13
அதற்கு அனனியா மறுமொழியாக, “ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
14
உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்” என்றார்.
15
அதற்கு ஆண்டவர் அவரிடம், “நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்.
16
என் பெயரின்பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக்காட்டுவேன்” என்றார்.
17
அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, “சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்” என்றார்.
18
உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.
19
பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார்.
20
உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.