12
நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களைக் குறிக்கும். அவர்கள் இன்னும் ஆட்சியுரிமை பெறவில்லை. ஆனால், அவர்கள் விலங்கோடு சேர்ந்து ஒரு மணி அளவு அரசாள அதிகாரம் பெறுவார்கள்.
13
அவர்கள் ஒருமனப்பட்டவராய்த் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அவ்விலங்கிடம் ஒப்படைத்தார்கள்.
14
அவர்கள் ஆட்டுக்குட்டியோடு போர் புரிவார்கள். ஆனால், அது அவர்களை வென்றுவிடும்: கடவுளால் அழைக்கப்பெற்று, தேர்ந்தெடுக்கப் பெற்று உண்மை உள்ளவர்களாய் ஆட்டுக்குட்டியோடு இருப்பவர்களும் வெற்றி கொள்வார்கள்: ஏனெனில் ஆட்டுக் குட்டி ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அரசருக்கெல்லாம் அரசர்.”
15
வானதூதர் தொடர்ந்து என்னிடம் சொன்னது: “அந்த விலைமகள் நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்க நீ கண்டாய். அந்த நீர்த்திரள் பல்வேறு இனத்தினர், மக்கள் கூட்டத்தினர், நாட்டினர், மொழியினர் ஆகியோரைக் குறிக்கும்.
16
நீ கண்ட பத்துக் கொம்புகளும் விலங்கும் அந்த விலைமகள்மீது வெறுப்புக் கொண்டு, அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு, அவளைப் பிறந்தமேனி ஆக்கும்: அவளது சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.
17
ஏனெனில் கடவுள் தமது நோக்கத்தை நிறைவேற்றவே அந்நாட்டினரின் உள்ளங்களைத் தூண்டிவிட்டார். அவரது வாக்கு நிறைவேறும்வரை, அவர்கள் ஒருமனப்பட்டவராய்த் தங்களது ஆட்சியை விலங்கிடம் ஒப்படைத்ததும் அதே காரணத்தினால்தான்.
18
நீ கண்ட பெண் மண்ணுலக அரசர்கள்மீது ஆட்சி செலுத்தும் மாநகர் ஆகும்.”