எபிரெயர் 11:24-31 - WCV
24
மோசே பெரியவரான பின்பு பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்பட மறுத்ததும் நம்பிக்கையினாலேதான்.
25
பாவத்தில் சிறிது காலம் இன்புறுவதைவிட, கடவுளுடைய மக்களோடு சேர்ந்து துன்புறுவதையே அவர் தேர்ந்து கொண்டார்.
26
ஏனெனில், தமக்குக் கிடைக்கவிருந்த கைம்மாறு ஒன்றையே கண்முன் இருத்தி, அவர் எகிப்தின் செல்வங்களைவிட, “மெசியாவின்” பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம் என்று கருதினார்.
27
அரசனுடைய சீற்றத்திற்கு அஞ்சாது, அவர் எகிப்தைவிட்டு வெளியேறியதும் நம்பிக்கையினால்தான்: கண்ணுக்குப் புலப்படாதவரைக் கண்ணால் பார்ப்பவர் போன்று உறுதியாய் இருந்தார்.
28
அவர் பாஸ்காவைக் கொண்டாடியதும் தலைப்பேறானவர்களை அழிக்க வந்தவன் இஸ்ரயேலரைத் தீண்டாதபடி இரத்தத்தைத் தெளித்ததும் நம்பிக்கையினால்தான்.
29
இஸ்ரயேலர் கட்டாந்தரையைக் கடப்பது போன்று செங்கடலைக் கடந்து சென்றது நம்பிக்கையினால் தான். ஆனால் எகிப்தியர் அதைக் கடக்க முயன்றபோது மூழ்கிவிட்டனர்.
30
இஸ்ரயேலர் ஏழுநாள் வலம் வந்த பின்னர், எரிகோவின் மதில்கள் விழுந்ததும் நம்பிக்கையினால்தான்.
31
விலைமகளான இராகாபு ஒற்றர்களை நன்கு வரவேற்று, கீழ்ப்படியாதவரோடு அழியாது தப்பித்துக் கொண்டதும் நம்பிக்கையினால்தான்.