32
இன்னும் கூறவேண்டுமா? கிதியோன், பாராக்கு, சிம்சோன், இப்தாகு தாவீது, சாமுவேல் ஆகியோர்பற்றியும், இறைவாக்கினர் பற்றியும் எடுத்துரைக்க எனக்கு நேரமில்லை.
33
நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள்: நேர்மையாகச் செயல்பட்டார்கள்: கடவுள் வாக்களித்தவற்றைப் பெற்றார்கள்: சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்:
34
தீயின் கொடுமையைத் தணித்தார்கள்: வாள் முனைக்குத் தப்பினார்கள்: வலுவற்றராயிருந்தும் வலிமை பெற்றார்கள்: போரில் வீரம் காட்டினார்கள்: மாற்றார் படைகளை முறியடித்தார்கள்.
35
பெண்கள் இறந்த தம் உறவினரை உயிர்த்தெழுந்தவராய்ப் பெற்றுக்கொண்டார்கள். உயிர்த்தெழுந்து சிறப்புறும் பொருட்டு, சிலர் விடுதலை பெற மறுத்து வதையுண்டு மடிந்தனர்.
36
வேறு சிலர் ஏளனங்களுக்கும் கசையடிகளுக்கும் ஆளாயினர்: விலங்கிடப்பட்டுச் சிறையில்கூட அடைக்கப்பட்டனர்.
37
சிலர் கல்லெறிபட்டனர்: இரண்டாக அறுக்கப்பட்டனர்: வாளுக்கு இரையாகி மடிந்தனர்: செம்மறியின் தோலையும் வெள்ளாட்டுத் தோலையும் போர்த்துக்கொண்டு அலைந்து திரிந்தனர்: வறுமையுற்று வாடினர்: துன்புறுத்தப்பட்டனர்: கொடுமைக்கு உள்ளாயினர்.