வேதாகம வரலாறுகள்

யோவான் எழுதின சுவிசேஷம்

தலைப்பு:

சுவிசேஷம் என்று பெயர்பெற்று நற்செய்தியை அறிவிக்கும் புத்தகங்களின் வரிசையில், இந்த நான்காம் சுவிசேஷ புத்தகம், இதர சுவிசேஷ புத்தகங்களைப் போலவே தலப்பினைப் பெற்றுள்ளது. யோவான் எழுதின புத்தகம் என்றே முதலில் பெயர் இருந்தது; பின்நாட்களில் சுவிசேஷம் என்ற வார்த்தையானது சேர்க்கப்பட்டது. 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

சுவிசேஷ புத்தகத்தில் ஆசிரியரின் பெயர் எங்கும் காணவில்லை, ஆதிதிருச்சபையின் பாரம்பரியம் வலுவாக, தொடர்ச்சியாக இப்புத்தகத்தை எழுதியது - அப்போஸ்தலர் யோவான் தான் என அடையாளம் காட்டுகிறது. ஆதிதிருச்சபை தந்தை இரனேயஸ் என்பவர் (கி.பி.130-200), பால்கார்ப் (கி.பி.70-160) என்பவரின் சீஷர், இவர் அப்போஸ்தலர் யோவானின் சீஷரும் ஆவார். யோவான் தமது சுவிசேஷ புத்தகத்தை அவரின் வயது முதிர்வடைந்த நாட்களில், ஆசியா கண்டத்தில் இருக்கும் எபேசு பட்டணத்தில் தங்கியிருக்கும் போது எழுதினார் என பால்கார்ப் அதிகாரத்தில் சாட்சியாக கூறுகிறார். இரனேயஸுக்குப்பின் வந்த திருச்சபை தலைவர்கள் யாவருமே இச்சுவிசேஷ புத்தகத்தின் ஆசிரியர் யோவான் தான் என ஏற்றுக்கொண்டனர். அலெக்சந்திரியாவின் கிளமெண்ட் (கி.பி.150-215) – யோவான் - மற்ற சுவிசேஷ புத்தகங்களில் இருக்கும் உண்மைகளை நன்கு உணர்ந்தவராக இருப்பினும் பரிசுத்த ஆவியானவரால் ஒரு “ஆவிக்குரிய சுவிசேஷம்” எழுதும்படிக்கு வழிநடத்தப்பட்டார். 

சுவிசேஷங்களின் உள்ளான தன்மை ஆதிதிருச்சபையின் பாரம்பரியங்களை வலுப்படுத்துவது ஆகும். சினாப்டிக் சுவிசேஷங்கள் – அதாவது ஒன்று சேர்த்து பார்க்கவேண்டும் என்னும் மத்தேயு, மாற்கு, லூக்கா சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் யோவான் என ஏறக்குறைய 20 முறை யோவானுடையப் பெயரைச் சொல்லி அழைக்கின்றனர். ஆனால், யோவான் சுவிசேஷத்தில் ஒருமுறை கூட நேரடியாக அவரது பெயர் சொல்லி அழைக்கப்படவில்லை. மாறாக, ஆசிரியர் தன்னை ”இயேசுவிற்கு அன்பானவனாயிருந்தவன்” என அடையாளப்படுத்திக் கொள்கிறார் (13:23; 19:26; 20:2; 21:7,20). இந்த சுவிசேஷத்தில் ஏனைய சீஷர்களின் பெயர் அழைக்கப்படுவதாக இருந்த போதிலும்,யோவானின் பெயர் நேரடியாக ஒருபோதும் எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேரடியாக தன்பெயரை அழைத்துக்கொள்ளாமலும், ”இயேசுவிற்கு அன்பானவனாயிருந்தவன்” எனவும் தன்னை யோவான் அழைப்பதில் இருந்து அவருடைய தாழ்மையையும் அவர் ஆண்டவர் இயேசுவோடு கொண்டிருந்த உறவினைக் கொண்டாடும் இடத்தில் வைக்கிறார் என்பதையும் காட்டுகிறது.

முதலில் இச்சுவிசேஷத்தை வாசித்தவர்கள் யோவான் தான் இதன் ஆசிரியர் என்பதை புரிந்திருந்தனர் என்பதால் எங்கேயும் யோவானின் பெயர் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. அதிகாரங்கள் 20,21-ல் இயேசு உயிர்த்தெழுந்த நாட்களுக்குபின் நடந்த சம்பவங்களைக் கண்டவர் - “இயேசுவிற்கு அன்பான சீஷன்” என்று தன்னை அழைத்துக்கொண்டவர் ”அப்போஸ்தலர் யோவான்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாக காண்கிறோம் (21:24; 21:2). யோவான் சுவிசேஷ ஆசிரியர் அனைத்து நபர்களின் பெயரை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். ஒருவேளை அப்போஸ்தலர் யோவான் அல்லாமல் வேறு ஒருநபர் இதன் ஆசிரியர் என்று எடுத்துக் கொள்வேமானால் அவர் யோவானின் பெயரை குறிப்பிடாது இருந்திருக்க மாட்டார். எனவே அப்போஸ்தலர் யோவான் தான் இச்சுவிசேஷத்தின் ஆசிரியர் என்று நிச்சயமாகிறது.

மற்ற சுவிசேஷ புத்தகங்களை ஒப்பிடும்போது, முற்றிலும் வேறுபட்ட உள்ளடக்கம் கொண்ட சுவிசேஷபுத்தகம் மற்றும் ஆதிதிருச்சபையின் ஏகமனதான சம்மதத்தை பெறும் சுவிசேஷம் - எழுதுவதற்கு விஷயங்களை நன்கு அறிந்த மற்றும் முதன்மையான அதிகாரம் பெற்ற அப்போஸ்தலர் போன்ற அந்தஸ்தில் இருப்பவர் மட்டுமே எழுத முடியும் என்ற காரணம் - யோவான் சுவிசேஷ புத்தக ஆசிரியரின் பெயரை நேரடியாக புத்தகத்தில் இருந்து அறிந்து கொள்ள முடியாமல் இருந்தாலும், யோவான் தான் இதன் ஆசிரியர் என்னும் கருத்தை மிகவும் வலுப்படுத்துகிறது. விலக்கப்பட்ட நற்செய்தி நூல்கள் என்று இரண்டாம் நூற்றாண்டின் மைய்ய நாட்களில் தொகுத்து தரப்பட்டவை அப்போஸ்தலர்களுக்கோ அல்லது இயேசுவுடன் பிரபலமாக இருந்தவர்களின் பெயருடன் இணைத்துச் சொல்லப்பட்டாலும், அகில உலகத்திலும் இருக்கும் திருச்சபையால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. 

”செபதேயுவின் குமாரர்கள்”  (மத்.10:2-4) என்று அறியப்பட்ட யோவான் மற்றும் யாக்கோபு சகோதரர்களுக்கு இயேசு – இடிமுழக்க மக்கள் (மாற்கு 3:17) என்று பெயர் தந்திருந்தார். யோவான் ஓர் அப்போஸ்தலர் (லூக்கா : 6:12-16), மேலும் இயேசுவிற்கு மிக நெருக்கமாக இருந்த மூவர் – பேதுரு, மற்றும் யாக்கோபு உடன் இவரும் ஒருவர் (மத்.17:1; 26:37). அதாவது இயெசுவின் பூலோக ஊழியத்தின் கண் கண்ட சாட்சிகள் மற்றும் அதில் பங்குபெற்றவர் (1யோவான்:1:1-4). கிறிஸ்து பரம் ஏறினவுடன், எருசலேம் திருச்சபையில் யோவான் ஒரு “தூண்” ஆக மாறிவிட்டார் (கலா.2-9).  எருசலேம் தேவாலயம் இடிக்கப்படுவதற்கு முன், எபேசுவிற்கு புறப்பட்டுச் செல்வது வரை பேதுருவுடன் சேர்ந்து ஊழியம் செய்தார் (அப்.3:!; 4:13; 8:14). எபேசுவில் இருந்த போது இச்சுவிசேஷ புத்தகத்தை எழுதினார். அங்கிருந்து பின்னர் ரோம போர்வீரர்கள் யோவானை பத்முதீவிற்கு நாடு கடத்தினர் (வெளி.1:9). இந்த சுவிசேஷ புத்தகத்தை (கி.பி.80-90), மட்டுமல்லாமல், 1-3 யோவான் நிருபம் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் (வெளி:1-1) புத்தகத்தையும் அப்போஸ்தலர் யோவான் எழுதினார். 

ஆதி திருச்சபை தலைவர்களின் எழுத்துக்களில் யோவான் தமது வயது மூப்படைந்த காலத்தில் இந்த சுவிசேஷத்தை எழுதியிருக்கலாம் எனவும், யோவானுக்கு ஒன்று சேர்த்து பார்க்கவேண்டிய மூன்று சுவிசேஷங்களை (மத்தேயு, மாற்கு, லூக்கா- சினாப்டிக் சுவிசேஷங்கள்) நன்குத் தெரியும் எனச் சுட்டிக்காட்டுகின்றனர். அனேகர் இந்த மூன்று சுவிசேஷங்களுக்குப் பின் யோவான் சுவிசேஷம் எழுதப்பட்டது எனவும் 1-3 யோவான் நிருபங்கள் மற்றும் வெளிப்படுத்தலின் புத்தகம் எழுதுவதற்கு முன் எழுதப்பட்டது என்கின்றனர். யோவான் இந்த சுவிசேஷத்தை கி.பி.80-90ல் அதாவது ஏறக்குறைய 50 வருடங்கள் அவர் இயேசுவின் பூலோக ஊழியத்தை கண்கண்ட சாட்சியாக அறிந்த நாட்களுக்குப் பின்வரும் நாட்களில் எழுதினார். 

பின்னணி மற்றும் அமைப்பு

யோவானின் பின்னணி மற்றும் வாழ்க்கையுடன் சிறப்பம்சமாக அவர் ஒன்று சேர்த்துபார்க்க வேண்டியது - சுவிசேஷங்கள் (சினாப்டிக் சுவிசேஷங்கள்) பற்றி அறிந்திருந்தார் என்பது. ஆண்டவருடைய வாழ்க்கையின் தனித்தன்மையான நிகழ்வுகளின் ஆதாரங்களை குறிப்பிட்டு (”ஆவிக்குரிய சுவிசேஷம்”) எழுத வேண்டும் என்பதினாலும், மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷங்களுக்கு துணையாகவும், அவற்றினை பாராட்டும் விதத்திலும் இந்த சுவிசேஷத்தை எழுதினார். 

யோவான் சுவிசேஷத்தின் தனித்தன்மையே அவர் எழுதியதின் நோக்கத்தை பலப்படுத்துகிறது. முதலில், யோவான் மற்ற சுவிசேஷங்களில் குறிப்பிடாத அனேக தனிப்பட்ட விஷயங்களை தமது சுவிசேஷத்தில் வழங்கினார். இரண்டாவது, நாம் சினாப்டிக் சுவிசேஷங்களில் வாசிக்கும் சம்பவங்களை புரிந்து கொள்ள உதவும் விஷயங்களையும் தந்தார். உதாரணமாக, சினாப்டிக் சுவிசேஷம் இயேசுவின் ஊழியம் கலிலேயா பகுதியில் ஆரம்பித்தது எனக் குறிப்பிடும் போது – அதற்கு முன்னும் இயேசு பணிகள் பெற்றிருந்தார் என்பதனை சுட்டிக்காட்டும் (உதாரணம் மத்.4:12; மாற்கு 1:13). இயேசு யூதேயாவிலும் சமாரியாவிலும் செய்த ஊழியத்திற்கு முன் அவர் செய்த பணிகள் குறித்த தகவல்களை யோவான் (அதிகாரம் 3 மற்றும் 4ல்) பதிலாக அளித்தார். மாற்கு 6:45ல் நாம் காண்பது 5000 பேரை இயேசு போஷித்த பின் இயேசு தமது சீஷர்களை கலிலேயா கடலைக் கடந்து பெத்சாயிதாவிற்குச் செல்லும்படி கட்டளையிடுகிறார். 

யோவான் அதற்கு காரனத்தை எழுதுகிறார் – இயேசு அற்புதமாக அனேகரை போஷிக்கும்படி அப்பங்களைப் பெருகச்செய்தபடியால் ஜனங்கள் அவரை ராஜாவாக ஏற்படுத்தும்படி திட்டம் தீட்டினர். அவர்கள் தவறான நோக்கத்தோடு எடுத்த முயற்சிகளைத் தவிர்க்கும்படிக்கு இயேசு அப்படிச் செய்தார் (6:26). மூன்றாவது யோவான் சுவிசேஷ புத்தமே ஏனைய சுவிசேஷபுத்தகங்களைக் காட்டிலும் அதிகமான இறையியல் கருத்துக்கள எடுத்துச் சொல்லும் புத்தகம். உதாரணமாக, மிக ஆழமான இறையியலை மைய்யமாக கொண்ட முன்னுரையை பெற்றுள்ளது (1:1-18), யோவான் சொல்லக்கூடிய விபரங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது, உபதேசங்களும் சொற்பொழிவு கருத்துக்களும் மிக அதிக அளவில் இருக்கின்றன (3:13-17). மிக அதிக அளவில் பரிசுத்த ஆவியானவர் பற்றிக் கற்றுத்தருகிறது (14:16,17,26: 16:7-14). யோவான் இதர மூன்று சுவிசேஷ புத்தகங்களை நன்கு தெரிந்து வைத்து இருந்தபடியால் அவைகளை மனதில் நிறுத்திக்கொண்டு அவைகளுக்கு ஏற்ப தன் சுவிசேஷத்தை வடிவமைத்தார். மட்டுமல்ல, யோவான் தன் சுவிசேஷத்தை எழுதுவதற்கு வேண்டிய தகவல்களுக்கு -மற்ற சுவிசேஷங்களை சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லாதிருந்தது. மாறாக, பரிசுத்த ஆவியானவரின் உந்துதலின்படி, அவர் தமது சொந்த ஞாபகத்தையே – சுவிசேஷத்தை எழுதுவதற்கு பயன்படுத்தினார் (1:14; 19:35 ;21:24).

லூக்கா எழுதின சுவிசேசத்திற்கு அடுத்து ஆசிரியரின் நோக்கத்தை (1:1-4) துல்லியமாகச் சொல்வது யோவான் சுவிசேஷம் இரண்டாவது இடத்தில் உள்ளது (20:30,31). யோவான் 20:31ல் “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது என பலர் அறியக் கூறுகிறார். ஆகையால், முதன்மையான நோக்கங்கள் இரண்டு:                1.சுவிசேஷத்தை அறிவித்தல் மற்றும் தவற்றில் இருந்து மனம்திரும்பி மன்னிப்பை பெற்றுக்கொள்வது; “விசுவாசி” என்ற வார்த்தை 100 தடவைக்கும் மேலாக இந்த புத்தகத்தில் காணப்படுவது   சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு முதலிடம் இந்த புத்தகம் தருகிறது என்ற கருத்திற்கு வலுவூட்டுகிறது. சினாப்டிக் சுவிசேஷ புத்தகங்கள் (மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா) மூன்றும் சேர்ந்தே இதன் பாதி எண்ணிக்கை அளவில் கூட ”விசுவாசி” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தனது நற்செய்தியை வாசிப்போர் – இரட்சிப்புக்கு நேராக வழிநடத்தும் விசுவாசத்தைப் பெற்று, அதன் விளைவாக அவர்கள் தெய்வீக பரிசாகிய நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளத் (1:12)  தேவையான காரணங்களக் கூறி யோவான் தன்னுடைய சுவிசேஷத்தை எழுதினார். 

மனந்திரும்புதல், சுவிசேஷத்தை அறிவித்தல் என்ற நோக்கத்துடன் மிக நெருக்கமாகத் தொடர்புடையது. இயேசுவின் மெய் அடையாளம் அவர் தேவன் - மனுஷனாக வெளிப்பட்டவர் (அவதரித்தவர்) என்பதை அவரின் சுவிசேஷத்தை வாசிப்போர் விசுவாசிக்க ஏதுவானவற்றை யோவான் எழுதினார். இயேசுவின் தெய்வீக மற்றும் மனுஷ குணங்கள் பூரணமாக இரண்டற கலந்து இருப்பது ஒரே மனுஷருக்குள் இருப்பதைக் காணவும் – இவரே உலகின் இரட்சகர் - வருவார் என்று  தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்டவர்; இவரே மேசியா (கிறிஸ்து) என்று அறிந்துகொள்ளத் – தேவையான எல்லாவற்றையும் எழுதினார் (1:41; 3:16; 4:25,26; 8:58). இவருடைய சுவிசேஷம் முழுவதையும் – இயேசுவின் மெய்யான அடையாளத்தை உறுதிப்படுத்தி வாசிப்போரை விசுவாசத்திற்குள் வழிநடத்தும் – 8 ”அடையாளங்கள்” அல்லது நிரூபணங்களைச் சுற்றி ஒழுங்காக அமைத்திருக்கிறார். கிறிஸ்துவின்  ஆள்தத்துவத்தில் நம்பிக்கையை உண்டாக்குகிற 7 அற்புத அடையாளங்களினால் இவரது சுவிசேஷத்தின் முதல் பாதி நிறைந்திருக்கிறது: 1) தண்ணீரை திராட்சைரசமாக மாற்றியது (2:1-11);  2) ராஜாவின் மனுஷர் ஒருவனுடைய குமாரனை குணப்படுத்துதல் (4:46-54);  3) முடவனைக் குணப்படுத்துதல் (5:1-18); 4) திரளான ஜனங்களைப் போஷித்தல் (6:1-15); 5) தண்ணீரின் மீது நடத்தல் (6:16-21); 6) குருடனுக்கு பார்வை அளித்தல் (9:1-41); மற்றும் 7) லாசருவை உயிருடன் எழுப்புதல் (11:1-57). கடலில்  மீன்களை அற்புதமாக பிடித்தல் (21:6-11), உயிர்த்தெழுந்த பின் செய்த எட்டாவது அடையாளம்.

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

யோவான் எழுதின சுவிசேஷத்தின் கருப்பொருள்: சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் மனந்திரும்பி  மன்னிப்பை பெற்றுக்கொள்ள அழைத்தல்- இவ்விருநோக்கங்கள் மற்றும்  இச்சுவிசேஷத்தின் முழுமையான செய்தி என்ன என்பதை நாம்” இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.” யோவான் 20:31ல் காணலாம். ஆகையால், இந்த புத்தகம் இயேசு என்னும் நபரையும் அவரின் செயல்களையும் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவில் மட்டுமே நம்முடைய இரட்சிப்பு இருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்த 20:30, 31 ஆம் வசனங்களில் நாம் காணும் மூன்று முக்கிய வார்த்தைகள் – அடையாளங்கள், விசுவாசி மற்றும் ஜீவன், இவை மூன்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இயேசு கிறிஸ்துவில் மட்டுமே நம்முடைய இரட்சிப்பு இருக்கிறது என்ற கருத்தை முன்னுரையில் (யோவான் 1:1-18ல்; 1யோவான் 1:1-4) காண்கிறோம். மட்டுமல்ல, சுவிசேஷ புத்தகம் முழுவதும் வெவ்வேறு வழிகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது (6:35,48; 8:12; 10:7,9; 10:11-14; 11:25; 14:6; 17:3). யோவான், இயேசுவுக்கும் அவர் அளிக்கும் இரட்சிப்பிற்கும் ஜனங்கள் எப்படியாக பதில் அளித்தனர் என்பதையும் நமக்கு குறித்து தந்துள்ளார். சுருக்கமாகச் சொல்வோமானால், யோவான் எழுதின சுவிசேஷம் இந்த மூன்று விஷயங்களில் கவனம் செலுத்துகிறது: 1) இயேசுவே வார்த்தை, மேசியா மற்றும் மனுஷகுமாரன்; 2) இரட்சிப்பு என்னும் பரிசினை மனுக்குலத்திற்கு கொண்டுவருபவர்; 3) இந்த பரிசினை மனுக்குலம் ஏற்றுக்கொள்கிறது அல்லது நிராகரிக்கிறது. 

யோவான் முதன்மையான கருப்பொருளுக்கு வலிமை சேர்க்க சில எதிர்மறையான உபகருப்பொருட்களையும் பயன்படுத்துகிறார். இருபொருள் வாதத்தை பயன்படுத்துகிறார் (ஜீவன் மற்றும் மரணம்; வெளிச்சம் மற்றும் இருள்; அன்பு மற்றும் வெறுப்பு; மேல் இருந்து மற்றும் கீழ் இருந்து) –இயேசு என்னும் நபர் மற்றும் அவரது செயல்கள் குறித்து அவசியமான தகவல்களைத் தருவதும் அவரை நாம் விசுவாசிக்கவேண்டிய அவசியத்தையும் தெரிவிப்பதே இதன் நோக்கம் (உதாரணமாக, 1:4,5,12,13; 3:16-21; 12:44-46; 15:17-20). இயேசுவே தேவன் மற்றும் மேசியா என்பதை வலியுறுத்திக்கூறும் ”நானே” என்னும் ஏழு கூற்றுக்கள்  இந்த புத்தகத்தில் இருக்கிறது; குறிப்பு: இதோ – தேடி எடுத்து வாசித்து பயன்பெறுங்கள்  (6:35; 8:12; 19:7,9; 10:11,14; 11:25; 14:6; 15:1,15).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

யோவான் தனது எழுத்துக்களை தெளிவாக மற்றும் எளிய நடையில் எழுதினதால், சிலர் இந்த சுவிசேஷத்தின் ஆழத்தை குறைத்து மதிப்பிடும்படி முனைகின்றனர். யோவானின் சுவிசேஷம் “ஆவிக்குரிய” சுவிசேஷம் – அவர் எடுத்துரைக்கின்ற சத்தியங்கள் மிகவும் ஆழ்ந்த அறிவுள்ளவை. அப்போஸ்தலர் யோவான் அன்போடு அவருடைய சுவிசேஷத்தில் அளிக்கும் ஆழமான ஆவிக்குரிய பொக்கிஷங்களை – பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் கண்டுபிடிக்க - இந்த புத்தகத்தை ஆய்வு செய்ய முயலுபவர்கள் ஜெயத்துடனும், கூர்மையாககவனித்தும் அறிந்து கொள்ள வேண்டும். காலவரிசைப்படி நாம் கணக்கிட்டு பார்க்கும் போது, வசனம் 13:2 ல் நாம் காணும் கர்த்தருடைய பந்தியின் காலகுறிப்பு தான் - யோவான் சுவிசேஷத்திற்கும் சினாப்டிக் சுவிசேஷங்களுக்குமிடையில் ஒரு சவாலாக இருக்கின்றது. ஏனைய மூன்று சுவிசேஷங்களும் ஆண்டவரும் சீஷர்களும் பஸ்கா பந்தி வியாழக்கிழமை மாலை (நிசான் 14) அன்று உண்டார்கள், இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டார் என்று சொல்கின்றன. யோவான் சுவிசேஷம் யூதர்கள் ”தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள் (18:28) என்று கூறுகிறார். ஆக, சீஷர்கள் பஸ்கா பந்தியை வியாழக்கிழமை மாலை உண்டனர்; ஆனால், யூதர்கள் ஆசரிக்கவில்லை. உண்மையில், யோவான் 19:14ல் பஸ்காவிற்கு ஆயத்தமான நாளில் இயேசுவை விசாரித்தலும் சிலுவையில் அறைப்படுதலும் இருந்தது எனவும் பஸ்கா பந்தியை உண்டபின் அல்ல என்கிறார். ஆகையால் இயேசுவை விசாரித்தலும் சிலுவையில் அறையப்படுதலும் வெள்ளிக்கிழமை நிறைவேறியது. 19:14ல் இருந்து நாம் அறிவது பஸ்கா ஆடுகள் அடிக்கப்படும் அதே மணிவேளையில் கிறிஸ்து நமக்காக பலியானார் என அறிகிறோம். இங்கே கேள்வி என்னவென்றால் - அப்படியானால் சீஷர்கள் பஸ்கா பந்தியை வியாழக்கிழமை ஏன் ஆசரித்தனர்? என்பதே. 

இதற்கு பதில் யூதர்கள் தங்கள் நாட்களின் ஆரம்பம் மற்றும் முடிவை கணக்கிட்ட வழிகளில் இருந்த வித்தியாசமே. யோசேப்பஸ், மிஸ்ரா மற்றும் இதர பழங்கால யூத ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது நாம் அறிவது: யூததேசத்து வடக்கு பகுதிகளில் இருந்தவர்கள், ஒரு நாள் - என்பது ஒரு சூரிய உதயத்தில் இருந்து அடுத்த சூரிய உதயம் எனக் கணக்கிட்டு வந்தனர். அந்த இடம் இயேசுவும் அவருடைய சீஷர்களில் யூதாஸைத்தவிர மற்ற அனைவருடைய கலிலேயா பகுதியை உள்ளடக்கியது. இதனால் அதிகமான பரிசேயர்கள் (எல்லோரும் அல்ல) இந்த விதமாக நாளை கணக்கிட்டு வந்தனர் என்பது தெளிவாகிறது. ஆனால்,  தென் பகுதிகளில் எருசலேமைச் சுற்றியிருந்த யூதர்கள் ஒரு நாள் என்பது சூரிய அஸ்தமானம் முதல் அடுத்த சூரிய அஸ்தமானம் வரை என கணக்கிட்டனர். எருசலேமினைச் சுற்றி அல்லது எருசலேமில் ஆசாரியர்கள், ஏனைய சதுசேயர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் யூதா தேசத்து தென்பகுதிகளின் நாள் கணக்கீடு முறையைப் பின்பற்றினர். இந்த கணக்கீட்டு முறையில் இருந்த வித்தியாசம் குழப்பத்தை ஏற்படுத்தியது, ஆனால், அதின் நடைமுறையில் சில நன்மைகளும் இருந்தது. அதாவது பந்தியை இரண்டு தொடர்ந்து வரும் நாட்களில் ஆசரிக்க இது உதவியது. ஆலயத்தில் பலியிடுதலும் இரண்டு மணி நேரத்திற்கு பதிலாக நான்கு மணி நேரம் நடைபெற்றது. இந்த விதமாக நாட்கள் கணக்கிடுவதில் வேறுபாடு இருப்பது இரண்டு பிரிவினருக்கும் இடையில் எழும்பும் சண்டைகளை குறைத்தது. 

மேற்கண்ட கருத்தினை நாம் வைத்துப்பார்க்கும் போது சுவிசேஷ புத்தகங்களில் ஆண்டவரின் கடைசி பந்தி நாட்களில் இருக்கும் முரண்பாட்டிற்கு விளக்கம் கிடைத்து விடும். கலிலேயர்களாகிய இயேசுவும் அவரது சீஷர்களும் பஸ்கா -வியாழக்கிழமை சூரிய உதயத்தில் இருந்து ஆரம்பித்து வெள்ளிக்கிழமை என்று எடுத்துக்கொண்டனர். இயேசுவை கைது செய்து விசாரித்த  யூத தலைவர்கள் – அதிகமாக ஆசாரியர்களும் சதுசேயர்களுமாக இருந்தபடியால் அவர்கள் கணக்கீட்டின்படி, பஸ்காநாள் வியாழக்கிழமை சூரிய அஸ்தமனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை ஆகும். சகலத்தையும் ஆளுகைசெய்யும்  தேவனின் திட்டப்படி, இந்த நாள் கணக்கீட்டில் இருக்கும் வித்தியாசத்தினால் இயேசு அவரும் அவருடைய சீஷர்களும் சட்டப்படியான நாளில் கர்த்தருடைய கடைசி பந்தியை ஆசரிக்கவும் பஸ்கா நாளில் அவர் நமக்காக பலியாகவும் உதவியது. 

மீண்டும் ஒருமுறை தேவன் எப்படி தமது சர்வவல்லமையுள்ள திட்டத்தின்படி இந்த மீட்பின் திட்டத்தை துல்லியமாக தேவைகளை சந்தித்து நிறைவேற்றினார் என்பதை நாம் காணலாம். மனுஷரின் பொல்லாத செயல்திட்டங்களால் இயேசு பலியிடப்பட்டார், குருட்டாட்டமான சூழ்நிலைகளால் அல்ல. அவர் பேசின ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய ஒவ்வொரு செயலும் தெய்வீக வழிநடத்துதல் மற்றும் பாதுகாவலுக்கு உட்பட்டவை. அவருக்கு விரோதமாக எழும்பின வார்த்தைகளும் செய்கைகளும் கூட தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டே நிறைவேறின என்பதையும் காண்கிறோம் (11:49-52; 19:11).

சுருக்கம்

I. தேவ குமாரனின் அவதாரம் (1: 1 –18)
அ. அவர் நித்தியமானவர் (1:1,2)
ஆ. அவர் அவதரிக்கும் முன் நாட்களின் செயல்பாடுகள் (1:3-5) 
இ. அவருக்கு முன்னோடினவர் (1:6-8)
ஈ. அவர் நிராகரிக்கப்படல் (1:9-11)
உ. அவர் ஏற்றுக்கொள்ளப்படல் (1:12,13)
ஊ. இயேசுவின் தெய்வீகத்தன்மை (1:14-18)
 
II தேவகுமாரன் அறிமுகப்படுத்தப்படுதல் (1:19 -4:54)
அ. யோவான் ஸ்நானகரால் அறிமுகபடுத்தப்படுதல் (1:19-34)
1. மத தலைவர்களுக்கு (1:19-28)
2. கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தில் (1:29-34)
 
ஆ. யோவான் ஸ்நானகருடைய சீஷர்களுக்கு அறிமுகபடுத்தப்படுதல் (1:35 – 51)
  1. அந்திரேயாவும் பேதுருவும் (1:35-42)
  2. பிலிப்புவும் நத்தானியேலும் (1:43-51)
 
இ. கலிலேயருக்கு அறிமுகம் செய்தல் (2:1-12)
  1. தண்ணீரை திராட்சைரசமாக மாற்றிய அதிசயம் (2:1-10)
  2. சீஷர்கள் விசுவாசித்தல் (2:11,12)
 
ஈ. யூதேயாவில் அறிமுகம் செய்தல் (2:13-3:36)
   1. தேவாலயத்தை சுத்தம் செய்தல் (2:13-25)
   2. நிக்கொதெமுவிற்கு கற்றுத்தருதல் (3:1-21)
   3. யோவான் ஸ்நானகன் பிரசங்கித்தல் (3:22-36)
 
உ. சமாரியாவில் அறிமுகம் செய்தல் (4:1-42)
   1. சமாரியா ஸ்திரீக்கு சாட்சி சொல்லுதல் (4:1-26)
   2, சீஷர்களுக்கு சாட்சி சொல்லுதல் (4:27-38)
   3. சமாரியர்களுக்கு சாட்சி சொல்லுதல் (4:39-42)
 
ஊ. கலிலேயருக்கு அறிமுகம் செய்தல் (4:43-54)
   1, கலிலேயர்களால் வரவேற்கப்படுதல் (4:43-45)
   2. இரண்டாவது அடையாளம்: ராஜாவின் மனுஷன் ஒருவனுடைய மகனை குணப்படுத்துதல் (4:46-54)
 
III தேவகுமாரனுக்கு வந்த எதிர்ப்பு (5:1 -12:50)
அ. எருசலேம் விருந்தில் எதிர்ப்பு (5:1-47)
1. மூன்றாவது அடையாளம்: வெகுகாலமாய் வியாதிப்பட்டிருந்தவனை சுகப்படுத்தல் (5:1-9)
2. யூதர்களால் நிராகரிக்கப்படுதல் (5:10-47)
 
ஆ. பஸ்காவின் நாட்களில் எதிர்ப்பு (6:1-71)
1. நான்காவது அடையாளம் 5,000 பேரை போஷித்தல் (6:1-14)
2. ஐந்தாவது அடையாளம்: தண்ணீரின் மீது நடத்தல் (6:15-21)
3. ஜீவ அப்பம் சொற்பொழிவு (6:22-71)
 
இ. கூடாரப்பண்டிகை விருந்தில் எதிர்ப்பு (7:1 -10:21)
1. எதிர்ப்பு (7:1-8:59)
2. ஆறாவது அடையாளம் (9:1 -10:21)
 
ஈ. அர்ப்பணிப்பின் விருந்தில் எதிர்ப்பு (10:22-42)
 
உ. பெத்தானியாவில் எதிர்ப்பு (11:1 -12:11)
1. ஏழாவது அடையாளம் : லாசருவை உயிருடன் எழுப்புதல் (11:1-44)
2. பரிசேயர்கள் இயேசுவை கொலை செய்ய திட்டம் தீட்டல் (11:45-57)
3. மரியாள் இயேசுவை நற்கந்த தைலத்தால் அபிஷேகித்தல் (12:1-11)
 
ஊ. எருசலேமில் எதிர்ப்பு (12:12-50)
1. வெற்றி பவனி மற்றும் பிரவேசம் (12:12-22)
2. விசுவாசமும் அதனை மறுதலித்தல் குறித்த சொற்பொழிவு (12:23-50)
 
IV. தேவகுமாரன் தன் சீஷர்களை ஆயத்தப்படுத்துதல் (13:1-17:26)
அ. மேல்வீட்டறையில் (13:1-14:31)
1. கால்களை கழுவுதல் (13:1-20)
2. காட்டிக்கொடுக்கப்படுவேன் என அறிவித்தல் (13:21-30)
3. கிறிஸ்து பரமேறுதல் குறித்த சொற்பொழிவு (13:31-14:31)
 
ஆ. தோட்டத்திற்கு செல்லும் வழியில் (15:1-17:26)
1. சீஷர்களுக்கு அறிவுரை கூறுதல் (15:1-17:26)
2. பிதாவிடம் பரிந்து பேசுதல் (17:1-26)
 
V. தேவகுமாரன் சிலுவையில் அறையப்படுதல் (18:1 -19:37)
அ. இயேசுகிறிஸ்துவை நிரகரித்தல் (18:1 -19:16)
1. இயேசு கைது செய்யப்படல் (18:1-11)
2. இயேசுவின் விசாரணைகள் (18:12- 19:16)
 
ஆ. கிறிஸ்து சிலுவையில் அறையப்படல் (19:17-37)
 
VI. தேவகுமாரன் உயிர்த்தெழுதல் (19:38-21:23)
அ. கிறிஸ்து அடக்கம் செய்யப்படுதல் (19:38-42)
ஆ. கிறிஸ்து உயிர்த்தெழுதல் (20:1-10)
 
இ. கிறிஸ்து தோற்றம் அளித்தல் (20:11 – 21:23)
1. மகதலேனா மரியாளுக்கு வெளிப்படல் (20:11-18)
2. சீஷர்களுக்கு - தோமா இல்லாத போது (20:19-25)
3. சீஷர்களுக்கு தோமாவுடன் (20:26-29)
4. சுவிசேஷம் எதற்காக எழுதப்பட்டது என்ற கூற்று (20:30,31)
5. சீஷர்களுக்கு (21:1-4)
6. பேதுருவுக்கு (21:15-23)
 
VII. முடிவுரை (21:24,25)  

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.