1
பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று.
2
அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.
3
பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்: அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்.
4
அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது: முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன” என்றது.
5
அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை" என எழுது” என்றார்.