15
ஆனால் கொழுத்த காளை மார்பிலே பாய்ந்தது: எசுரூன் கொழுத்துப் பருத்து முரடனானான்: தனைப்படைத்த கடவுளை விட்டு அவன் விலகினான்: தனது மீட்பின் பாறையை எள்ளி நகைத்தான்.
16
வேற்றுத் தெய்வங்களால் அவருக்கு எரிச்சலூட்டினர்: அருவருப்புகளால் அவருக்குச் சினமூட்டினர்.
17
இறையல்லாத பேய்களுக்குப் பலி செலுத்தினர்: அவர்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களுக்கு, நேற்று முளைத்த புதிய தெய்வங்களுக்கு, உங்கள் முன்னோர் அஞ்சாத அவற்றிற்குப் பலியிட்டனர்.
18
உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்: உன்னை உருவாக்கிய கடவுளை மறந்து விட்டாய்”.
19
தன் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார்.
20
அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்: அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்: ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்: நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.
21
இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்: அவர்களின் சிலைகளால் எனக்குச் சினமூட்டினர்: ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்: மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன்.
22
எனது சினத்தில் நெருப்புப்பொறி தெறிக்கும்: கீழுலகின் அடிமட்டம்வரை அது எரிக்கும்: பூவுலகையும் அதன் விளைபலன்களையும் அழிக்கும்: மாமலைகளின் அடித்தளமே தீப்பற்றி எரியும்.
23
தீங்குகளை அவர்கள்மேல் கொட்டிக் குவிப்பேன்: என் அம்புகளை அவர்கள்மேல் எய்து தீர்ப்பேன்.
24
பசியினால் அவர்கள் வாடுவர்: கொள்ளை நோயால் மாய்வர்: கொடிய வாதைகளால் மடிவர்: விலங்குகளின் பற்களுக்கு இரையாவர்: புழுதியில் ஊரும் நச்சுப்பூச்சிகளால் மடிவர்.
25
வெளியிலே வாள்: உள்ளே பேரச்சம்! இளைஞனும் கன்னிப் பெண்ணும் பால்குடி மறைவாக் குழந்தையும் முடிநரைத்த கிழவனும் அழிவர்.
26
நான் சொன்னேன்: அவர்களை எத்திக்கிலும் சிதறடிப்பேன்: அவர்களது நினைவு மனிதரிடமிருந்து அற்றுப் போகச் செய்வேன்.
27
ஆயினும்,”எங்கள் கைகள் வலிமையானவை! இதையெல்லாம் ஆண்டவர் செய்யவில்லை!” என்று அவர்களின் பகைவர் திரித்துப் பேசுவர் என்பதாலும் பகைவனின் பழிச் சொல்லுக்கு அஞ்சியும் வாளாவிருந்தேன்.
28
அவர்கள் புத்தி கெட்ட மக்கள்: அவர்களிடம் விவேகம் சிறிதும் இல்லை.
29
அவர்கள் ஞானமடைந்து இதனை உணர்ந்து தங்களுக்கு நிகழப்போவதை உய்த்துணர்ந்தால் எத்துணை நலம்!
30
ஒரே ஆள் ஆயிரம் பேரைத் துரத்துவதும் இரண்டு பேர் பதினாயிரம் பேரை விரட்டுவதும் அவர்களது பாறையை அவர்களை விற்றுவிட்டதாலன்றோ? அவர்களின் கடவுள் அவர்களைக் கைவிட்டதாலன்றோ?
31
அவர்களது பாறை நமது பாறை போன்றன்று என்று நம்முடைய பகைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.
32
அவர்களது கொடிமுந்திரி சோதோமிலிருந்து வருவதாகும்: கொமோராவின் வயல்வெளியிலிருந்து வருவதாகும்: அவர்களது திராட்சைகள் நச்சுத் திராட்சைகள்: அவர்களது திராட்சைக் கொத்துக்கள் கசப்பானவை.
33
அவர்களது இரசம் பாம்பின் நஞ்சு போன்றது: விரியன் பாம்பின் கொடிய நஞ்சு போன்றது.
34
இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளது அன்றோ? என் கருவூலங்களில் முத்திரையிடப்பட்டுள்ளது அன்றோ?
35
பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன: உரிய நாளில் அவர்களின் கால்கள் தள்ளாடும்: அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது: அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன.
36
அவர்கள் ஆற்றல் இழந்து விட்டவர்கள் எனவும் அடிமையோ குடிமகனோ எவனுமில்லை எனவும் காணும்போது ஆண்டவரே அவர் மக்களுக்குத் தீர்ப்பிடுவார்: அவர்தம் ஊழியர்களுக்காக அவர் மனமிரங்கிடுவார்.
37
அப்பொழுது அவர் உரைப்பார்: அவர்களின் தெய்வங்கள் எங்கே? அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே?
38
அவர்கள் பலியிட்டவற்றின் கொழுப்பை உண்டவர்கள் எங்கே? நீர்மப்படையல் இரசத்தைக் குடித்தவர்கள் எங்கே? அவர்கள் இப்போது முன்வந்து உனக்கு உதவட்டுமே! அவர்களது உனது புகலிடம் ஆகட்டுமே!
39
நானே இருக்கிறவர்! என்னைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை இப்பொழுது உணர்ந்து கொள்ளுங்கள்! கொல்பவரும் நானே: உயிரளிப்பவரும் நானே! காயப்படுத்துபவரும் நானே: குணமாக்குபவரும் நானே! என் கைகளிலிருந்து விடுவிப்பார் எவரும் இரார்.
40
ஏனெனில், என் கைகளை வானோக்கி உயர்த்தி என்றும் வாழும் என்மீது ஆணையிட்டு உரைக்கிறேன்.
41
மின்னும் என் வாளை நான் தீட்டி, நீதித் தீர்ப்பை என் கையில் எடுக்கும்போது என் பகைவரைப் பழி வாங்கி என்னைப் பகைப்பவருக்குப் பதிலடி கொடுப்பேன்.
42
கொலையுண்டோர், சிறைப்பட்டோரின் இரத்தத்திலும் நீள்முடித் தலைவரின் இரத்தத்திலும் என் அம்புகள் குடிக்கச் செய்வேன்: என் வாள் சதையை உண்ணச் செய்வேன்.
43
வேற்றினங்களே! ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்: அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப் பழி வாங்கினார்: அவர் தம் பகைவர்களுக்குப் பதிலடி கொடுத்தார்.தம் மக்களின் நாட்டைக் கறைநீக்கம் செய்தார்.
44
மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எழுத்துரைத்தார்கள்.