1
இவை எல்லாம் நிகழும்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்துள்ள மக்களினங்களுக்கிடையே வாழ்கையில், நான் உனக்கு முன்னே வைத்த ஆசி, சாபம் ஆகியவற்றை, உன் உள்ளத்தில் சிந்தனை செய்.
2
நான் இன்று உனக்கு அளிக்கும் அனைத்துக் கட்டளைகளின்படி உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா.நீயும் உன் பிள்ளைகளும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால்,
3
கடவுளாகிய ஆண்டவர் உன்னை அடிமைத்தனத்தினின்று விடுவிப்பார்.உன்மேல் இரக்கம்கொண்டு, உன்னை அவர் சிதறடித்துள்ள எல்லா நாடுகளிலுமிருந்து மீண்டும் கூட்டிச் சேர்ப்பார்.
4
நீ வானத்தின் கடையெல்லைவரை துரத்தப்பட்டிருந்தாலும், உன் கடவுளாகிய ஆண்டவர், அங்கிருந்து உன்னைக் கூட்டிச் சேர்ப்பார்.ஆண்டவர் அங்கிருந்து உன்னை அழைத்துக் கொண்டு வருவார்.
5
கடவுளாகிய ஆண்டவர், உன் மூதாதையர் உடைமையாக்கியிருந்த நாட்டுக்குள் உன்னைக் கொணர்வார்.நீயும் அதை உடைமையாக்கிக்கொள்வாய்.உனக்கு நன்மைகள் ஈந்து உன் மூதாதையரைவிட உன்னைப் பெருகச் செய்வார்.
6
கடவுளாகிய ஆண்டவர் உன் உள்ளத்தையும் உன் வழிமரபின் உள்ளத்தையும் பண்படுத்துவார்.அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர்மீது நீ முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்வாய்.அப்போது, நீயும் வாழ்வு பெறுவாய்.
7
கடவுளாகிய ஆண்டவர், இந்தச் சாபங்களை எல்லாம் உன் பகைவர்மீதும், உன்னை வெறுப்பவர்மீதும், உன்னைக் கொடுமைப்படுத்துவோர் மீதும் வரச்செய்வார்.
8
நீ ஆண்டவரிடம் திரும்பிவா.அவரது குரலுக்குச் செவிகொடு.நான் இன்று உனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் கடைப்பிடி.