன்றாயிருந்த மூவர் ஒருவரிடத்தில் ஒருவர் அனாதி காலத்தில் அன்பாயிருந்தனர். புத்திர பாக்கியமில்லா இல்லத்தில் கணவன், மனைவி ஒருவரில் ஒருவர் எப்படி அன்பாயிருக்கிறார்களோ, அப்படியே உலகம் உண்டாவதற்கு முன் மேற்சொல்லிய மூவருக்குள்ளும் நிகரற்ற அன்பும், ஏக ஐக்கிய நட்பும் இருந்தது. குமாரன் நித்தம் பிதாவுக்கு மனமகிழ்ச்சியாயிருந்தார். அனாதி காலம் முதல் எப்பொழுதும் அவர் சமூகத்தில் களிகூர்ந்தார் (நீதி 8:30) கடவுள், தன்மையில் ஒருவர், ஆள்தத்துவத்தில் மூவராயிருக்கிறார் எனக்கூறுவது மெய்யான வேத உபதேசமாகும்.
திரித்துவம்
இந்த மறைப்பொருளைப்பற்றிய வேத உபதேசம் என்ன என்று ஆராய்ச்சி செய்து முடித்தோம். எனினும் இது சம்பந்தமாகத் தோன்றிய சில தவறான கொள்கைகளை நாம் கவனிப்பது நலம். கள்ள உபதேசங்கள் மூவகைப்படும்.
1.கிறிஸ்துவுக்குப்பின்னர் ஆரம்ப நூற்றாண்டுகளில் விக்கிரக வணக்கத்தாரின் இடையே வசித்து வந்த கிறிஸ்தவர்கள், பல தெய்வ வணக்கத்தை எதிர்க்கத் தெய்வீக ஏகத்துவத்தை மிஞ்சி வற்புறுத்திப் போதித்தனர். அவ்வாறு போதித்ததின் விளைவாகக் கடவுள் தன்மையில் மட்டுமல்ல ஆள் தத்துவத்திலும் ஒருவர்: பிதா, குமாரன், பரிசுத்தாவி கடவுளது மூன்று பணிகளைக் குறிக்குமேயல்லாது மூன்று ஆள்களைக் காட்டுகிறதில்லை, கடவுள் சில பணிகளை ஆற்றுகிறபோது பிதா என்றும், இன்னும் வேறெ அலுவல்களை வகிக்கவே பரிசுத்த ஆவியானவர் என்றும் அழைக்கப்படுவார். கடவுள் சில வேளைகளில் தம்மைப் பிதாவாகவும், சில வேளைகளில் குமாரனாகவும், வேறெ சில வேளைகளில் ஆவியானவராகவும் வெளிப்படுத்திச் சித்தங்கொண்டார். அவர் எப்பொழுதும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற ஒரு திரியேக கடவுள் அல்லர், மூவாள்களை ஒரே தெய்வத்தின் மும்முகங்களாக நினைப்பார்கள். மூன்று நாமங்கள் ஒரே தெய்வீக பொருளின் பற்பல தோற்றங்களைக் குறிக்கின்றன என்ற கொள்கை பரவிற்று. மேற்படி கருத்து தவறானது. ஒரே கடவுள் எப்பொழுதும் மூவராயிருந்தார். எப்பொழுதும் மூவராயிருந்திருக்கவேண்டும் என்று வேதாகமம் தெளிவுப்படுத்திப் போதிக்கிறது.
2.மேற்சொல்லிய தப்பெண்ணத்தை நிராகரிக்க இன்னொரு வகையார் திரித்துவ ஆள்களின் வேற்றுமைகளை மிதமிஞ்சி வற்புறுத்தியதால், திரித்துவத்தின் ஒருமைப்பாட்டைப் பிரித்துவிட்டார்கள்."குமாரன் தேவனாயிருந்தும் பிதாவிலும் சிறியவர்" என்று போதித்தனர். இந்த போதனைக்கு ஆதாரமாகத் தோன்றும் சில வாக்கியங்கள் வேதாகமத்தில் உண்டு (யோவான் 5:19,8:28,14:28). குமாரன் தாமே மனப்பூர்வமாய் நடுவர் பணிக்கென தெரிந்துகொண்ட தாழ்ந்த நிலையை இந்த வாக்கியங்கள் குறிக்கும். அவை திரித்துவத்தின் இரண்டாம் ஆளுடைய அனாதிநிலையைக்குறிக்கும் வாக்கியங்கள் அல்ல. முதலாம் ஆள் என்றும், இரண்டாவது ஆள் என்றும், மூன்றாம் ஆள் என்றும் கூறுவது தப்பான எண்ணத்திற்கு ஏதுவாயிருக்கலாம். இந்த மறைப்பொருளை விளக்க ஓர் எடுத்துக்காட்டு உண்டு. எனினும் எடுத்துக்காட்டு ஒப்பனை, திருஷ்டாந்தம் எவ்வளவு இசைவானாலும் ஒவ்வொரு விவரத்திலும் இசையும் என்று நாம் எதிர்ப்பார்க்கக்கூடாது ஒன்பது கோடி மைல் தூரத்தில் ஒளி வெப்பம் நிறைந்த பெரிய உருண்டை இருக்கிறது. அதற்குச் சூரியன் என்று பெயர். ஒளியும், வெப்பமும் இடைவிடாது சூரியனிலிருந்து புறப்பட்டு வருகின்றன. ஒளியைக்காண்கிறோம், வெப்பத்தை உணருகிறோம். ஆகவே, சூரியன் ஒருவகை திரித்துவம் எனலாம். சூரியன், ஒளி, வெப்பம் என்று கூறலாம். ஒளியில்லாத காலம் சூரியனுக்கு இல்லை. எனினும் இயல்பாக சூரியனை முதல் ஊற்று என்றும், ஒளி அதினின்று உண்டாகின்ற இரண்டாவது பொருள் என்றும் கூறுவோம். குமாரன் இல்லாத ஒரு காலம் இருந்திருக்காது, நித்தியத்திலும் வல்லமையிலும் குமாரன் பிதாவுக்கு நிகரானவர் என்றாலும், தெய்வத்தின் ஊற்றாகிய பிதாவினின்று அவர் எப்பொழுதும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமையால், பிதாவை முதலாம் ஆள் என்றும் குமாரனை இரண்டாம் ஆள் என்றும் கூறுவது தவறல்ல. சூரியனை நாம் காண இயலாததுபோல பிதாவையும் நாம் காணமுடியாது. "ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவர். மனிதர் ஒருவரும் காணாதவர், காணவும் முடியாதவர்...." (1 தீமோ 6:16).சூரியனிலிருந்து வீசும் ஒளிக்கதிர்களைக்கொண்டே சூரியன் உண்டு என்று தெரிந்து ஓரளவில் நாம் பொழுதைக் காணலாம். பிதாவினின்று வந்துகொண்டேயிருக்கிற அவருடைய குமாரன் மூலம் நாம் பிதாவை அறியலாம். அவரை ஓரளவாகக் காணமுடியும். "என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்"(யோ 14:9). சூரியனின் வெப்பத்தை நாம் காணமுடியாது. எனினும் அதை நாம் உணருகிறோம். அதனால் உண்டாகும் நன்மை தீமைகளை நாம் காணமுடியும். அதுபோல பரிசுத்த ஆவியானவரை நாம் காணமுடியவிட்டாலும், அவரது வெப்பத்தை நாம் நமது உள்ளங்களில் உணர்ந்து, பிறருடைய வாழ்க்கையில் அவரால் உண்டாகும் அதிசய மாறுதல்களை நாம் காணமுடியும்.
3.பிதாவையும், குமாரனையும், பரிசுத்த ஆவியானவரையும் மூன்று தேவர்கள் என்றழைப்பது மூன்றாவது தவறான உபதேசம் ஆகும். இந்த திரித்துவத்தின் ஏகத்துவத்தை மறுத்துப் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆள்தத்துவத்தில் மட்டுமன்று, தன்மையிலும் மூவராயிருக்கிறார்கள் எனக் கூறுகின்றனர். பிதா எப்பொழுதும் குமாரனுக்குப் பிதாவாயிருப்பார். ஒரே பேறான குமாரன், பெற்றோரால் ஒரேமுறை பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார். அது ஒரு நித்தியகால நிகழ்ச்சி. பிதாவுக்கும், குமாரனுக்கும் உள்ள ஐக்கியம் நித்தியமானது. அத்தன்மைபோலப் பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் பிதாவிலும், குமாரனிலும் இருந்து புறப்பட்டுக்கொண்டே இருக்கிறார். இந்த வேதஉபதேசம் நம் அற்பபுத்திக்கு விளங்காததாயினும், நாம் அதன் காரணமாக இதை மறுக்கக்கூடாது. நாம் இதை மறுத்தால் ஒருவேளை நம்மை அறியாமலே மூன்று தேவர்களை வணங்குபவர்கள் ஆவோம். எடுத்துக்காட்டாக, ஒரு சிறு சதுர பெட்டியைக் கையில் எடுத்துக்கொள்ளவும். அந்தப்பெட்டியின் நீளம் ஓர் அங்குலம், அதன் அகலம் ஓர் அங்குலம், அதன் உயரம் ஓர் அங்குலம் என்று வைத்துக் கொள்ளவும். அதாவது இந்தச் சிறுபெட்டி ஒருவகை திரித்துவமாகும். அதுவுமின்றி அந்தத் திரித்துவம் இன்றியமையாததாகும். அன்றோ? மேற்படி மூன்றில் ஏதாவது ஒன்று இல்லாதுபோனால் அது பெட்டியாகாது. ஒரு பெட்டிக்கு நான்கு அளவுகள் இருக்கமுடியாது. இரண்டு அளவுகள் மட்டும் போதாது. அதுபோல தெய்வீகத் திரித்துவத்தில் மூவர் எப்பொழுதும் இருந்திருக்கவேண்டும். நால்வர் இருக்கமுடியாது. இருவர் மட்டும் இருந்தால் கடவுளாயிருக்கமாட்டார். அதே சமயத்தில் இன்றியமையாத மூன்று அளவுகள் கொண்ட இந்தப்பெட்டி ஒரே பெட்டியாயிருக்கிறது. பெட்டியின் நீளம் பெட்டியின் ஒரு பாகமாயிருக்கிறது என்று நாம் கூறமுடியாது. முழுப்பெட்டியும் அதன் நீளத்தில் உண்டு. முழுப்பெட்டியும் அதன் அகலத்தில் உண்டு. முழுப்பெட்டியும் அதன் உயரத்திலும் உண்டு. அதுபோல கடவுளின் பரிபூரணம் பிதாவிலும் உண்டு, குமாரனிலும் உண்டு, பரிசுத்த ஆவியானவரிலும் உண்டு.
நீளம் X அகலம் X உயரம் = பரப்பளவு
1 X 1 X 1 = 1
பிதா X குமாரன் X ஆவி = ஒரே கடவுள்.
இன்னும் உதாரணமாக, காலத்தைக் கவனித்துக்கொள்வோம். காலம் ஒன்றே: அதே சமயத்தில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூவகைப்படும். மூன்று காலங்கள் மட்டும் உண்டு. மூன்றுக்கு மேலே காலங்கள் அதிகமாயிருக்க முடியாது. மூன்றுக்குத் குறையவும் இயலாது. ஆகவே, இதுவும் ஒரு திரித்துவம் எனலாம். எதிர்காலத்தை நாம் காணமுடியாது. எதிர்காலத்து இரகசியங்கள் நிகழ்காலத்தில் காணப்பட்டாலொழிய மற்றபடி நமக்குத் தெரியாது, எதிர்காலம் தொடர்ச்சியாய் நிகழ்காலத்தைப் பிறப்பித்துக்கொண்டு தன்னை நிகழ்காலத்திலும், நிகழ்காலத்தைக்கொண்டு வெளிப்படுத்திக்கொண்டே வருகிறது. அவ்வாறே நாம் பிதாவைக் காணமுடியாது. எனினும் பிதாவானவர் பிறப்பித்துக்கொண்டு வருகின்ற குமாரனிலும் குமாரனைக்கொண்டும் நாம் பிதாவை அறியலாம். நிகழ்காலம் இறந்த காலமாக மாறுகிறபோது மீண்டும் புலப்படாததாகும். எனினும் இறந்தகாலத்து வரலாறு கற்பிக்கும் பாடங்களைப் படித்து நாம் நிகழ்காலத்தின் பிரச்சனைகளைத் தீர்க்கலாம். எதிர்காலத்தின் சகல பிரச்சனைகளையும் தீர்க்க இறந்தகாலம் நம்மை ஆயத்தப்படுத்தும். பரிசுத்த ஆவியானவரை நாம் காணமுடியாது. எனினும் அவர் எப்பொழுதும் குமாரனாகிய கிறிஸ்துவின் காரியங்களில் எடுத்து நமக்க அறிவிப்பார். கடவுளைச் சந்திக்க நம்மை ஆயத்தப்படுத்துவார். மேலே சொல்லியபடி திரித்துவத்தைப் பற்றிய வேத உபதேசம் வெறும் சொற்பொழிவன்று. நமது நித்திய இரட்சிப்புக்கு அவசியமான மூல உபதேசமாயிருக்கிறது. இரட்சிப்புக்குரிய திரித்துவ செயல்கள் கீழ்க்காணுமாறு அமைகின்றன.
பிதா கணக்கில்லாத மக்களைத் தெரிந்துக்கொண்டார். (எபே 1:3-6), குமாரன் அம்மக்களுக்காகத் தம் இரத்தஞ்சிந்தினார். பரிசுத்த ஆவியானவர் அவர்களை உயிர்ப்பிக்கிறார் அல்லது பிதா உலகின் தோற்றத்திற்குமுன் நம்மைப்பெயர் சொல்லி முன் குறித்தார். குமாரன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நமக்காக மாண்டார். பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது நமக்குள் கிரியை நடப்பித்துக்கொண்டு வருகிறார். மேற்சொல்லிய சுருக்கம் ஓரளவுக்கு மட்டும் பயன்படும். திரித்துவத்தின் மூவர் மக்களது இரட்சிப்பின் செயலாற்றும் மூன்று வகைகள் என்று நாம் எண்ணலாகாது. அவ்வாறு எண்ணுவது மக்களையே நடுமையமாகப் பாவிப்பதாகும். மனிதனை நடுமத்தியில் நிலை நிறுத்துவது தவறு. கடவுள் மக்களை இரட்சிக்கக் கடமைப்பட்டவர் அல்லர். மக்களை இரட்சிக்க ஒரே கடவுள் மூவராய்த் தோன்றினார் இல்லை. ஒரே கடவுள் அனாதிகாலமாய்ப் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராகிய மூவராயிருந்தார். அவர் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூறும் மூவராயிருக்கின்றமையால் அவர் இரட்சிக்கச்சித்தங் கொண்டதுமல்லாமல் இரட்சிக்கும் செயலில் அதிக மகிழ்ச்சிகொள்ளும் கடவுளாவார்.இரட்சிப்பு என்ற திட்டத்தில் மூவரும் ஒருமனப்பட்டிருந்தார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. கடவுள் அன்பாயிருக்கிறார். திரித்துவம் மாறாத அன்பு நிரம்பிய ஓர் ஐக்கியம். இந்த அன்பு வழிந்தோடி நம்மையும் இந்தத் தெய்வீக ஐக்கியத்தில் கொண்டு வந்து சேர்க்கச் செயாற்றிவருகிறது. அவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கவும், நீர் என்னிலும் நான் உம்மிலும் இருக்கிறதுபோல, அவர்கள் நம்மிலிருக்கவும் வேண்டிக் கொள்ளுகிறேன். (யோவான் 17:21).