ரோமர் 4:11-16 - WCV
11
விருத்தசேதனம் இல்லாத நிலையிலேயே அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளுக்கு ஏற்புடையவர் என்று கருதப்பட்டார்: அதை உறுதிப்படுத்தும் அடையாளமாக விருத்தசேதனத்தைப் பெற்றார். இவ்வாறு விருத்தசேதனம் இல்லாதிருந்தும், கடவுள்மீது நம்பிக்கை கொள்வதால் அவருக்கு ஏற்புடையவர்களாகக் கருதப்படும் அனைவருக்கும் அவர் தந்தையானார்.
12
அதேபோல, விருத்தசேதனம் பெற்றிருந்தும், அதுவே போதுமென்றிருந்திடாமல் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் அவர் தந்தையானார்: எப்படியெனில், நம் தந்தையாம் ஆபிரகாம் விருத்தசேதனம் பெறுமுன்பே நம்பிக்கை கொண்டிருந்ததுபோல, இவர்களும் நம்பிக்கை கொண்டவர்களாய் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்கள்.
13
உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை: நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது.
14
ஏனெனில் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குத்தான் அந்த உரிமைச் சொத்து கிடைக்கும் எனின், நம்பிக்கை கொள்வது பொருளற்றதாகும்: அந்த வாக்குறுதியும் செல்லாததாகும்.
15
திருச்சட்டம் இறைவனின் சினத்தை வருவிக்கிறது. சட்டம் இல்லையெனில் அதை மீறவும் இயலாது.
16
ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும்-திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும்-உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை.