2கொரிந்தியர் 8:17-24 - WCV
17
நாங்கள் விடுத்த வேண்டுகோளை முன்னிட்டு மட்டும் அல்ல, அவரே மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதால் அவராக உங்களிடம் புறப்பட்டு வருகிறார்.
18
அவரோடு மற்றொரு சகோதரரையும் அனுப்புகிறோம். அவர் நற்செய்தி அறிவித்து எல்லாத் திருச்சபைகளிலும் புகழ்பெற்று விளங்குபவர்.
19
அது மட்டும் அல்ல, நாங்கள் செய்யும் அறப்பணிப் பயணத்தில் வழித்துணைவராகத் திருச்சபையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவரே. ஆண்டவரின் மாட்சி இலங்கவும் எங்கள் ஆர்வம் விளங்கவுமே நாங்கள் இவ்வறப் பணியை மேற்கொண்டுள்ளோம்.
20
இந்தப் பெருந்தொகையைக் கையாளும் முறைபற்றி எங்கள் மீது எவரும் குறை கூறாவண்ணம் கவனமாயிருக்கிறோம்.
21
ஆண்டவர் முன்னிலையில் மட்டுமல்ல, மனிதர் முன்னிலையிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதே எங்கள் நோக்கம்.
22
அவர்களோடு வேறொரு சகோதரதையும் அனுப்பி வைக்கிறோம். இவரது ஆர்வத்தைப் பலவற்றில் பலவேளைகளில் நாங்கள் சோதித்து அறிந்திருக்கிறோம். அவர் உங்களிடம் உறுதியான நம்பிக்கை மிகக் கொண்டிருப்பதால் இன்னும் மிகுதியாக ஆர்வம் காட்டுகிறார்.
23
தீத்துவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் அவர் என் பணியில் பங்காளியும் உடன் உழைப்பாளரும் ஆவார். மற்ற சகோதரர்கள் திருச்சபைகளால் அனுப்பப்பட்ட தூதர்கள். கிறிஸ்துவைப் போற்றிப் புகழும் முறையில் வாழ்பவர்கள்.
24
ஆகவே அவர்களுக்கு உங்கள் அன்பைக் காட்டி, நாங்கள் உங்களைக் குறித்து அவர்களிடம் பெருமையாய்ப் பேசியது சரியே என்று எல்லாத் திருச்சபைகளுக்கும் எடுத்துக் காட்டுங்கள்.