ரோமர் 11:16-29 - WCV
16
பிசைந்த மாவில் முதலில் ஒருபிடி எடுத்துக் கடவுளுக்கு அர்ப்பணித்தால் அம்மாவு முழுவதும் அர்ப்பணித்தால் அம்மாவு முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டதாகிறது. அவ்வாறே மரத்தின் வேர் அர்ப்பணிக்கப்பட்டால் அதன் கிளைகளும் அர்ப்பணிக்கப்பட்டவையாகும்.
17
நல்ல ஒலிவ மரம் ஒன்றின் கிளைகள் சில தறிக்கப்பட்டு, அந்த ஒலிவ மரத்தில் காட்டொலிவ மரக்கிளை ஒன்று ஒட்டப்பட்டால், அது மரத்தின் செழுமையான வேரிலிருந்து ஊட்டம் பெறுகிறது.
18
அந்தக் கிளை தறிக்கப்பட்ட கிளைகளைவிடத் தன்னைப் பெருமையாகக் கருதலாமா? அந்தக் காட்டொலிவ மரக்கிளை நீங்களே. அப்படியே நீங்கள் உங்களைப் பெருமையாகக் கருதினாலும், நீங்கள் வேரைத் தாங்கவில்லை: வேர்தான் உங்களைத் தாங்குகிறது என்பதை மறவாதீர்கள்.
19
“நாங்கள் ஒட்டப்படுவதற்கே கிளைகள் தறிக்கப்பட்டன” என நீங்கள் சொல்லலாம்.
20
சரிதான்: அவர்கள் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளாததால் தறிக்கப்பட்டார்கள்: நீங்களோ நம்பிக்கையின் காரணமாய் நிலைத்து நிற்கிறீர்கள். ஆகையால் உங்களுக்கு இருக்க வேண்டியது உயர்வு மனப்பான்மை அல்ல, அச்ச உணர்வே.
21
ஏனெனில், இயற்கையாய் வளர்ந்த கிளைகளையே கடவுள் வெட்டாமல் விடவில்லை என்றால், ஒட்டப்பட்ட கிளையாகிய உங்களைத் தண்டிக்காமல் விடுவாரா?
22
இதில் கடவுளின் பரிவையும் கண்டிப்பையும் எண்ணிப்பாருங்கள். தவறி விழுந்தவர்களின் மேல் கண்டிப்பும் உங்கள்மேல் பரிவும் அவர் காட்டுகிறார். நீங்கள் அவருடைய பரிவைப் பெறுபவர்களாக வாழாவிட்டால் நீங்களும் தறிக்கப்படுவீர்கள்.
23
யூதர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிராத நிலையிலிருந்து மாறினால், அவர்களும் ஒட்டப்படுவார்கள். அவர்களைத் திரும்பவும் ஒட்டுவதற்குக் கடவுள் வல்லவர்.
24
ஏனெனில், காட்டொலிவ மரத்தில் இயற்கையாய் வளர்ந்த நீங்கள் வெட்டப்பட்டு, இயற்கைக்கு மாறாக நல்ல ஒலிவமரத்தில் ஒட்டுப்போடப்பட்டீர்களானால், இயற்கைக் கிளைகளான அவர்களைத் தாய் மரத்தில் ஒட்டுப்போடுவது எத்துணை எளிது.
25
சகோதர சகோதரிகளே, நீங்கள் அறிவாளிகள் எனக் கருதாதவாறு மறைபொருள் ஒன்றை உங்களுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். அதாவது, பிற இனத்தார் முழுமையாக இறைவனிடம் வந்து சேரும் வரையில் தான் இஸ்ரயேலில் ஒரு பகுதியினர் மழுங்கிய உள்ளம் கொண்டிருப்பர்.
26
பின்னர், இஸ்ரயேல் இனம் முழுவதும் மீட்கப்படும்:
27
“சீயோனிலிருந்து அவர் மீட்பராக வருவார்: யாக்கோபில் தீயதனைத்தையும் போக்கிடுவார். நான் அவர்களுடைய பாவங்களை அகற்றிவிடுவேன்: அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!
28
நற்செய்தியை ஏற்றுக் கொள்ளாததால் அவர்கள் கடவுளுக்குப் பகைவர்கள் ஆயினர்: அதுவும் உங்களுக்கு நன்மையாய் அமைந்தது. ஆனால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாயிருப்பதால் அவர்களுடைய மூதாதையரை முன்னிட்டு அவரது அன்புக்கு உரியவர்கள் ஆனார்கள்.
29
ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை.