வெளிப்படுத்தல் 5:1-9 - WCV
1
அரியணையில் வீற்றிருந்தவரது வலக்கையில் ஒரு சுருளேட்டைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது: அது ஏழு முத்திரை பொறிக்கப் பெற்று மூடப்பட்டிருந்தது.
2
“முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?” என்று வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன்.
3
நூலைத் திறந்து படிக்க விண்ணுலகிலோ மண்ணுலகிலோ கீழுலகிலோ இருந்த எவராலும் இயலவில்லை.
4
சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லையே என்று நான் தேம்பி அழுதேன்.
5
அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம், “அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்: அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்து விடுவார்” என்று கூறினார்.
6
அந்த நான்கு உயிர்களும் மூப்பர்களும் புடை சூழ, அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அக்கண்கள் மண்ணுலகெங்கும் அனுப்பப்பெற்ற கடவுளின் ஏழு ஆவிகளே.
7
ஆட்டுக்குட்டி முன்சென்று, அரியணையில் வீற்றிருந்தவரின் வலக்கையிலிருந்து அந்த ஏட்டை எடுத்தது.
8
அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டிமுன் வீழ்ந்தார்கள்: அவர்கள் ஒவ்வொருவரும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற் கிண்ணங்களும் வைத்திருந்தார்கள். இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள்.
9
அவர்கள் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்: “ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே. நீர் கொல்லப்பட்டீர்: உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர்.