1சாமுவேல் 2:1-10 - WCV
1
அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது: “ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன்.
2
ஆண்டவரைப் போன்ற தூயவர் வேறு எவரும் இலர்! உம்மையன்றி வேறு எவரும் இலர்! நம் கடவுளைப் போன்ற வேறு பாறை இல்லை,
3
இறுமாப்புடன் இனிப்பேச வேண்டாம்! உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட வேண்டாம்! ஏனெனில், ஆண்டவர் அறிவின் இறைவன்! செயல்களின் அளவை எடை போடுபவர் அவரே!
4
வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
5
நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர். பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தோர் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்!
6
ஆண்டவர் கொல்கிறார்: உயிரும் தருகின்றார்: பாதாளத்தில் தள்ளுகிறார்: உயர்த்துகின்றார்:
7
ஆண்டவர் ஏழையாக்குகிறார்: செல்வராக்குகின்றார்: தாழ்த்துகின்றார்: மேன்மைப்படுத்துகின்றார்:
8
புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்: குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்: உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை! அவற்றின் மேல் அவர் உலகை நிறுவினார்!
9
தம்மில் பற்றுக்கொண்டோர் காலடிகளை அவர் காப்பார்! தீயோர், இருளுக்கு இரையாவார்! ஏனெனில் ஆற்றலால் எவரும் வலியவர் ஆவதில்லை!
10
ஆண்டவரை எதிர்ப்போர் நொறுக்கப்படுவர்! அவர் அவர்களுக்கு எதிராக வானில் இடிமுழங்கச் செய்வார்! ஆண்டவர் உலகின் எல்லை வரை தீர்ப்பிடுவார்!