2பேதுரு 2:10-20 - WCV
10
குறிப்பாக, கெட்ட இச்சைகள் கொண்டு ஊனியல்பின்படி நடப்பவர்களையும் அதிகாரத்தைப் புறக்கணிப்பவர்களையும் அவர் தண்டிப்பார். இவர்கள் துணிச்சலுள்ளவர்கள், அகந்தையுள்ளவர்கள்: மேன்மை பொருந்தியவர்களைப் பழித்துரைக்க அஞ்சாதவர்கள்.
11
இவர்களைவிட மிகுதியான ஆற்றலும் வல்லமையும் கொண்டுள்ள வானதூதர்கள்கூட அவர்களை ஆண்டவர் முன்னிலையில் பழித்துரைத்துக் கண்டனம் செய்வதில்லை.
12
ஆனால் இவர்கள் பிடிபடவும் கொல்லப்படவுமே தோன்றிய, இயல்புணர்ச்சியினால் உந்தப்படும் பகுத்தறிவற்ற விலங்குகளைப் போன்றவர்கள்: தாங்கள் அறியாதவற்றைப் பழிக்கிறார்கள்: அவ்விலங்குகள் அழிவுறுவதுபோலவே இவர்களும் அழிவார்கள்:
13
தாங்கள் இழைத்த தீவினைக்குக் கைம்மாறாகத் தீவினையே அடைவார்கள்: பட்டப் பகலில் களியாட்டத்தில் ஈடுபடுவதே இன்பம் எனக் கருதுகிறார்கள். உங்களோடு விருந்துண்ணும் இவர்கள் தங்கள் ஏமாற்று வழிகளில் களிப்படைகிறார்கள். உங்களை மாசுபடுத்திக் கறைப்படுத்துகிறார்கள்.
14
இவர்களது கண்கள் கற்புநெறியிழந்த பெண்களையே நாடுகின்றன: பாவத்தை விட்டு ஓய்வதேயில்லை. இவர்கள் மனவுறுதி அற்றவர்களை மயக்கித் தம்வயப்படுத்துகிறார்கள். பேராசையில் ஊறிய உள்ளம் கொண்ட இவர்கள் சாபத்துக்குள்ளானவர்கள்.
15
இவர்கள் நேரிய வழியை விட்டகன்று அலைந்து திரிந்தார்கள்: பெரியோரின் மகன் பிலயாமின் வழியைப் பின்பற்றினார்கள். அந்தப் பிலயாம் கூலிக்காகத் தீவினை செய்ய விரும்பினார்.
16
அவர் தம் ஒழுங்குமீறிய செயலுக்காகக் கடிந்து கொள்ளப்பட்டார். பேச இயலாத கழுதை மனிதமுறையில் பேசி அந்த இறைவாக்கினரின் மதிகெட்ட செயலைத் தடுத்தது.
17
இவர்கள் நீரற்ற ஊற்றுகள்: புயலால் அடித்துச் செல்லப்படும் மேகங்கள். காரிருளே இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
18
நெறிதவறி நடப்போரிடமிருந்து இப்போதுதான் தப்பியவர்களை, இவர்கள் வரம்புமீறிப் பெருமையடித்து வீண்பேச்சுப் பேசி, ஊனியல்பின் இச்சைகளாலும், காமவெறியாலும் மயக்கி வயப்படுத்துகின்றனர்:
19
அவர்களுக்கு விடுதலை அளிப்பதாக வாக்களிக்கின்றனர்: ஆனால், தாங்களே அழிவுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர். ஏனெனில் ஒவ்வொருவரும் தம்மை ஆட்கொண்டிருப்பவற்றிற்கு அடிமைகளாய் இருக்கிறார்கள்.
20
நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து, உலகத்தின் அழிவு சக்திகளிலிருந்து தப்பினவர்கள் மீண்டும் அவற்றில் சிக்கி அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னைய நிலை முன்னையை நிலையைவிடக் கேடுள்ளதாயிருக்கும்.