உபாகமம் 16:1-8 - WCV
1
ஆபீபு மாதத்தை நினைவில்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கெனப் பாஸ்காவைக் கொண்டாடு.ஏனெனில் ஆபீபு மாதத்தில்தான், ஓர் இரவில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தார்.
2
தம் பெயர் விளங்கும் பொருட்டு ஆண்டவர் தெரிந்து கொள்ளும் இடத்தில், உன் ஆடுமாடுகளிலிருந்து உன் ஆண்டவராகிய கடவுளுக்குப் பாஸ்காப் பலிசெலுத்து.
3
அதனுடன் புளிப்புள்ள அப்பத்தை உண்ணாதே.எகிப்து நாட்டிலிருந்து நீ வெளியேறிய நாளை உன் வாழ்நாளெல்லாம் நினைவுகூரும் வண்ணம், ஏழு நாள்கள் அவற்றைப் புளிப்பற்ற அப்பத்தோடு உண்பாய்.அது துயரத்தின் அப்பம்.ஏனெனில் நீ எகிப்து நாட்டிலிருந்து அவசரமாய்ப் புறப்பட்டு வந்தாய்.
4
எல்லைக்குள் எங்கும் ஏழு நாள்களுக்குப் புளிப்புள்ள அப்பம் இருத்தலாகாது.நீ முதல் நாள் மாலையில் செலுத்தும் பலியின் இறைச்சி எதுவும் இரவு முழுவதும் காலை வரையிலும் இருத்தலாகாது.
5
கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் எந்த நகருக்குள்ளும் நீ பாஸ்காப் பலியைச் செலுத்தவேண்டாம்.
6
ஆனால் அவர்தம் பெயர் அதில் நிலைக்கும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில், நீ பாஸ்காப்பலியைச் செலுத்து, கதிரவன் மறையும் மாலை வேளையில், நீ எகிப்திலிருந்து புறப்பட்ட அந்த நேரத்தில், பலி செலுத்து.
7
கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் அதை நெருப்பில் வாட்டி உண்பாய்.விடியற் காலையில் உன் கூடாரத்திற்குத் திரும்பிச் செல்வாய்.
8
ஆறு நாள்களுக்கு நீ புளிப்பற்ற அப்பத்தை உண்பாய்.ஏழாம் நாள் உன் கடவுளாகிய ஆண்டவருக்காகத் திருப்பேரவை கூடும்.அன்று நீ வேலை ஏதும் செய்யாதே.