உபாகமம் 28:30-68 - WCV
30
நீ ஒரு பெண்ணை மணமுடிப்பாய்: வேறு ஒருவன் அவளோடு கூடி வாழ்வான். நீ ஒரு வீட்டைக்கட்டுவாய்: ஆனால் அதில் நீ குடியிருக்க மாட்டாய்.நீ திராட்சைத் தோட்டத்தை அமைப்பாய்: ஆனால், அதன் பயனை அனுபவிக்கமாட்டாய்.
31
மாடு உன் கண்களுக்கு முன்னால் வெட்டப்படும்: ஆனால் அதிலிருந்து நீ உண்ண முடியாது.உன் கழுதை உன் கண்களுக்கு முன்னால் கொள்ளையிடப்படும்: அது உன்னிடம் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது.உன் ஆடுகள் உன் பகைவனுக்குக் கொடுக்கப்படும்.அவற்றை விடுவிப்பார் எவரும் இரார்.
32
கண்முன்னே, உன் புதல்வரும் புதல்வியரும் வேற்று மக்களுக்குக் கொடுக்கப்படுவர்.அவர்களைப் பார்க்க நாள்தோறும் உன் கண்கள் ஏங்கி எதிர்பார்த்துப் பூத்துப்போகும்.உன் கைகளும் வலிமையற்றுப்போகும்.
33
நீ அறியாத மக்களினம் உன் நிலத்தின் கனிகளையும் உன் உழைப்பின் பயனையும் உண்ணும்.நீயோ எந்நாளும் ஒடுக்கப்பட்டவனும் நொறுக்கப்பட்டவனுமாய் இருப்பாய்.
34
உன்கண்கள் காணும் இக்காட்சிகளால் உனக்குப் பைத்தியம் பிடிக்கும்.
35
முழங்கால்களிலும் தொடைகளிலும் தோன்றும், குணப்படுத்தவே முடியாத, கொடிய கொப்புளங்களால் ஆண்டவர் உன்னை வதைப்பார்.உன் உள்ளங்கால்முதல் உச்சந்தலைவரை அது பரவும்.
36
உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திய அரசனையும், உனக்கும், உன் மூதாதையருக்கும் தெரியாத இனத்தாரிடம் ஆண்டவர் போகச் செய்வார்.அங்கு மரத்தாலும் கல்லாலுமான வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.
37
ஆண்டவர் உன்னைக் கொண்டுபோய்விடும் அனைத்து மக்கள் நடுவிலும், நீ அருவருப்புப் பொருளாக, கேலிப் பழமொழியாக, நகைப்புச் சொல்லாக ஆகிவிடுவாய்.
38
வயலில் மிகுதியாக விதைத்துக் கொஞ்சமே அறுப்பாய்: ஏனெனில் வெட்டுக் கிளிகள் அதைத்தின்று அழித்துவிடும்.
39
திராட்சைத் தோட்டங்களை அமைத்துப் பேணுவாய்: ஆயினும் இரசம் குடிக்கவும் மாட்டாய்: பழங்களைச் சேகரிக்கவும் மாட்டாய்: ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றழிக்கும்.
40
ஒலிவ மரங்கள் உனக்குரிய நிலமெங்கும் இருக்கும்: ஆனால் நீ எண்ணெய் தேய்க்க மாட்டாய்.ஏனெனில் உன் ஒலிவம்பிஞ்சுகள் உதிர்ந்துவிடும்.
41
நீ புதல்வரையும் புதல்வியரையும் பெற்றெடுப்பாய்: ஆயினும் அவர்கள் உனக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள்.ஏனெனில் அவர்கள் அடிமைகளாக கொண்டு போகப்படுவர்.
42
மரங்கள் எல்லாவற்றையும், உன் நிலத்தின் பயனையும் வெட்டுக்கிளி உடைமையாக்கிக் கொள்ளும்.
43
உன்னிடையே வாழும் அன்னியர் உன்னைவிட மேம்பட்டு மேலும் மேலும் உயர்வர்: நீயோ படிப்படியாகத் தாழ்ந்து போவாய்.
44
உனக்கு கடன் கொடுக்க அவர்களால் முடியும்.அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னால் இயலாது.அவர்கள் முதல்வராய் இருக்க நீ கடையன் ஆவாய்.
45
இந்தச் சாபங்கள் அனைத்தும் உன்னைத் துரத்திவந்து பிடித்து, நீ அழியுமட்டும் உன்னை வதைக்கும்.ஏனெனில், நான் உனக்குக் கட்டளையிட்ட அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் நீ கடைப்பிடிக்கவில்லை: உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவுமில்லை.
46
இச்சாபங்கள் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் அடையாளமாகவும் வியத்தகு செயலாகவும் என்றும் இருக்கும்.
47
எல்லா நலன்களும் நிறைந்திருக்கையில் நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு மன மகிழ்வோடும் இதயக்களிப்போடும் ஊழியம் செய்யவில்லை.
48
எனவே, பசியோடும், தாகத்தோடும், வெற்றுடம்போடும் யாது மற்ற நிலையிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கெதிராக அனுப்பும் உன் பகைவர்களுக்கு நீ பணிவிடை செய்வாய்.அவர்கள் உன்னை அழித்தொழிக்கும் மட்டும் இரும்பு நுகத்தடியை உன் கழுத்தில் வைப்பர்.
49
வெகு தொலையிலிருந்து, பூவுலகின் கடைக்கோடியிலிருந்து, ஓர் இனத்தை ஆண்டவர் உனக்கு எதிராக எழச்செய்வார்.அது கழுகைப்போல மிக வேகமாக வரும்.அந்த இனத்தின் மொழி உனக்குப் புரியாது.
50
அந்த இனம் கொடிய முகம் கொண்டது: முதியவர்களை மதிக்காது: இளைஞர்களுக்கு இரக்கம் காட்டாது.
51
நீ அழிந்து போகும்வரை அந்த இனம் உன் கால்நடைகளின் ஈற்றுகளையும், உன் நிலத்தின் பயனையும் உண்ணும்.உன்னை அழிக்கும்வரை, உன் தானியத்தையும், இரசத்தையும், எண்ணெயையும், உன் மாடுகளின் கன்றுகளையும், உன் ஆடுகளின் குட்டிகளையும் அந்த இனம்விட்டு வைக்காது.
52
உனது நாடெங்கும், நீ நம்பியிருக்கும் உயர்ந்தவையும், அரண்சூழ் கொத்தளங்கள் கொண்டவையுமான மதிற்சுவர்கள் விழும்வரை, அந்த இனம் உன் நகர் வாயில்களையெல்லாம் முற்றுகையிடும்.ஆம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த நாடெங்கிலுமுள்ள உன் நகர் வாயில்களை முற்றுகை இடும்.
53
உன் பகைவன் முற்றுகையிட்டு உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்துள்ள உன் கருவின் கனிகளான உன் புதல்வர், புதல்வியரின் சதையைக்கூட உண்பாய்.
54
உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவன், இனி எதுவுமே இல்லாததால், தான் உண்ணும் தன் பிள்ளையின் சதையைத் தன் சகோதரனுக்கோ, தன் அன்பு மனைவிக்கோ, எஞ்சியுள்ள தன் பிள்ளைகளுக்கோ கொடுக்கமாட்டான்:
55
உணவின் பொருட்டு அவர்களை வெறுப்பான்.
56
உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவள், தன் உள்ளங்காலைத் தரையில் நன்றாக ஊன்றி நடக்காத அளவு இனிமையும் மென்மையும் மிக்கவள், இனி எதுவுமே இல்லாததால், குழந்தை பிறந்த உடனே தன் குழந்தையையும் அதனோடு வருகின்ற கழிவுகளையும் மறைவாக உண்பாள்:
57
எவருக்கும் கொடுக்க மாட்டாள்.உணவின் பொருட்டுத் தன் இனிய கணவனையும், தன் புதல்வர் புதல்வியரையும் வெறுப்பாள்.
58
உன் கடவுளாகிய ஆண்டவர்” என்னும் மாட்சிமிகு, அச்சந்தரும் இந்தத் திருப்பெயருக்கு அஞ்சும்படி, இந்நூலில் எழுதியுள்ள திருச்சட்டத்தின் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.
59
இல்லையெனில், உன்மீதும் உன் வழிமரபினர்மீதும் விவரிக்க இயலாத வாதைகளை, கொடிய, நீங்கா வாதைகளை, கடின, நீங்கா நோய்களை ஆண்டவர் வரச்செய்வார்.
60
மேலும், நீ கண்டு அஞ்சிய, அனைத்து எகிப்திய கொள்ளை நோய்களையெல்லாம் உன்மீது வரச் செய்வார்.அவை உன்னைத் தொற்றிக்கொள்ளும்.
61
திருச்சட்ட நூலில் எழுதப்படாத எல்லா நோய்களையும் வாதைகளையும் நீ அழிந்து போகும்வரை ஆண்டவர் உன்மீது வரச்செய்வார்.
62
எண்ணிக்கையில் வானத்து விண்மீன்களைப் போன்று இருந்த உங்களுள் மிகச் சிலரே எஞ்சியிருப்பீர்கள்.ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் செவிகொடுக்கவில்லை.
63
உங்களுக்கு நன்மைகள் செய்து உங்களைப் பெருகச் செய்வதில் மகிழ்ந்த ஆண்டவர், உங்கள்மேல் அழிவைக் கொணர்ந்து உங்களை வேரறுப்பதில் மகிழ்வார்.நீங்கள் உடைமையாக்கிக்கொள்ளப்போகும் நாட்டிலிருந்து நீங்கள் பிடுங்கி எறியப்படுவீர்கள்.
64
உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை உள்ள எல்லா மக்களினங்களிடையிலும் ஆண்டவர் உன்னைச் சிதறடிப்பார்.அங்கு, நீயும் உன் மூதாதையரும் அழியாத, மரத்தாலும் கல்லாலும் ஆன வேற்றுத் தெய்வங்களுக்கு நீ ஊழியம் செய்வாய்.
65
அந்த மக்களினங்களிடையே உனக்கு ஓய்வு இராது: உன் உள்ளங்கால்கள் தங்கி இளைப்பாற இடம் இராது.அங்கே ஆண்டவர் நடுநடுங்கும் இதயத்தையும், பஞ்சடைந்த கண்களையும், தளர்வுற்ற மனத்தையும் உனக்குக் கொடுப்பார்.
66
உயிர் உனக்குக் கேள்விக் குறியாகும்.உன் வாழ்வுமீது நம்பிக்கையிழந்து இரவும் பகலும் அச்சத்தோடு வாழ்வாய்.
67
கண்களால் காணும் காட்சிகளால் உன் இதயம் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், காலையானதும்,”இது மாலையாக இருக்கக் கூடாதா?” என்பாய்: மாலையானதும்,”இது காலையாக இருக்கக்கூடாதா?” என்பாய்.
68
நீங்கள் இனி ஒரு நாளும் மீண்டும் மேற்கொள்ள மாட்டீர்கள் என எந்தப் பயணத்தைப்பற்றி நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேனோ, அந்தப் பயணத்தைக் கப்பல்களில் மேற்கொண்டு நீங்கள் எகிப்துக்குத் திரும்பிச் செல்லுமாறு ஆண்டவர் செய்வார்.அங்கே உங்களை நீங்களே அடிமைகளாக, ஆண், பெண் அடிமைகளாக, உங்கள் பகைவர்களுக்கு விற்க முயல்வீர்கள்: ஆனால் உங்களை எவரும் விலைக்கு வாங்கமாட்டார்.