ரோமர் 2:17-29 - WCV
17
யூதர் என்னும் பெயரைத் தாங்கித் திருச்சட்டத்தின் அடிப்படையில் வாழும் நீங்கள் கடவுளோடு கொண்டுள்ள உறவைப்பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்:
18
அவருடைய திருவுளத்தை அறிந்திருக்கிறீர்கள்: திருச்சட்டத்தைக் கற்றறிந்துள்ளதால் எது சிறந்தது எனச் சோதித்து அறிகிறீர்கள்.
19
அறிவையும் உண்மையும் தன்னகத்தே கொண்டுள்ள திருச்சட்டம் உங்களிடம் இருக்கிறது என்னும் உறுதியான நம்பிக்கையில் பார்வையற்றோருக்கு வழிகாட்டியாகவும்,
20
இருளில் இருப்போர்க்கு ஒளியாகவும், அறிவிலிகளுக்குக் கல்வி புகட்டுபவராகவும் குழந்தைகளுக்கு ஆசிரியராகவும் இருக்க முற்படுகிறீர்கள்.
21
ஆனால் பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் நீங்களே கற்றுக் கொள்ளவில்லையே! திருடாதே எனப்பறைசாற்றுகிறீர்கள்: நீங்களே திருடுவதில்லையா?
22
விபசாரம் செய்யாதே எனச் சொல்கிறீர்கள்: நீங்களே விபசாரம் செய்வதில்லையா? தெய்வச் சிலைகளைத் தீட்டாகக் கருதுகிறீர்கள்: நீங்களே அவற்றின் கோவில்களைக் கொள்ளையிடுவதில்லையா?
23
திருச்சட்டத்தைப் பற்றிப் பெருமைப்படுகிறீர்கள்: நீங்களே அச்சட்டத்தை மீறிக் கடவுளை இழிவுபடுத்துவதில்லையா?
24
ஆம், மறைநூலில் எழுதியுள்ளவாறு”உங்களால் கடவுளின் பெயர் பிற இனத்தாரிடையே இகழப்படுகின்றது.”
25
நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் விருத்தசேதனத்தால் உங்களுக்கு பயனுண்டு: ஆனால் திருச்சட்டத்தை மீறினால் நீங்கள் விருத்தசேதனம் பெற்றிருந்தும் பெறாதவர்களாகவே இருக்கிறீர்கள்.
26
ஆகையால், விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஒருவர் திருச்சட்டத்தின் ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால், விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டாலும் விருத்தசேதனம் செய்து கொண்டவராக அவர் கருதப்படலாம் அல்லவா?
27
உடலில் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் திருச்சட்டத்தை நிறைவேற்றுவோர், எழுதிய சட்டத்தையும் விருத்தசேதனத்தையும் பெற்றிருந்தும் அச்சட்டத்தை மீறும் நீங்கள் குற்றவாளிகளெனத் தீர்ப்பு அளிப்பர்.
28
ஏனெனில், புறத் தோற்றத்தில் மட்டும் யூதராய் இருப்பவர் யூதரல்ல: அவ்வாறே, புறத்தோற்றத்தில், அதாவது உடலில் மட்டும் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் அல்ல.
29
ஆனால் அகத்தில் யூதராய் இருப்பவரே உண்மையான யூதர், உள்ளத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே உண்மையான விருத்தசேதனம். அது எழுதிய சட்டத்தின்படி செய்யப்படுவது அல்ல, தூய ஆவியால் செய்யப்படுவதாகும். அத்தகையவர் மனிதரிடமிருந்து அல்ல, கடவுளிடமிருந்தே பாராட்டுப் பெறுவர்.