உபாகமம் 28:1-14 - WCV
1
கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிக்கொடு.நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.அப்போது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார்.
2
கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும்.
3
நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய்: வயல் வெளியிலும் ஆசிபெற்றிடுவாய்.
4
கருவின் கனியும், உன் நிலத்தின் பயனும் உன் கால்நடைகளின் ஈற்றுகளும், உன் மாடுகளின் கன்றுகளும் உன் ஆடகளின் குட்டிகளும் ஆசி பெற்றிடும்.
5
கூடையும் உன் மாவுபிசையும் தொட்டியும் ஆசி பெற்றிடும்.
6
நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய்.
7
உனக்கு எதிராக எழும் உன் பகைவர்கள் உனக்குமுன் முறியடிக்கப்படும்படி ஆண்டவர் அவர்களை உன்னிடம் ஒப்படைப்பார்.அவர்கள் ஒருவழியாய் உனக்கு எதிராக வருவர்: ஆனால் ஏழு வழியாய் உன் கண்களுக்கு முன்னே ஓடிப்போவர்.
8
களஞ்சியங்களிலும், நீ மேற்கொள்ளும்செயல்கள் அனைத்திலும் நீ ஆசி பெறும்படி ஆண்டவர் ஆணையிடுவார்.உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீ ஆசி பெற்றிடுவாய்.
9
கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவர்தம் வழிகளில் நடந்தால், அவர் உனக்கு ஆணையிட்டுச் சொன்னபடி, உன்னைத் தம் தூய மக்களினமாக நிலைநிறுத்துவார்.
10
அப்போது, பூவுலகில் மக்களினத்தார் அனைவரும், ஆண்டவர் தம் பெயரை உனக்கு வழங்கி இருக்கிறார் எனக்கண்டு உனக்கு அஞ்சுவர்.
11
உனக்குக் கொடுப்பதாக, உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில், உன் கருவின் கனி உன் கால் நடைகளின் ஈற்றுகள், உன் நிலத்தின் பயன்கள் ஆகியவற்றில் நலன்களால் நீ நிறைவு பெறும்படி ஆண்டவர் அருள்வார்.
12
தக்க காலத்தில் உன் நிலத்திற்கு மழை கொடுக்கவும், அதனால் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்கவும், தம் நன்மைகளின் கருவூலமாகிய வானத்தை ஆண்டவர் உனக்காகத் திறப்பார்.நீ பல்வேறு இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய்: நீயோ கடன் வாங்கமாட்டாய்.
13
இன்று நான் உனக்கு விதிக்கும் உன் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.அப்போது, ஆண்டவர் உன்னை முதல்வனாக ஆக்குவாரே அன்றி, கடையனாக ஆக்கமாட்டார்.நீ உயர்வாயேயன்றித் தாழ்ந்து போகமாட்டாய்.
14
எனவே, நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எதிலிருந்தும் விலகாதே.வலமோ இடமோ விலகி நடக்காதே, வேற்றுத் தெய்வங்களின் பின்சென்று அவற்றுக்கு ஊழியம் செய்யாதே.