8
மேற்கூறியவற்றின்மூலம் தூய ஆவியார், முன்கூடாரம் நீடித்து இருக்கும்வரை, தூயகத்திற்குச் செல்லும் வழி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதை காட்டுகிறார்.
9
இக்கூடாரம் இக்கால நிலையை சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில் இக்காலத்தில் செலுத்தப்படும் காணிக்கைகளும் பலிகளும் வழிபடுகிறவரின் மனச்சான்றை நிறைவுக்குக் கொண்டுவர இயலாதனவாகும்.
10
இவை உடலைச் சார்ந்த ஒழுங்குகளே. உண்பது பற்றியும் குடிப்பது பற்றியும் பல்வேறு வகையான தூய்மைப்படுத்தும் சடங்குகள் பற்றியும் எழுந்த இவை சீரமைப்புக் காலம் வரைதான் நீடிக்கும்.
11
ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல: அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல.
12
அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார்.
13
வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள்.
14
ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.
15
இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.
16
ஏனெனில் விருப்ப ஆவணம் ஒன்று இருக்கிறது என்றால் அதனை எழுதியவர் இறந்துவிட்டார் என்பது மெய்ப்பிக்கப்பட வேண்டும்.