உபாகமம் 6:1-6 - WCV
1
உங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறும், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில் கடைப்பிடிக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட கட்டளைகளும், நியமங்களும், முறைமைகளும் இவைகளே.
2
நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ் நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
3
இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.
4
இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.
5
முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!
6
இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.