இராஜாக்கள் (1 மற்றும் 2)
தலைப்பு:
முதலாம் மற்றும் இரண்டாம் இராஜாக்கள் புத்தகம் ஒரே புத்தகமாக தான் ஆரம்பத்தில் இருந்தது. மூல எபிரேய புத்தகம் – இதன் பெயரை முதல் அதிகாரம் முதல்வசனத்தில் இருக்கும் “இராஜா” என்ற அடைமொழியில் இருந்து - இதன் தலைப்பைப் பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டின் செப்டுவாஜிண்ட்(LXX), கிரேக்க மொழிபெயர்ப்பு இந்த புத்தகத்தை இரண்டாக பிரித்தது. தொடர்ந்து லத்தீன் பதிப்பு (Vg.) மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இரண்டாக பிரித்தன. நீளமான தோல்சுருள் மற்றும் வேதாகம கையெழுத்துப்பிரதிகளை பிரதி எடுக்க வசதியாக பிரிக்கப்பட்டதேயல்லாமல், புத்தகத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்து அல்ல. நாகரீக எபிரேய வேதாகமங்கள் இப்புத்தகங்களுக்கு “இராஜாக்கள் அ” “இராஜாக்கள் ஆ” எனப் பெயரிட்டுள்ளன. LXX மற்றும் Vg. ராஜாக்கள் புத்தகத்தை சாமுவேல் புத்தகத்துடன் இணைத்து “மூன்றாம் மற்றும் நான்காம் ராஜ்ஜியத்தின் புத்தகங்கள்” என தலைப்பிட்டுள்ளன. Vg. பதிப்பில் இதன் பெயர் ”மூன்றாம் மற்றும் நான்காம் இராஜாக்கள்”. 1 மற்றும் 2 சாமுவேல் 1 மற்றும் 2 இராஜாக்கள் புத்தகத்துடன் இணைந்து, யூதா தேசம் மற்றும் இஸ்ரவேல் தேசத்து இராஜாக்கள் - அதாவது, சவுலில் இருந்து சிதேக்கியா இராஜா வரை உள்ள இராஜாக்களின் ஆண்டுக்கணிப்பைக் கூறுகிறது. யூதா தேசத்து இராஜாக்களின் ஆண்டுக்கணிப்பை மட்டுமே 1 மற்றும் 2 நாளாகம புத்தகங்கள் தருகின்றன.
ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி
இது சாத்தியமற்றதாக இருந்தாலும், யூத பாரம்பரியம் ராஜாக்களின் புத்தகத்தை எரேமியா எழுதியிருக்கலாம் என கருதுகிறது. ஏனென்றால், இப்புத்தகத்தின் கடைசி சம்பவம் பாபிலோனில் கி.மு. 561-ல் நடைபெற்றது என குறித்துள்ளது (2ராஜா.25:27-30). எரேமியா எகிப்திற்கு சென்றாரே (எரே 43:1-7) அல்லாமல், ஒருபோதும் பாபிலோனியாவிற்குச் செல்லவில்லை. கி.மு 561-ல், அவருக்கு வயது குறைந்தது 86-ஆக இருந்திருக்கும். உண்மையில், பெயர் அறியப்படாத இந்த ஆசிரியர் – யார்? என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ராஜாக்களின் புத்தகங்களில் தீர்க்கதரிசிகளின் ஊழியங்கள் அதிகமாக வலியுறுத்தப்படுவதால், தேவனுடைய சமூகத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு பாபிலோனில் வாழ்ந்த தேவனால் எடுத்துப் பயன்படுத்தப்பட்ட இஸ்ரவேல் தேசத்து தீர்க்கதரிசி ஒருவரால் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஆசிரியர் இந்த புத்தகத்தைத் தொகுத்து எழுத “சாலமோனின் நடபடிகள்” (1ராஜா. 11:41) “இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமம்” (1ராஜா.14:19;15:31; 16:5, 14,20,27; 22:39; 2ராஜா. 1:18; 10:34; 13:8,12; 14:15,28; 15:11; 15:21,26,31), “யூதா ராஜாக்களின் நாளாகமம்” (1ராஜா.14:29; 15:7,23; 22:45; 2ராஜா. 8:23; 12:19; 14:18; 15:6,36; 16:19; 20:20; 21:17,25; 23:28; 24:5) உட்பட பலதரப்பட்ட ஆதாரங்களை பயன்படுத்தி இருக்கிறார் என்பது தெளிவாகிறது. மேலும், ஏசாயா (36:1 – 39:8) தரும் தகவல் 2ராஜா.18:9-20:19-க்கும் எரேமியா 52:31-34 – 2ராஜா.25:27-29-க்கும் ஆதாரமாக இருப்பதையும் காண்கிறோம். இவைகளை வைத்து பார்க்கும் போது, பாபிலோனுக்கு தேவனுடைய சமூகத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு இருந்த ஒரு தனிநபர், நாடு கடத்தப்படுவதற்கு முன் தனக்கு கிடைத்த ஆதாரங்களைப் பயன்படுத்தியவர், இதன் ஆசிரியராக இருந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.
பிண்ணனி மற்றும் அமைப்பு
புத்தகத்தின் ஆதாரங்களுக்குரிய அமைப்பு, புத்தகங்களின் ஆசிரியர் அமைத்த காட்சி அமைப்பு இவ்விரண்டின் தனித்தன்மையை வேறுபடுத்தி பார்க்க வேண்டும். சம்பவங்களை கண்ணாரக்கண்ட சாட்சிகள் மற்றும் அதில் பங்குபெற்றவர்களினால் புத்தக ஆதார உள்ளடக்கங்கள் எழுதப்பட்டவை. இந்த தகவல்கள் சரித்திரபூர்வமாக துல்லியமானவைகள் – உதாரணத்திற்கு, இஸ்ரவேல் புத்திரர் குறித்து பேசுபவை, தாவீதின் மரணம் மற்றும் சாலமோன் ராஜாவாகுதலில் (கி.மு. 971) இருந்து தேவாலயமும் எருசலேமும் பாபிலோனியர்களால் அழிக்கப்படுதல் வரை (கி.மு. 586) பேசுகின்றன. ஆக, ராஜாக்கள் புத்தகம் இரண்டு பிரிவுபட்ட ராஜாக்கள் மற்றும் தேவனுடைய பிரமாணத்திற்கும் அவரது தீர்க்கதரிசிகளுக்கும் கீழ்ப்படியாத ஜனங்களால் ஆன தேசங்கள் இஸ்ரவேல், யூதா என்று அழைக்கப்பட்ட, சிறைபிடிப்புக்கு நேராகச் சென்ற தேசங்களின் வரலாற்றின் தடயங்களை ஆராய்கிறது.
ராஜாக்களின் புத்தகம் ஓர் வரலாற்று புத்தகம் மட்டுமல்ல, விளக்கம் அளிக்கப்பட்ட வரலாறு. பாபிலோனியரால் நாடுகடத்தப்பட்டவராக இருந்தவர், ஆசிரியர், நாடுகத்தப்பட்டவர்களாக இருந்தவர்கள், இஸ்ரவேலின் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை இவை என அறிவுறுத்த விரும்பினார். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், அவர் நாடுகடத்தப்பட்டவர்களின் மீது தேவனின் நியாயதீர்ப்பு ஏன் வந்தது என அவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆசிரியர்- தான் கூறும் விளக்கத்தில் ராஜாக்கள் அவர்களின் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கப்பண்ண - தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள – ராஜாவாக ஆட்சிபொறுப்பில் இருப்பவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு – கீழ்ப்படியவேண்டியது அவசியம் என முதலிலேயேக் கூறியிருந்தார். கீழ்ப்படியாமை - தேவ சமூகத்தில் இருந்து அவர்கள் தள்ளிவிடப்படுதலைக் கொண்டுவரும் (1ராஜா. 9:3-9). வரலாற்றை புரட்டி பார்க்கும் போது வெளிப்பட்ட சோகமான உண்மை என்னவென்றால் – இஸ்ரவேலின் அனைத்து இராஜாக்களும் யூதாவின் அதிகபட்சமான ராஜாக்களும் “கர்த்தருடைய பார்வையில் பொல்லாப்பானதைச் செய்தார்கள்” என்பதே. இந்தப் பொல்லாத இராஜாக்கள், அவர்களது ஜனங்களை விக்கிரகாரதனைக்கு எதிர்த்து நிற்க பழக்காமல், அதனை ஆதரித்து விசுவாச துரோகிகள் ஆனார்கள். ராஜா உண்மை தவறிய வேளையில், ராஜாக்களும், பாவத்துடன் வாழும் ஜனங்களும் மனம்திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த கர்த்தர் தமது தீர்க்கதரிசிகளை அனுப்பினார். இந்த தீர்க்கதரிசிகளின் செய்திகள் நிராகரிக்கப்பட்டப்படியால், தீர்க்கதரிசிகள் தேசங்களின் ஜனங்கள் தேவனின் சமூகத்தை விட்டு அகற்றப்படுவார்கள் என முன்கூட்டியே எச்சரித்தார்கள் (2ராஜா.17:13-23; 21:10-15). ராஜாக்களின் புத்தகத்தில் தீர்க்கத்ரிசிகள் உரைத்த ஒவ்வொரு தீர்க்கத்ரிசனமும் நிறைவேறினதுபோல, கர்த்தரிடத்தில் இருந்து வந்த இந்த வார்த்தையும் நிறைவேறியது (2ராஜா.17:5,6; 25:1-11). ஆகையால், ராஜாக்கள் - ஜனங்கள் தேவசமூகத்தை விட்டு அகற்றப்பட்ட உட்பொருளை வெளிப்படுத்தி, ஜனங்கள் - தாங்கள் விக்கிரக ஆராதனையினால் - தேவதண்டனைக்கு ஆளானோம் என்பதை காண அவர்களுக்கு உதவினர். தேவன் எவ்விதமாக ஆகாப்பிற்கு (1ராஜா.21:27-29) யோயாக்கீனுக்கு (2ராஜா.25:27-30) இரக்கம் காட்டினாரோ, அவ்விதமாக அவர்களுக்கும் இரக்கம் காட்ட விருப்பமாக இருந்தார் என்பதையும் விளக்கியது.
ராஜாக்களின் புத்தகத்தில் மேலோங்கி நிற்கும் பூகோள அமைப்பு - இஸ்ரவேல் தேசம் முழுவதும், தாண் முதல் பெயர்செபா (1ராஜா.4:225) வரை யோர்தானைச்சுற்றியுள்ள பகுதிகள் (1ராஜா.4:25) கி.மு.971-லிருந்து கி.மு.561 வரை படையெடுத்து வந்த நான்கு தேசங்கள், இஸ்ரவேல் மற்றும் யூதா தேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தின. கி.மு பத்தாம் நூற்றாண்டில் சாலமோன் மற்றும் யெரொபெயாம் (1ராஜா.3:1; 11:14-22,40; 12:2; 14:25-27). அரசாண்ட காலங்களில் எகிப்து - இஸ்ரவேலின் வரலாற்றில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிரியா (ஆராம்) கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்ரவேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக (கி.மு. 890-800) இருந்தது (1ராஜா.15:9-22; 20:1-34; 22:1-4,29-40; 2 ராஜா.6:8 -7:20; 8:7-15; 10:32,33; 12:17,18; 13:22-25).
கி.மு.800-ல் இருந்து கி.மு.750 வரையிலான ஐம்பது ஆண்டுகள் - இஸ்ரவேல் மற்றும் யூதா தேசத்திற்கு சமாதானமும் சுபிட்சமுமாக இருந்தது – காரணம், அசீரியர்கள் சிரியா தேசத்தாரை சமன் செய்து வந்தபடியால் தென்பகுதிக்கு அச்சுறுத்தலாக சிரியா அக்காலங்களில் இல்லை. திக்லாத்-பிலேயெசர் III (2ராஜா.15:19,20,29) காலத்தில் இதில் மாற்றம் ஏற்பட்டது. எட்டாம் நூற்றாண்டின் மத்திய நாட்களில் இருந்து கி.மு. ஏழாம் நூற்றாண்டு கடைசி காலம் வரைக்கும் அசீரியா இஸ்ரவேலருக்கு அச்சுறுத்தலாக இருந்து, இறுதியில் இஸ்ரவேலை மேற்கொண்டு (ராஜ்ஜியத்தின் வடபகுதியை) கி.மு.722 -ல் அழித்துப்போட்டது (2ராஜா.17:4-6) கி.மு. 701-ல் எருசலேமை முற்றிகைபோட்டது (2ராஜா.18:17-19:37). கி.மு. 612-லிருந்து கி.மு. 539 வரை பாபிலோன் தான் பண்டைய தேசங்களுக்கு நடுவே ஆதிக்கத்தில் இருந்த தேசம். பாபிலோன் யூதா மீது 3 முறை (தென் தேசத்து ராஜ்ஜியம் மீது) படையெடுத்தது இதில் மூன்றாவது முறை படையெடுத்த போது, எருசலேமும் அதன் ஆலயமும் கி.மு.586-வில் அழிக்கப்பட்டது (2ராஜா.24:1-25:21).
வரலாற்று கருப்பொருள் மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்
அதற்குப்பின், கி.மு.971வில் இருந்து கி.மு. 561 வரை உள்ள இஸ்ரவேல் புத்திரரின் வராற்றில் ராஜாக்கள் புத்தகம் கவனம் செலுத்துகிறது. முதல் ராஜாக்கள் 1:1-11:43 சாலமோன் அரியணை ஏறுவது, ஆட்சி செய்வது குறித்து பேசுகிறது (கி.மு.971-931). இரண்டாக பிரிக்கப்பட்ட இஸ்ரவேல் மற்றும் யூதா தேசங்களை குறித்து 1ராஜா.12:1; 2ராஜா.17:41 வசனங்களில் காண்கிறோம். வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்த ராஜாக்களை குறித்து எடுத்துச்சொல்வதில் ஆசிரியர் கருப்பொருட்களை அழகாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார். ஒவ்வொரு அரசாட்சியை குறித்தும் விளக்கம் தரும் போதும் கீழ்க்காணும் இலக்கிய கட்டமைப்பு பின்பற்றபடுவதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு ராஜாவும் 1) அவரது பெயர் மற்றும் முந்தைய ராஜாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு; 2) நடைமுறையில் இருக்கும் அடுத்த தேசத்து ராஜாவின் வருஷத்திற்கும் - ஆட்சிபொறுப்பை ஏற்கும் ராஜாவின் நாளுக்கும் உள்ள தொடர்பு; 3) அரியணை ஏறும் போது அவரது வயது (யூதாவின் ராஜாக்களுக்கு மட்டும் பொருந்தும்); 4) ஆட்சிசெய்த காலம்; 5) ஆட்சிசெய்த இடம்; 6) அவரது தாயாரின் பெயர் (யூதாவின் ராஜாக்களுக்கு மட்டும் பொருந்தும்); மற்றும் 7) அவரது ஆட்சியில் இறையியல் தொடர்பான மதிப்பீடு. இந்த அறிமுகத்தை தொடர்ந்து ஒவ்வொரு ராஜாவின் காலத்தில் என்ன என்ன சம்பவங்கள் நடைபெற்றன என்பதற்குரிய விளக்கம். இந்த விளக்கங்கள் ஒன்றுக்கொன்று மிக அதிக அளவில் வேறுபடுகின்றன. ஒவ்வொரு விளக்கமும் இச்செய்தியுடன் முடிவடைகிறது: 1) எந்த ஆதாரங்களில் இருந்து எடுத்தாளப்படுகின்றது என்ற விபரம். 2) மேலதிக வரலாற்று குறிப்புகள், 3) மரணத்தைக் குறித்த அறிவிப்பு, 4) அடக்கம் செய்யப்படுதலைக் குறித்த செய்தி, 5) அடுத்து யார் பொறுப்பேற்கிறார்கள் என்ற செய்தி, 6) சில இடங்களில் சற்று அதிகமான இறுதி தகவல்கள் (உதாரணத்திற்கு 1ராஜா.15:32; 2 ராஜா.10:36). 2ராஜா 18:1-25:21 வசனங்களில் யூதா தேசம் தனித்து இருந்த காலத்தைக் குறித்து பார்க்கிறோம் (கி.மு.722-586). பாபிலோனியாவில் இருந்து வெளியேறிய நாட்களில் நடந்தேறிய சம்பவங்கள் குறித்து இரண்டு இறுதி பத்திகள் பேசுகின்றன (2ராஜா.25:22-26,27-30).
ராஜாக்கள் புத்தகத்தில் மூன்று இறையியல் கருப்பொட்கள் வலியுறுத்தப்படுகின்றன. முதலாவது, கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதா தேசத்தை அவருடைய பிரமாணங்களுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படியாதபடியால் நியாயம் தீர்த்தார் (2ராஜா.17:7-23). ஜனங்கள் மத்தியில் காணப்பட்ட இந்த உண்மையில்லாத தன்மை, பொல்லாத ராஜாக்களின் விசுவாச துரோகம் அவர்களை விக்கிரகாராதனைக்குள் அதிகமாக வழிநடத்தியது (2 ராஜ. 17:21, 22; 21:11). இதனால், கர்த்தர் தம்முடைய நீதியுள்ள கோபத்தை - அவரது கலகம் செய்யும் ஜனங்களுக்கு விரோதமாக வெளிப்படுத்தினார். இரண்டாவது, மெய்யான தீர்க்கதரிசிகளின் வார்த்தை நிறைவேறினது (1 ராஜா.13:2,3; 22:15-28; 2ராஜா.23:16, 24:2). இது கர்த்தர் தமது நியாயத்தீர்ப்பின் எச்சரிக்கையை கொடுத்திருந்த போதிலும், அவர் தந்த வார்த்தையில் உண்மையாக இருந்தார் என்பதை உறுதிப்படுத்தியது. மூன்றாவது, கர்த்தர் தாம் தாவீதிற்கு அளித்திருந்த வாக்குதத்தத்தை நினைவுகூர்ந்தார் என்பது (1ராஜா.11:12-13, 34-36; 15:4; 2 ராஜா.8:19) தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாதவர்களாக இருந்தபோதிலும், இஸ்ரவேலில் இருந்த யெரோபெயாம் I, உம்ரி மற்றும் யெகூ இவர்களின் குடும்பத்தாருக்கு என்ன நடந்ததோ அதைப்போல தாவீதின் வம்சத்திற்கு / குடும்பத்தாருக்கு சம்பவிக்க விடவில்லை. புத்தகம் நிறைவுறும் வேளையில், தாவீதின் வம்சவழியினர் ஜீவித்து இருப்பதைக் காண்கிறோம் (2ராஜா. 25:27-30), அதினால் தாவீதின் “வித்திற்கு” நம்பிக்கை இருந்து கொண்டிருந்தது (2சாமு. 7:12-16). இதிலிருந்து கர்த்தர் தாம் தரும் வார்த்தைகளைக் காப்பாற்றுபவர் என்பதையும், அவருடைய வார்தையின் மீது நாம் முழுநிச்சயமாக நம்பிக்கை வைக்க அது பாத்திரமானது என்பதையும் அறிகிறோம்.
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்
ராஜாக்கள் புத்தகத்திற்கு விளக்கம்அளிப்பதில் உள்ள சவால்களில் பெரிதானது – இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் காலவரிசைப்படி அமைப்பதில் இருக்கிறது. ராஜாக்கள் புத்தகத்தில் காலவரிசை சம்பந்தப்பட்ட தரவுகள் பரிபூரணமாக நிறைந்து இருந்தாலும், அந்த தரவுகளை வைத்து விளக்கம் அளிப்பது கடினமே. முதலாவது, உள்ளுக்குள்ளே கிடைக்கும் தகவல்களில் முரண்பாடு இருப்பது. 1ராஜா.16:23 “யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்” என்கிறது. ஆனால் 1ராஜா.16:29 ல் பார்க்கும் போது, “யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய… ராஜாவானான்” என்று சொல்லும் போது, உம்ரி 7 வருடங்கள் தான் ராஜ்யபாரம் செய்தது போலவும் 12 வருஷங்கள் அல்ல என்பதாகவும் தெரிகிறது. இரண்டாவது, பரிசுத்த வேதாகமத்தை தவிர, வேறு ஆதாரங்களை (கிரேக்க, அசீரிய மற்றும் பாபிலோனிய) வைத்து, அவற்றை வானசாஸ்திர தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம்பத்தகுந்த தேதிகளின் வரிசையை கி.மு.892லிருந்து கி.மு. 566 வரை நாம் கண்டறிய முடியும். இஸ்ரவேலின் ராஜாவாகிய, ஆகாப் மற்றும் யெகூ, இவர்களை குறித்த குறிப்புகள் அசீரிய குறிப்பேடுகளில் காண்கிறோம். அதன் அடிப்படையில், கி.மு.853-வில் ஆகாப் மரித்தார் எனவும், கி.மு.841ல் யெகூ ராஜ்யபாரத்தை தொடர்ந்தார் என கணக்கிடலாம். இந்த நாட்களை சரிதிட்டமான நாட்கள் என எடுத்துக் கொண்டு இந்நாட்களுக்கு முன்னும் பின்னும் சென்று இஸ்ரவேல் தேசத்தை யூதாவில் இருந்து பிரித்த வருடம் கி.மு.931, சமாரியாவின் வீழ்ச்சி கி.மு.722, எருசலேமின் வீழ்ச்சி கி.மு.586வில் சம்பவித்ததாக நம்பப்படுகிறது. ராஜாக்கள் ராஜ்யபாரம் செய்த மொத்த வருஷங்களை கணக்கிடும் போது, இஸ்ரவேல் தேசத்திற்கு 241 வருஷங்கள் என வருகிறது (கி.மு. 931-722 இடைப்பட்ட 210 வருடங்கள் இல்லை); யூதா தேசத்திற்கு 393 வருஷங்கள் (கி.மு. 931-586 இடைப்பட்ட 346 வருஷங்கள் இல்லை) என கணக்கிடப்படுகிறது. இரு தேசத்து ராஜ்யபாரத்திலும் ஓரு குடும்பத்தினர் ஒரே சமயத்தில் ஆட்சிசெய்த காலங்கள் உண்டு முக்கியமாக, தகப்பன் மற்றும் மகன் ஒரே நேரத்தில் ஆட்சி செய்தனர். இவர்கள் ஆட்சிகாலத்தை கணக்கிடும் போது, ஒன்றுக்குமேல் ஒருவருஷம் சேர்த்து கணக்கிடப்பட்டு இருக்கும் என புரிந்து கொள்ளலாம். வேறொரு காரணம், ராஜாக்களின் காலங்களை கணக்கிட வெவ்வேறு முறைகள் பின்பற்றி இருக்கலாம் உடன் வெவ்வேறுபட்ட நாட்காட்டி இரண்டு தேசங்களில் வெவ்வேறு நாட்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது இந்த முரண்பாடுகளுக்கு காரணமாக இருக்கலாம். இதைதவிர, நாம் ராஜாக்கள் புத்தகத்தில் பொதுவாக காணப்படும் – ஆண்டுகணிப்பை, வரலாற்று தொடர்வரிசையை எடுத்துக்காட்டலாம் மேலும் உறுதியும்படுத்தலாம்.
விளக்கம் அளிப்பதில் உள்ள இரண்டாவது சவால் ஆபிரகாம் மற்றும் தாவீதின் உடன்படிக்கைகளுடன் சாலமோனுக்கு உள்ள உறவு குறித்து இடைபடுகிறது. 1ராஜா 4:20,21 ஆபிரகாமிற்கு தேவன் அளித்த வாக்குதத்தத்தின் (ஆதி.15:18-21; 22:17) நிறைவேறுதல் என்று விளக்கம் தரப்பட்டது. ஆனால் எண்ணாகமம்.34:6-ல் நாம் காண்கிறது ஆபிரகாமிற்கு வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்தின் மேற்கு எல்லை மத்தியதரைக்கடல் என காண்கிறோம். 1ராஜா.5:1-ல் தீருவின் ராஜாவாக ஈராம் (மத்தியதரைக்கடல் பகுதியையும் சேர்த்து) இருப்பதையும் சாலமோனுக்கு சமமாகவும் சொல்லப்படுவதைப் பார்க்கிறோம். சாலமோனின் அதிகாரத்தில் அதிகப்படியான இடங்கள் இருந்தபோதிலும், கர்த்தரால் ஆபிரகாமுக்கு உரைக்கப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தையின் நிறைவேறுதலாக சாலமோனின் ராஜ்ஜியம் இல்லை என்பதையே இதிலிருந்து அறிகிறோம். 1ராஜா.5:5 மற்றும் 8:20-ல் சாலமோன் தான் தாவீதிற்கு வாக்குதத்தம் செய்த வம்சத்தில் வருவதாக உரிமை கோருவதை காணமுடிகிறது (2சாமு.7:12-16). ராஜாக்கள் புத்தகத்தை எழுதிய ஆசிரியரும் - தாவீதிற்கு கர்த்தர் தாம் அருளின வார்த்தையின் நிறைவேறுதலே சாலமோன் கட்டின தேவாலயம் என்ற கருத்தை ஆதரிக்கிறார் எனினும், அந்த வாக்குதத்தம் நிறைவேற என்ன நிபந்தனைகளை கைக்கொள்ள வேண்டும் என்பது சாலமோனுக்கு திரும்ப வலியுறுத்திச் சொல்லப்பட்டது (1ராஜா.6:12), ஆனாலும், நிபந்தனைகளை சாலமோன் நிறைவேற்றவில்லை என்பதையும் காண்கிறோம் (1ராஜா.11:9-13). உண்மையில், தாவீதின் வம்சத்தில் வந்த எந்தவொரு ராஜாவையும் வாக்குதத்தம் செய்ததில் சொல்லப்பட்ட நிபந்தனைகள் யாவற்றையும் நிறைவேற்றியவர் இவர் என்று சொல்லமுடியாது. ராஜாக்கள் புத்தக ஆசிரியரின் கூற்றுப்படி, ஆபிரகாம் மற்றும் தாவீதின் உடன்படிக்கையின் நிறைவேறுதல் இஸ்ரவேலரின் கடந்த காலத்தில் அல்ல என்பது உறுதியாகிறது. இது வருங்காலத்து தீர்க்கதரிசிகள் (ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஏனைய பன்னிரண்டு தீர்க்கதரிசிகளின்) வருகைக்கு அஸ்திபாரம் போட்டது. இந்த தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலரின் எதிர்கால நம்பிக்கை - மேசியா தான் எனவும் இவரில் இந்த வாக்குதத்தங்கள் யாவும் நிறைவேறின என்பதையும் சுட்டிகாட்டுகின்றனர் (ஏசா.9:6,7-ஐ பார்க்கவும்).
சுருக்கம்
இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ராஜாக்கள்
ஒன்று சேர்ந்து இருந்த ராஜ்ஜியம்
ராஜா | வேதாகம வசனம் |
சவுல் | 1சாமுவேல்9:1-31;1நாளாகமம்10:1-14, 2சாமுவேல்; 1 ராஜா.1:1 -2:9; |
தாவீது | 1நாளா. 11:1 -29:30 |
சாலமோன் | 1ராஜா.2:10 -11:43; 2நாளா.1:1 -9:31 |
வடக்கு ராஜ்ஜியம்
ராஜா | வேதாகம வசனம் |
யெரோபெயாம் I | 1ராஜா.12:25 -14:20 |
நாதாப் | 1ராஜா.12:25 -14:20 |
பாஷா | 1ராஜா 15: 25 -31 |
ஏலா | 1ராஜா.16:8-14 |
சிம்ரி | 1ராஜா.16:15-20 |
திப்னி | 1ராஜா.16:21,22 |
உம்ரி | 1ராஜா.16:21-28 |
ஆகாப் | 1ராஜா.16:29 – 22:40 |
அகசியா | 1ராஜா.22:51-53; 2 ராஜா.1:1-18 |
யோராம் | 2ராஜா.2:1 – 8:15 |
யெகூ | 2ராஜா.9:1 – 10:36 |
யோவாகாஸ் | 2ராஜா.13:1-9 |
யோவாஸ் | 2ராஜா.13: 10-25 |
யெரோபெயாம் II | 2ராஜா.14: 23-29 |
சகரியா | 2ராஜா.15:8-12 |
சல்லூம் | 2ராஜா.15:13-15 |
மெனாகேம் | 2ராஜா.15:16-22 |
பெக்காகியா | 2ராஜா.15:16-22 |
பெக்கா | 2ராஜா.15:27-31 |
ஓசெயா | 2ராஜா.17:1-41 |
தெற்கு ராஜ்ஜியம்
ராஜா | வேதாகம வசனம் |
ரெகோபெயாம் | 1ராஜா.12:1–14:31;2நாளா.10:1–12:16 |
அபியாம் | 1ராஜா.15:1-8; 2நாளா.13:1–22 |
ஆசா | 1ராஜா.15:9-24; 2நாளா.14:1 – 16:4 |
யெகோசாபாத் | 1ராஜா.22::41-50; 2நாளா.17:1 – 20:37 |
யோராம் | 1ராஜா.8:16-24; 2நாளா.21:1–20 |
அகசியா | 2ராஜா.8:25: - 29:2; 2நாளா.22:1 – 23:21 |
அத்தாலியாள் (ராணி) | 2ராஜா.11:1-16; 2நாளா.22:1–23:21 |
யோவாஸ் | 2ராஜா.11:17-12:21; 2நாளா.22:1- 23:21 |
அகசியா | 2ராஜா.8: 25-29; 2நாளா.22:1–9 |
உசியா (அசரியா) | 1ராஜா.15:1-7; 2நாளா.26:1–23 |
யோதாம் | 1ராஜா.15:32 - 38; 2நாளா.27:1–9 |
ஆகாஸ் | 1ராஜா.16:1-20; 2நாளா.28:1–27 |
எசேக்கியா | 2ராஜா.18:1 -20:21; 2நாளா.29:1– 32:33 |
மனாசே | 2ராஜா.21:1-18; 2நாளா.33:1–20 |
ஆமோன் | 1ராஜா.22:19-26; 2நாளா.33:21-25 |
யோசியா | 2ராஜா.22:1-23:30; 2நாளா.34:1 – 35:27 |
யோவாகாஸ் | 2ராஜா.23:31- 33:2; 2நாளா.36:1–4 |
எலியாக்கீம் | 2ராஜா.23:34 -24:7; 2நாளா.36:5-8 |
யோயாக்கீன் | 2ராஜா.24: 8-16; 2நாளா.36:9,10 |
சிதேக்கியா | 2ராஜா.24:18 – 25:21; 2நாளா.36:11–21 |