22
எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள்.
23
உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும்.
24
கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.
25
ஆகவே பொய்யை விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள். ஏனெனில் நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம்.
26
சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்: பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும்.
27
அலகைக்கு இடம் கொடாதீர்கள்.
28
திருடர் இனித் திருடாமல் இருக்கட்டும். மாறாக, தேவையில் உழல்வோருக்குப் பகிர்ந்து கொடுக்கத் தங்களிடம் பொருள் இருக்கும் வகையில், தாங்களே தங்கள் கைகளால் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும்.
29
கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.
30
கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.
31
மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்.
32
ஒருவருக்கொருவர் நன்மைசெய்து பரிவு காட்டுங்கள்: கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.