வெளிப்படுத்தல் 6:3-8 - WCV
3
ஆட்டுக்குட்டி இரண்டாவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் இரண்டாவது, “வா” என்று அழைக்கக் கேட்டேன்.
4
அப்பொழுது சிவப்புக் குதிரை ஒன்று வெளியே வந்தது. அதன்மேல் ஏறியிருந்தவருக்கு, உலகில் அமைதியைக் குலைக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது: பெரியதொரு வாளும் அளிக்கப்பட்டது. மனிதர் தம்முள் ஒருவரை ஒருவர் படுகொலை செய்ய வேண்டுமென்றே இவை அவருக்குக் கொடுக்கப்பட்டன.
5
ஆட்டுக்குட்டி மூன்றாவது முத்திரையை உடைத்தபொழுது, அவ்வுயிர்களுள் மூன்றாவது”வா” என்று அழைக்கக் கேட்டேன்: தொடர்ந்து ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவருடைய கையில் ஒரு நிறைகோல் இருந்தது.
6
நான்கு உயிர்களின் நடுவில் மனிதக் குரல் போன்ற ஓசை ஒன்று கேட்டது. அது, “ஒரு தெனாரியத்துக்கு கோதுமை அரைப்படி: வாற்கோதுமை ஒன்றரைப் படி: எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் சேதப்படுத்தவேண்டாம்” என்றது.
7
ஆட்டுக்குட்டி நான்காவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் நான்காவது, “வா” என்று அழைக்கக் கேட்டேன்.
8
தொடர்ந்து வெளிறிய பச்சைக் குதிரை ஒன்றைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவரின் பெயர் சாவு. பாதாளமும் அவரோடு சென்றது. வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றாலும் மண்ணுலகின் விலங்குகளாலும் உலகின் கால் பகுதியை அழிக்க சாவுக்கும் பாதாளத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது.