வெளிப்படுத்தல் 6:12-17 - WCV
12
ஆட்டுக்குட்டி ஆறாவது முத்திரையை உடைக்கக் கண்டேன். அப்பொழுது பெரியதொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. கதிரவன் கறுப்புச் சாக்குத் துணி போலக் கறுத்தது. நிலவு முழுவதும் இரத்தம் போல் சிவந்தது.
13
பெரும் காற்று அடிக்கும்பொழுது அத்திமரத்திலிருந்து காய்கள் உதிர்வது போன்று விண்மீன்கள் நிலத்தின்மீது விழுந்தன.
14
சுருளேடு சுருட்டப்படுவதுபோல வானமும் சுருட்டப்பட்டு மறைந்தது. மலைகள், தீவுகள் எல்லாம் நிலை பெயர்ந்துபோயின.
15
மண்ணுலகில் அரசர்கள், உயர்குடி மக்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், செல்வர், வலியோர், அடிமைகள், உரிமைக் குடிமக்கள் ஆகிய அனைவரும் குகைகளிலும் மலைப் பாறைகளின் இடுக்குகளிலும் ஒளிந்து கொண்டார்கள்.
16
அவர்கள் அந்த மலைகளிடமும் பாறைகளிடமும், “எங்கள்மீது விழுங்கள், அரியணை மேல் வீற்றிருப்பவருடைய முகத்தினின்றும் ஆட்டுக்குட்டியின் சினத்தினின்றும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்:
17
ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் கொடிய நாள் வந்துவிட்டது. அதற்குமுன் நிற்க யாரால் இயலும்?” என்று புலம்பினார்கள்.