7
பாலைநிலத்தில் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை நீங்கள் சினத்துக்கு உள்ளாக்கினதை நினையுங்கள்: அதை மறந்துவிடாதீர்கள்.நீங்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியே வந்த நாள் முதல் இந்த இடத்திற்கு வரும்வரை ஆண்டவரை எதிர்த்துக் கலகம் செய்தீர்கள்.
8
ஓரேபிலும் நீங்கள் ஆண்டவரைக் கடுஞ்சினத்துக்கு உள்ளாக்கினீர்கள்.அதனால், உங்களை அழிக்கும் அளவுக்கு ஆண்டவர் சினம்கொண்டார்.
9
ஆண்டவர் உங்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக் கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பது பகலும் நாற்பது இரவும் தங்கியிருந்தேன்.அப்பொழுது, நான் அப்பம் உண்டதுமில்லை: நீர் பருகியதுமில்லை.
10
கடவுளின் விரலால் எழுதப்பட்டிருந்த இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார்.சபை கூடிய நாளில், மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசிய எல்லா வார்த்தைகளும் அவற்றில் இருந்தன.
11
நாற்பது பகலும் நாற்பது இரவும் கழிந்த பின், உடன்படிக்கைப் பலகைகளான இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார்.
12
அப்பொழுது, ஆண்டவர் என்னிடம், “எழுந்து, இங்கிருந்து விரைந்து இறங்கிச் செல்.ஏனெனில், நீ எகிப்திலிருந்து அழைத்துவந்த உன் மக்கள் சீரழிந்து விட்டனர்.நான் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகிவிட்டனர்.வார்ப்புச்சிலை ஒன்றை அவர்களுக்கெனச் செய்து கொண்டனர்” என்றார்.