வெளிப்படுத்தல் 14:8-12 - WCV
8
மற்றொரு வானதூதர் அவரைத் தொடர்ந்து வந்தார். இந்த இரண்டாம் தூதர், “வீழ்ந்தது! பரத்தைமை என்னும் தன் மதுவை எல்லா நாட்டினரும் குடித்து வெறிகொள்ளச் செய்த பாபிலோன் மாநகர் வீழ்ந்தது!” என்றார்.
9
வேறொரு வானதூதர் அவர்களைத் தொடர்ந்து வந்தார். அந்த மூன்றாம் வானதூதர் உரத்த குரலில் கூறியது: “விலங்கையும் அதன் சிலையையும் வணங்கி, தங்கள் நெற்றியிலோ கையிலோ குறி இட்டுக்கொண்டோர் அனைவரும்
10
கடவுளின் சீற்றம் என்னும் மதுவை-அவர்தம் சினம் என்னும் கிண்ணத்தில் கலப்பின்றி ஊற்றப்பட்ட அந்த மதுவை-குடித்தே தீர வேண்டும். அவர்கள் தூய வானதூதர் முன்னிலையிலும் ஆட்டுக்குட்டியின் முன்னிலையிலும் நெருப்பாலும் கந்தகத்தாலும் வதைக்கப்படுவார்கள்.
11
அவர்களை வதைத்த நெருப்பிலிருந்து எழுந்த புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது. அந்த விலங்கையும் அதன் சிலையையும் வணங்குவோருக்கும் அதனுடைய பெயரைக் குறியாக இட்டுக்கொண்டோருக்கும் அல்லும் பகலும் ஓய்வே இராது.
12
ஆகவே கடவுளுடைய கட்டளைகளைக் கடைபிடித்து, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இறைமக்களுக்கு மனவுறுதி தேவை.”