ரோமர் 4:16-24 - WCV
16
ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும்-திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும்-உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை.
17
ஏனெனில்”எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்” என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள் மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார்.
18
“உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்” என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்: தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்.
19
தமக்கு ஏறத்தாழ நூறு வயது ஆகிவிட்டதால் தமது உடலும் சாராவுடைய கருப்பையும் செத்தவைபோல் ஆற்றலற்றுப் போய்விட்டதை எண்ணிப் பார்த்தபோதுகூட, அவர் நம்பிக்கையில் உறுதி தளரவில்லை:
20
கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஐயப்படவே இல்லை: நம்பிக்கையில் அவர் மேலும் வலுப் பெற்றார்: கடவுளைப் பெருமைப்படுத்தினார்.
21
தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார்.
22
ஆகவே”அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.”
23
“நீதியாகக் கருதினார்” என்று எழுதியுள்ளது அவரைமட்டும் குறிக்கவில்லை:
24
நம்மையும் குறிக்கின்றது: இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம்.