16
இச் சூழ்ச்சியைப் பற்றிப் பவுலின் சகோதரி மகன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள் சென்று இதனைப் பவுலிடம் அறிவித்தார்.
17
பவுல் நூற்றுவர் தலைவர்களுள் ஒருவரை வரவழைத்து, “இந்த இளைஞரை ஆயிரத்தவர் தலைவரிடம் கூட்டிச் செல்லுங்கள். அவரிடம் இவர் ஏதொ ஒன்று அறிவிக்க வேண்டுமாம்” என்றார்.
18
அவரும் அந்த இளைஞரை ஆயிரத்தவர் தலைவரிடம் கூட்டிச் சென்று அவரிடம், “கைதியான பவுல் என்னை வரவழைத்து இந்த இளைஞரை உம்மிடம் கூட்டிக் கொண்டு வருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். இவர் ஏதோ ஒன்று உம்மிடம் சொல்ல வேண்டுமாம்” என்றார்.
19
ஆயிரத்தவர் தலைவர் அவர் கையைப் பிடித்துத் தனியே கூட்டிச் சென்ற, “நீ என்னிடம் என்ன அறிவிக்க வேண்டும்?” என்று வினவினார்.
20
அவர், “யூதர்கள் பவுலை மிகக் கருத்தாய் விசாரிக்கும் நோக்கம் உடையவர்கள் போல் அவரைத் தலைமைச் சங்கத்திற்கு நாளை கொண்டுவர உம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென உடன்பாடு செய்து கொண்டுள்ளார்கள்.
21
நீர் அவர்களுக்கு இணங்க வேண்டாம். ஏனெனில் அவர்களுள் நாற்பதுக்கும் அதிகமானோர் சூழ்ச்சி செய்து நாங்கள் பவுலைக் கொல்லும் வரை உண்ணவும், குடிக்கவும் மாட்டோம் எனச் சூளுரைத்துள்ளனர். உம்முடைய முடிவை அறிந்து கொள்ளத் தகுந்த ஏற்பாடுகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்.
22
அப்போது ஆயிரத்தவர் தலைவர் இளைஞரிடம், “இவற்றை என்னிடம் தெரிவித்ததாக நீர் எவருக்கும் சொல்லாதீர்” என்று கூறி அவரை அனுப்பிவிட்டார்.