9
அவர்கள் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்: “ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே. நீர் கொல்லப்பட்டீர்: உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.
10
ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர். அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள்.”
11
தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்:
12
“கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது” என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள்.
13
பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், “அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என்று பாடக் கேட்டேன்.
14
அதற்கு அந்த நான்கு உயிர்களும், “ஆமென்” என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.