ரோமர் 1:21-32 - WCV
21
ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை: நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று.
22
தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே.
23
அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப்போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர்.
24
ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார்.
25
அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக் கொண்டார்கள்: படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்: படைத்தவரை மறந்தார்கள்: அவரே என்றென்றும் போற்றுததற்குரியவர். ஆமென்.
26
ஆகையால் கடவுள், கட்டுக்கடங்காத இழிவான பாலுணர்வுகொள்ள அவர்களை விட்டு விட்டார். அதன் விளைவாக, அவர்களுடைய பெண்கள் இயல்பான இன்ப முறைக்குப் பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டார்கள்.
27
அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து, தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள்.
28
கடவுளை அறிந்து ஏற்றுக் கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால் சீர்கெட்ட சிந்தனையின் விளைவாகத் தகாத செயல்களைச் செய்யுமாறு கடவுள் அவர்களை விட்டு விட்டார்.
29
இவ்வாறு, அவர்கள் எல்லா வகை நெறிகேடுகளும், பொல்லாங்கு, பேராசை, தீமை ஆகியவையும் நிறைந்தவர்களானார்கள். அவர்களிடம் பொறாமை, கொலை, சண்டைச் சச்சரவு, வஞ்சகம், தீவினை முதலியவை மலிந்துவிட்டன. அவர்கள் புறங்கூறுபவர்கள்,
30
அவதூறு பேசுபவர்கள், கடவுளை வெறுப்பவர்கள், இழித்துரைப்பவர்கள், செருக்குற்றவர்கள், வீம்பு பாராட்டுபவர்கள், தீய வழிகளைக் கண்டுபிடிப்பவர்கள், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்கள்:
31
சொல் தவறுபவர்கள், மதிகெட்டவர்கள், பாசம் அற்றவர்கள், இரக்கம் இல்லாதவர்கள்.
32
இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளின் ஒழுங்கை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றார்கள்: தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களையும் பாராட்டுகிறார்கள்.