6
அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன.
7
அவர்களுள் சிலரைப்போல நீங்களும் சிலைகளை வழிபடாதீர்கள். அவர்களைக் குறித்தே, “மக்கள் அமர்ந்து உண்டு குடித்தனர்: எழுந்து மகிழ்ந்து ஆடினர் “ என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது.
8
அவர்களுள் சிலர் பரத்தைமையில் ஈடுபட்டனர். அதனால் ஒரே நாளில் இருபத்து மூவாயிரம் பேர் மடிந்தனர். அவர்களைப்போல் நாமும் பரத்தைமையில் ஈடுபடக்கூடாது.
9
அவர்களுள் சிலர் ஆண்டவரைச் சோதித்தனர். அதனால் பாம்பினால் கடிபட்டு அழிந்து போயினர். அவர்களைப்போல் நாமும் அவரைச் சோதிக்கக்கூடாது.
10
அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது.
11
அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.