வெளிப்படுத்தல் 19:1-7 - WCV
1
இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல்போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது: “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.
2
ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்: தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.”
3
மீண்டும் அந்த மக்கள், “அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது” என்றார்கள்.
4
அந்த இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருந்த கடவுள்முன் விழுந்து வணங்கி, “ஆமென், அல்லேலூயா” என்று பாடினார்கள்.
5
அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.
6
பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல்போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும் பேரிடி முழக்கம் போலும் எழுந்த போரொலியைக் கேட்டேன். அது சொன்னது: “அல்லேலூயா! நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்: அவர் ஆட்சி செலுத்துகின்றார்.
7
எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.