1
அனனியா என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மனைவி சப்பிராவுடன் சேர்ந்து தன்னுடைய நிலத்தை விற்றான்:
2
விற்ற தொகையில் ஒரு பகுதியைத் தன் மனைவி அறியத் தனக்கென்று வைத்துக் கொண்டு, மறு பகுதியைத் திருத்தூதரின் காலடியில் கொண்டுவந்து வைத்தான்.
3
அப்பொழுது பேதுரு, “அனனியா, நீ நிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்?
4
அது விற்கப்படுவதற்கு முன்பு உன்னுடையதாகத்தானே இருந்தது? அதை விற்ற பின்பும் அந்தப்பணம் உன்னுடைய உரிமையாகத்தானே இருந்தது? பின்பு ஏன் நீ இச்செயலுக்கு உன் உள்ளத்தில் இடமளித்தாய்? நீ மனிதரிடமல்ல, கடவுளிடமல்லவா பொய் சொன்னாய்” என்று கூறினார்.
5
அவர் கூறியதைக் கேட்டதும் அனனியா கீழே விழுந்து உயிர்விட்டான். இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது.
6
இளைஞர்கள் எழுந்து வந்து அவனைத் துணியால் மூடிச் சுமந்து கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்.
7
ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப் பின் அவன் மனைவி உள்ளே வந்தாள்: நிகழ்ந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது.
8
பேதுரு அவளைப் பார்த்து,”நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்? சொல்” என்று கேட்க, அவள் “ஆம், இவ்வளவுக்குத்தான் விற்றோம்” என்று பதிலளித்தாள்.
9
மீண்டும் பேதுரு அவளைப் பார்த்து, “தூய ஆவியாரைச் சோதிக்க நீங்கள் உடன்பட்டதேன்? இதோ! உன் கணவனை அடக்கம் செய்தவர்கள் கதவருகில் வந்து விட்டார்கள். அவர்கள் உன்னையும் வெளியே சுமந்து செல்வார்கள்” என்றார்.
10
உடனே அவள் அவர் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்து அவள் இறந்துகிடப்பதைக் கண்டு வெளியே சுமந்துகொண்டு போய் அவள் கணவனுக்கு அருகில் அடக்கம் செய்தார்கள்.