10
இன்று நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றீர்கள்.உங்கள் குலங்களின் தலைவர்களும், உங்கள் பெரியோர்களும், உங்கள் அலுவலர்களும், இஸ்ரயேலின் ஆடவர் ஏனையோரும்.
11
உங்கள் சிறுவரும், உங்கள் மனைவியரும், உங்கள் பாளையத்தில் உங்களோடு உள்ள அன்னியராகிய விறகு வெட்டியும் தண்ணீர் சுமப்பவனும் ஆகிய எல்லோரும் நிற்கின்றீர்கள்.
12
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் மூதாதையருக்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னது போலவும், அவர் உங்களுக்கு வாக்களித்தது போலவும், அவர் இன்று உங்களைத் தம் சொந்த மக்களாக நிலைநிறுத்தி உங்கள் கடவுளாக இருக்குமாறும்,
13
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இன்று உங்களோடு செய்யப்போகின்ற அவர்தம் உடன்படிக்கையிலும் வாக்குறுதியிலும் பங்கு கொள்ளுமாறும் நீங்கள் நிற்கின்றீர்கள்.
14
வாக்குறுதியுடன் கூடிய இந்த உடன்படிக்கையை உங்களோடு மட்டும் அவர் செய்துகொள்ளவில்லை.
15
மாறாக, இங்கு நம்மோடு நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நிற்கின்றவர்களோடும், இன்று இங்கு நம்மோடு இல்லதாவர்களோடும் செய்துகொள்கிறார்.