3
அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்களாகவே கொடுத்தார்கள். ஏன், அளவுக்கு மீறியே கொடுத்தார்கள். இதற்கு நானே சாட்சி.
4
இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்குபெறும் பேறு தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டார்கள்.
5
நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்: நாங்கள் கடவுளின் திருவுளப்படி செயல்படுவதால், எங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள்.
6
எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக் கொண்டோம்.
7
நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபட வேண்டும்.
8
நான் இதை உங்களுக்கு ஒரு கட்டளையாகச் சொல்லவில்லை. மாறாக, பிறருடைய ஆர்வத்தை எடுத்துக் காட்டி உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே இவ்வாறு செய்கிறேன்.
9
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.
10
இவ்வறப்பணியைப் பொறுத்தவரை என் கருத்து இதுவே: இது உங்களுக்குப் பயனளிக்கும். கடந்த ஆண்டிலிருந்தே நீங்கள் இப்பணியைச் செய்து வருகிறீர்கள்: அது மட்டுமல்ல: இதனை விருப்பத்தோடு தொடங்கியவர்களும் நீங்களே.
11
அப்பணியை இப்போதே செய்து முடியுங்கள். ஆர்வத்தோடு தொடங்கியது போலவே உங்கள் நிலைக்கு ஏற்றவாறு கொடுத்து, ஆர்வத்தோடு அதனைச் செய்து முடியுங்கள்.
12
ஆர்வத்தோடு கொடுத்தால், தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை.
13
மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றே சொல்கிறோம்.
14
இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது: அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும் போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும்.