11
அதற்கு நகோமி, “மக்களே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்: என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன பயன்? நீங்கள் மணந்து கொள்ள மீண்டும் மைந்தரைப் பெற்றுத்தர இனி என்னால் இயலுமா?
12
மக்களே, திரும்பிச் செல்லுங்கள். எனக்கோ வயதாகிவிட்டது. கணவரோடு கூடி வாழும் பருவமும் கடந்துவிட்டது. அவ்வாறன்றி, பிள்ளை பிறக்கும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு எனச் சொல்லி, இன்றிரவே நான் கணவரோடு கூடி மைந்தரைப் பெற்றெடுத்தாலும்
13
அவர்கள் பெரியவர்களாகும் வரையில் நீங்கள் வேறு யாரையும் மணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்காகக் காத்திருப்பீர்களா? மக்களே, வேண்டாம். ஆண்டவர் என்னைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். என்னால் உங்களுக்கு நேர்ந்தவற்றிற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று சொன்னார்.
14
அதைக் கேட்டு அவர்கள் மீண்டும் கதறி அழுதார்கள். பிறகு ஓர்பா தம் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றார்.
15
ஆனால் ரூத்தோ பிரிந்துபோக மறுத்துவிட்டார். நகோமி அவரிடம், “இதோ பார்! உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப்போ என்றார்.
16
அதற்கு ரூத்து, “உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்: உமது இல்லமே எனது இல்லம்: உம்முடைய இனமே எனது இனம்: உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்.
17
நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன்: அங்கேதான் என் கல்லைறையும் இருக்கும்: சாவிலும் உம்மைவிட்டு நான் பிரியேன்: அப்படிப் பிரித்தால் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக! என்றார்.
18
ரூத்து தம்மோடு வர மன உறுதியுடன் இருப்பதைக் கண்டு, நகோமி வேறொன்றும் கூறவில்லை.