உபாகமம் 2:24-33 - WCV
24
“இப்பொழுது, எழுந்து பயணமாக்குங்கள்.அர்னோன் ஓடையைக் கடந்து செல்லுங்கள்.இதோ, எமோரியனும் எஸ்போனின் அரசனுமாகிய சீகோனையும் அவனது நாட்டையும் உங்களிடம் கையளித்துள்ளேன்.அதை உடைமையாக்கிக் கொள்ளுமாறு, அவனோடு போரிடுங்கள்.
25
உன்னைப்பற்றிய திகிலும் அச்சமும் வானத்தின் கீழுள்ள எல்லா மக்களினங்கள் மீதும் உண்டாகுமாறு இன்று செய்வேன்.அவர்கள் உன்னைப் பற்றிக் கேள்வியுற்று நடுங்கி, உன் பொருட்டுப் பதைபதைப்பர்.
26
அப்பொழுது நான் கெதமோத்துப் பாலைநிலத்திலிருந்து எஸ்போனின் மன்னனாகிய சீகோனிடம் தூதரை அனுப்பி நல்லுறவுச் செய்தியுடன் சொன்னது:
27
“நாங்கள் உமது நாட்டின் நெடுஞ்சாலை வழியே கடந்து செல்ல அனுமதி கொடும்.வலமோ இடமோ திரும்பாமல், நெடுஞ்சாலையில் மட்டும் நாங்கள் செல்வோம்.
28
நீர் எமக்கு உணவை விலைக்குத் தாரும்.நாங்கள் உண்போம்.எமக்கு நீரை விலைக்குத் தாரும், நாங்கள் பருகுவோம்.நாங்கள் கால்நடையாய்க் கடந்து போக மட்டும் அனுமதி கொடும்.
29
சேயிர் வாழ் ஏசாவின் மக்களும், ஆர் நகர் வாழ் மோவாபியரும் எமக்கு அனுமதி கொடுத்தது போல், யோர்தானைக் கடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் கொடுக்க இருக்கிற நாட்டில் சேர்வதற்கு அனுமதி கொடும்.
30
ஆனால் எஸ்போனின் மன்னன் சீகோன் தன் நாட்டின் வழியே கடந்து செல்ல நமக்கு அனுமதியளிக்கவில்லை.இன்றும் இருப்பதுபோல் அவனை உங்கள் கையில் ஒப்படைக்கும் பொருட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அவன் மனத்தைக் கடினப்படுத்தியிருந்தார்: அவன் இதயத்தையும் கல்லாக்கியிருந்தார்.
31
அப்பொழுது ஆண்டவர் என்னிடம்,”இதோ, சீகோனையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன்.அவனது நாட்டை உடைமையாக்கிக் கொள்ளுமாறு அதைக் கைப்பற்றத் தொடங்கு” என்றார்.
32
சீகான் தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு யாகசுவில் போரிடப் புறப்பட்டு வந்தான்.
33
நம் கடவுளாகிய ஆண்டவர் அவனை நம் கையில் ஒப்படைத்தார்.நாம் அவனையும் அவன் புதல்வரையும் அவன் குடிமக்கள் அனைவரையும் முறியடித்தோம்.