1 | இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான். | 2சாமு 3:2 2சாமு 3:3 1நாளா 3:2 |
2 | தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது. | 1இரா 21:4 உன்ன 5:8 2கொரி 7:10 |
3 | அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி. | ஆதி 38:1 ஆதி 38:20 நியா 14:20 எஸ்தர் 5:10 எஸ்தர் 5:14 எஸ்தர் 6:13 நீதி 19:6 |
4 | அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினாலே இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். | 1இரா 21:7 எஸ்தர் 5:13 எஸ்தர் 5:14 லூக் 12:32 |
5 | அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான். | 2சாமு 16:21-23 2சாமு 17:1-4 சங் 50:18 சங் 50:19 நீதி 19:27 மாற் 6:24 மாற் 6:25 அப் 23:15 |
6 | அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். | ஆதி 18:6 மத் 13:33 |
7 | அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச்சொன்னான். |
8 | தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப்போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு, |
9 | சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள். | ஆதி 45:1 நியா 3:19 யோவா 3:20 |
10 | அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறை வீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள். |
11 | அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான். | ஆதி 39:11 ஆதி 39:12 |
12 | அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம். | ஆதி 34:2 உபா 22:29 |
13 | நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்க மாட்டார் என்றாள். | ஆதி 19:8 நியா 19:24 |
14 | அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான். | 2சாமு 12:11 உபா 22:25-27 நியா 20:5 எஸ்தர் 7:8 |
15 | பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான். | எசே 23:17 |
16 | அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல், |
17 | தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான். |
18 | அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள். | ஆதி 37:3 ஆதி 37:32 நியா 5:30 சங் 45:13 சங் 45:14 |
19 | அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டு போனாள். | 2சாமு 1:2 யோசு 7:6 யோபு 2:12 யோபு 42:6 |
20 | அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப் பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு; அவன் உன்னுடைய சகோதரன்; இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள். | நீதி 26:24 ரோம 12:19 |
21 | தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயெரிந்தான். | 2சாமு 3:28 2சாமு 3:29 2சாமு 12:5 2சாமு 12:10 ஆதி 34:7 1சாமு 2:22-25 1சாமு 2:29-25 சங் 101:8 |
22 | அப்சலோம் அம்னோனோடே நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை; தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான். | லேவி 19:17 லேவி 19:18 நீதி 25:9 மத் 18:15 |
23 | இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான். | ஆதி 38:12 ஆதி 38:13 1சாமு 25:2 1சாமு 25:4 1சாமு 25:36 2இரா 3:4 2நாளா 26:10 |
24 | அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். | 2சாமு 11:8-15 சங் 12:2 சங் 55:21 எரே 41:6 எரே 41:7 |
25 | ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என் மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான். | ஆதி 19:2 ஆதி 19:3 நியா 19:7-10 லூக் 14:23 லூக் 24:29 அப் 16:15 |
26 | அப்பொழுது அப்சலோம்: அது கூடாதிருந்தால், என் சகோதரனாகிய அம்னோனாவது எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்றான். | 2சாமு 3:27 2சாமு 11:13-15 2சாமு 20:9 சங் 55:21 |
27 | அப்சலோம் பின்னையும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவன் அம்னோனையும், ராஜாவின் குமாரர் அனைவரையும் அவனோடே போகவிட்டான். | நீதி 26:24-26 |
28 | அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான். | 2சாமு 11:15 யாத் 1:16 யாத் 1:17 1சாமு 22:17 1சாமு 22:18 அப் 5:29 |
29 | அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜகுமாரர் எல்லாரும் எழுந்திருந்து, அவரவர் தம் தம் கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள். | 1சாமு 22:18 1சாமு 22:19 1இரா 21:11-13 2இரா 1:9-12 நீதி 29:12 மீகா 7:3 |
30 | அவர்கள் வழியில் இருக்கிறபோதே, அப்சலோம் ராஜகுமாரரையெல்லாம் அடித்துக் கொன்றுபோட்டான், அவர்களில் ஒருவரும் மீந்திருக்க விடவில்லை என்கிறதாய், தாவீதுக்குச் செய்தி வந்தது. |
31 | அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்து கிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள். | 2சாமு 12:16 ஆதி 37:29 ஆதி 37:34 யோசு 7:6 யோபு 1:20 |
32 | அப்பொழுது தாவீதின் தமையனாகிய சிமியாவின் குமாரன் யோனதாப் வந்து: ராஜகுமாரரான வாலிபரையெல்லாம் கொன்று போட்டார்கள் என்று என் ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன் மாத்திரம் செத்துப்போனான்; அவன் தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் நெஞ்சில் இருந்தது. | 1சாமு 16:9 |
33 | இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்கிற பேச்சை ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே செத்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான். | 2சாமு 19:19 |
34 | ஜாமக்காரச் சேவகன் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேகம் ஜனங்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாய் வருகிறதைக் கண்டான். | 2சாமு 13:38 ஆதி 4:8-14 நீதி 28:17 ஆமோ 5:19 |
35 | அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜகுமாரர் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான். |
36 | அவன் பேசி முடிந்தபோது, ராஜகுமாரர் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா ஊழியக்காரரும் மிகவும் புலம்பி அழுதார்கள். | 2சாமு 13:15 2சாமு 12:21 2சாமு 18:33 |
37 | அப்சலோமோ அம்மீயூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். | 2சாமு 3:3 1நாளா 3:2 |
38 | அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான். | உபா 3:14 யோசு 12:5 2சாமு 14:23 2சாமு 14:32 2சாமு 15:8 |
39 | தாவீது ராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான். | ஆதி 31:30 உபா 28:32 பிலிப் 2:26 |