1
சகோதர சகோதரிகளே, ஆவிக்குரியவர்களிடம் பேசுவதுபோல நான் உங்களிடம் பேசமுடியவில்லை. மாறாக, நீங்கள் ஊனியல்பு கொண்டவர்கள் எனவும், கிறிஸ்துவோடுள்ள உறவில் குழந்தைகள் எனவும் எண்ணிப் பேசுகிறேன்.
2
நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்.
3
நீங்கள் இன்னும் உங்கள் ஊனியல்புக்கேற்பவே நடக்கிறீர்கள். ஏனெனில், பொறாமையும், சண்டை சச்சரவும் உங்களிடையே உள்ளன. நீங்கள் ஊனியல்புக்கேற்ப நடந்து மனிதப் போக்கில்தானே வாழ்கிறீர்கள்?
4
ஏனெனில், ஒருவர் “நான் பவுலைச் சார்ந்துள்ளேன் “ என்றும் வேறொருவர் “நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன் “ என்றும் உங்களிடையே சொல்லிக் கொள்ளும்போது நீங்கள் மனிதப்போக்கில்தானே நடக்கிறீர்கள்?