ஓசியா
தலைப்பு:
இப்புத்தகத்தின் முக்கிய மனிதர் மற்றும் ஆசிரியராக இருப்பவரின் பெயரில் இருந்து இப்புத்தகத்தின் தலைப்பு பெறப்பட்டுள்ளது. இந்த பெயரின் அர்த்தம் “இரட்சிப்பு”; யோசுவா (எண்.13:8,16) மற்றும் இயேசு (மத்தேயு1:21) என்னும் பெயர்களின் அர்த்தமும் இரட்சிப்பு என்பதாகும். பன்னிரண்டு சிறிய-தீர்க்கதரிசிகளில் முதலில் வருபவர் ஓசியா. இங்கு சிறிய என்பது - ஏசாயா, எரேமியா மற்றும் எசேக்கியேல் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தின் நீளத்தில் ஒப்பிட்டு பார்க்கும் போது, நீளமானதாக இல்லாமல் சுருக்கமாக இருக்கும் தீர்க்கதரிசன புத்தகம் என்ற அர்த்தத்தில் சிறிய என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி
ஓசியா புத்தகம் மட்டுமே அதன் ஆசிரியரைப் பற்றிய தகவலைத் தருகிறது. ஓசியா பற்றி மிக குறைவாகவே சொல்லப்பட்டிருக்கிறது, அதிலும் குறைவாகவே அவன் தகப்பன் ”பெயேரி” (1:1) பற்றி அறிய முடிகிறது. ஓசியா ஒருவேளை வடக்கு ராஜ்ஜியமாகிய இஸ்ரவேலின் - வரலாறு, சூழ்நிலைகள், மற்றும் நிலபரப்பை பற்றி (4:15; 5:1,13; 5:8,9;10:5; 12:11,12; 14:6) அறிந்திருந்தபடியால், இஸ்ரவேலைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதினால் இவரும் யோனா தீர்க்கதரிசியும் இஸ்ரவேல் தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை அறியலாம். ஓசியா பேசும் போது இஸ்ரவேல் (வடக்கு ராஜ்யம்) குறித்தும் யூதா (தெற்கு ராஜ்யம்) குறித்தும் பேசியிருந்தாலும், இஸ்ரவேலை அரசாண்ட ராஜாவை “எங்கள் ராஜா” எனக் குறிப்பிடுகிறார் (7:5).
ஓசியா தீர்க்கதரிசியின் ஊழியப்பாதை நீண்ட காலம் (கி.மு.755-710) சென்றது; அதாவது, யூதாவை அரசாண்ட ராஜாக்கள் - உசியா (கி.மு.790 – 739), யோதாம் (கி.மு.750 - 731), ஆகாஸ் (கி.மு.735 - 715) மற்றும் எசேக்கியா (கி.மு.715 – 686), இஸ்ரவேலில் யெரோபெபாம் II (கி.மு.793 – 753; ஓசி. 1:1) அரசாண்ட நாட்கள் வரை நிறைவேறியது. இஸ்ரவேலை ஆண்ட கடைசி ஆறு ராஜாக்களின் காலம் அதாவது செக்கரியா (கி.மு.753-752) தொடங்கி ஓசேயா (கி.மு.32-722) வரை இவரது தீர்க்கதரிசன பணி கடந்து சென்றது எனலாம். எப்படியெனில், யெகூவின் வம்சத்தில் வந்த செக்கரியா கி.மு.752-ல் கவிழ்த்து போடப்படுவது ஓர் எதிர்கால நிகழ்ச்சியாகச் இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது (1:4). வடக்கு தேசத்தில் ஆமோஸ் தீர்க்கதரிசியின் வார்த்தைகளுக்குப் பின் இவர் தொடர்கிறார் எனவும், யூதாவில் ஏற்கெனவே தீர்க்கதரிசனம் உரைத்து வந்த - ஏசாயா மற்றும் மீகா தீர்க்கதரிசிகளின் சமகாலத்தவர் எனவும் அறிகிறோம். ஓசியா தீர்க்கதரிசி ஊழிய வரலாற்றினை 2ராஜாக்கள் 14-20 வரை உள்ள அதிகாரங்களிலும், 2நாளாகமம் 26-32-ல் உள்ள அதிகாரங்களிலும் காண்கிறோம்.
பிண்ணனி மற்றும் அமைப்பு
ஓசியா தன் ஊழியத்தை இஸ்ரவேல் தேசத்தை (எப்பிராயீம் என அதன் மிகப்பெரிய கோத்திரத்தின் பெயரிலும் அழைக்கப்படுகிறது), யெரோபாம் II ஆண்ட இறுதி நாட்களில் ஊழியத்தை ஆரம்பித்தார் (இந்த ராஜாவின் நாட்களில் இஸ்ரவேலில் அரசியல் ரீதியில் சமாதானமும், பொருள் வளமும் இருந்தது. ஆனால், தேசத்தில் தார்மீக வாழ்வில் ஊழல் மலிந்தும், ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் பின்வாங்கிப் போய் இருந்தனர்). யெரோபாம் II மரணத்திற்குப் பின் (கி.மு.753) அராஜகம் தலைதூக்கி ஆடியது; அதினால், இஸ்ரவேல் மிகவேகமாக சரிந்தது. இஸ்ரவேலை அசீரியர்கள் 30 ஆண்டுகள் கழித்து மேற்கொள்ளும் வரை, இஸ்ரவேலை ஆண்ட 6 ராஜாக்களில் 4 பேர் – அவர்களுக்கு அடுத்து வந்த ராஜாவினால் கொலை செய்யப்பட்டனர். சமாரியா தேச வீழ்ச்சியின் சூழல் வந்த வேளையில், இஸ்ரவேலில் நீதி வழிவிலகி, கேடுற்று வருவதாலும், (ஆமோஸ் தீர்க்கதரிசன புத்தகத்தையும் காண்க), அத்தேசம் கர்த்தராகிய தேவனுடன் செய்திருந்த உடன்படிக்கையின் உறவினை உடைத்துக் கொண்டுவருவதாலும் - நியாயத்தீர்ப்பு என்பது உடனடியாக வரப்போகிறது என ஓசியா தீர்க்கதரிசனமாக உரைத்து வந்தார்.
தென் தேசத்தினை பார்த்தால், சூழ்நிலைகள் சிறப்பானதாக இல்லை. ஆசாரியரின் பணியை அபகரித்ததால், உசியா ராஜா குஷ்டநோயால் வாதிக்கப்படும் தண்டனைய அடைந்தான் (2நாளா.26:16-21). அவனுக்குப் பின் வந்த யோதாம் விக்கிரக ஆராதனைகாரர்களை மன்னித்தான்; இது ஆகாஸ்-பாகால் வழிபாட்டை இஸ்ரவேலுக்குள் கொண்டுவர வழி வகுத்தது (2நாளா.27:1 – 28:4). யூதாவின் சகோதர நாடான இஸ்ரவேலின் அழிவைப் போன்ற அழிவைக்காண இருந்த யூதா தேசம், எசேக்கியேல் ராஜா கொண்டுவந்த சீர்திருத்தங்களால் சற்று மெதுவாக அழிவை நோக்கி சென்றது எனலாம். இரண்டு பக்கங்களில் இருந்த பலவீனப்பட்ட ராஜாக்கள் – கர்த்தராகிய தேவனின் உதவியைத் தேடாமல், அன்னிய தேசங்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளத் தேடினர் (7:11; 2ராஜா.15:19; 16:7) .
இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்
தேவன் தன்னுடைய உடன்படிக்கையின் ஜனங்கள் – விக்கிரக வழிபாட்டிற்கு வழிவிலகிச் சென்ற போதும், இஸ்ரவேலருடன் அவர் கொண்டிருந்த அன்பில் உண்மையுள்ளவராக இருந்தார் என்பதே இப்புத்தகத்தின் கருப்பொருள். இதினால், ஓசியா தீர்க்கதரிசி ”பழைய ஏற்பாட்டுகால பரிசுத்த யோவான்” (அன்பின் அப்போஸ்தலர்) என அழைக்கப்படுகிறார். தம் ஜனத்தை குறித்த கர்த்தரின் நேசம் அது முடிவற்றது; அதற்கு எதிராக வரும் எதனையும் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். தேசத்திற்கும், தனிப்பட்ட நபருக்கும் எதிராக ஓசியாவின் தீர்க்கதரிசன செய்திகள் கண்டிப்பதாக இருந்தன, ஆனால் அதேவேளையில், ஓசியா தேவனுடைய அன்பை அதனுடன் சேர்ந்து வரும் மாபெரும் உணர்வுகளுடன் ஆழமாக எடுத்துச் சொல்கிறார். தேவன் ஓசியாவினிடம் ஒரு சோர ஸ்திரியையும் சோரப்பிள்ளையையும் சேர்த்துக் கொள் எனச் சொல்கிறார். அவளுடன் நடத்தும் குடும்ப வாழ்க்கை அனுபவத்தில் இருந்து ஓசியா இஸ்ரவேலின் பாவம் மற்றும் அத்தேசத்தின் உடன்படிக்கையை மீறும் தன்மையப் புரிந்து கொள்ளச் செய்கிறார். ஓசியாவும் அவன் மனைவி , கோமேரும் இப்புத்தகத்தின் கருப்பொருள்களான : பாவம், நியாயத்தீர்ப்பு மற்றும் மன்னிக்கும் அன்பு இதனை சிறப்பாக விளக்கும் உருவகமாக திகழ்கின்றனர்.
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்
சோரம் போன ஸ்திரி கோமேர், வாக்குறுதி மீறுகிற, உடன்படிக்கையை மீறின இஸ்ரவேல் தேசத்திற்கு அடையாளமாக நிற்கிறாள். ஆனால், இதில் கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன, சிலர் சொல்லுகிறார்கள் அதிகாரம் 1-3 ல் நாம் காணும் சோர ஸ்திரி சம்பவத்தை ஓர் உருவக கதை என்ற அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும். இது மிக சாதாரண நடையில் சொல்லப்பட்டிருப்பதால், உண்மையில் இது நிறைவேறினதா என்பதே சந்தேகத்திற்கு இடமளிக்கிறது என்கிறனர். ஆனால், இது உண்மையான சம்பவமாக இல்லாது இருந்தால் அதில் இருந்து அதின் தாக்கத்தைப் புரிந்து கொள்வது கடினம். இப்புத்தகத்தில் உண்மையில்லாத விஷயங்களை சொல்ல வரும் போது “கண்டான்” என்ற அடைமொழி அதனுடன் சேர்க்கப்பட்டிருக்கும் (5:13; 9:10,13). எபிரேயத்தில் உண்மைச்சம்பவம் அல்லாதவற்றுக்குச் அறிமுகமாகச் சேர்க்கப்படும் அடைமொழி சேர்க்கப்பட்டிருக்கும். மேலும், ஒரு தீர்க்கதரிசி தன்னையே ஒரு உருவகம் அல்லது உருவக கதையின் பொருளாக மாற்றிக் கொண்டதாக எங்கும் இல்லை.
இரண்டாவது, தேவன் ஓசியாவை ஒரு சோர ஸ்திரியை திருமணம் செய்யச் சொல்வதில் என்ன ஒழுக்கம் இருக்கிறது? இப்படியாக பார்த்தால் சரியாக இருக்கும்: ஓசியா திருமணம் செய்த போது கோமேர் கற்புள்ள பெண் ஆக இருந்து, பின் நாளில் சோர ஸ்திரியாக மாறினாள் எனலாம். சோர ஸ்திரியைச் சேர்த்துக் கொள் என்னும் வரியின் அர்த்தம் எதிர்காலத்தில் வாக்கைமீறும் பெண்ணை என அர்த்தம் தருகிறது. எகிப்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட இஸ்ரவேலை ஒரு சோரஸ்திரி என அழைக்க முடியாது (2:15; 9:10). ஆனால் அவள் கர்த்தரை விட்டு பின்வாங்கிப் போனாள் என்பதை 1:1-ல் காண்கிறோம். அதிகாரம் 3, விபச்சாரத்தினிமித்தம் தள்ளி வைக்கப்பட தன் மனைவியை ஓசியா சேர்த்துக் கொண்டார் என விவரிக்கிறது. இப்படியிருக்க ஓசியா சோரஸ்திரி என அறிந்தே திருமணம் செய்துகொண்டார் என்பதுவும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
மூன்றாவது, அதிகாரம் 1 க்கும் அதிகாரம் 3 க்கும் இடையில் உள்ள உறவினைக் குறித்தும் ஒரு கேள்வி எழுகிறது. அதாவது, அதிகாரம் 3ல் சொல்லப்பட்டிருக்கும் பெண் கோமேர் தானா அல்லது வேறு பெண்ணா என்பது. 1:2-ல் அவர் பெற்ற கட்டளை போய், சேர்த்துக் கொள் என்பது. அதிகாரம் 3-ல் ”இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள் ” என்பதால் ஓசியா தான் மணந்திருந்த பெண்ணிடம் நேசத்தை புதுப்பித்துக்கொள்ள அழைப்பைப் பெற்றார் எனக் காண்கிறோம். மேலும் அதிகாரம் 1-ல் நாம் காணும் கோமேர் இஸ்ரவேல் தேசத்திற்கு ஒப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாம் அதிகாரத்தில் நாம்காண்கிற இஸ்ரவேல் புத்திரர் பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள் என்று சொன்னார். இதினால் மூன்றாம் அதிகாரம் வேறு ஒரு பெண்ணைக் குறித்துப் பேசுகிறது என்றால் அது இந்த உருவகத்தை அர்த்தமற்றதாக்கி விடும்.