8
உன்னதமானவர் வௌவேறு இனங்களுக்கு உரிமைச்சொத்துக்களைப் பங்கிட்டபோது, ஆதாமின் பிள்ளைகளை அவர் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் இனங்களின் எல்லைகளையும் திட்டமிட்டார்.
9
ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே! அவரது உரிமைச் சொத்து யாக்கோபே!
10
பாழ்வெளியில் அவர் அவனை கண்டார்: வெறுமையான ஓலமிடும் பாலையில் அவனைக் கண்டார்: அவர் அவனைப் பாதுகாத்துப் பேணினார்: கண்ணின் மணியென அவனைக் காத்தருளினார்.
11
கழுகு தன் கூட்டின்மேல் அசைத்தாடித் தன் குஞ்சுகளின்மேல் படந்து அணைப்பது போலும், தன் சிறகுகளை விரித்து அவற்றைச் சுமந்து செல்வது போலும் அவற்றைத் தன் சிறகுகளில் சுமப்பது போல்,
12
ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்: வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை.
13
பூவுலகின் முகடுகளில் அவனை வாழச்செய்தார்: வயல்வெளியின் விளைச்சலை அவன் உண்டான்: கன்மலைத் தேனை அவன் சுவைத்தான்: கற்பாறை எண்ணெயைப் பயன்படுத்தினான்.
14
பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் இவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார்.