அப்போஸ்தலர் 15:2-21 - WCV
2
அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.
3
அங்கிருந்து திருச்சபையார் அவர்களை வழியனுப்பி வைத்தனர். அவர்கள் பெனிசியா, சமாரியா வழியாகச் சென்று பிற இனத்தவர் மனந்திரும்பிய செய்தியை எடுத்துரைத்தார்கள். இது சகோதரர் சகோதரிகள் அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
4
அவர்கள் எருசலேம் வந்தபோது திருச்சபையாரும், திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள்.
5
ஆனால் பரிசேயக் கட்சியினருள் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட சிலர் எழுந்து, “அவர்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்: மோசேயினது சட்டத்தைக் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும்” என்று கூறினர்.
6
இதனை ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர்.
7
நெடு நேர விவாதத்துக்குப்பின்பு பேதுரு எழுந்து அவர்களை நோக்கிக் கூறியது: “சகோதரரே, பிற இனத்தவர் என் வாய்மொழி வழியாக நற்செய்தியைக்கேட்டு அதில் நம்பிக்கை கொள்ளும் படிகடவுள் தொடக்கத்திலேயே உங்களிடமிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
8
உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்ததுபோல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக்கொண்டார்.
9
நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார். நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை.
10
ஆகவே நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்?
11
ஆண்டவர் இயேசுவின் அருளால் நாம் மீட்புப் பெறுவதுபோலவே அவர்களும் மீட்புப் பெறுகிறார்கள் என நம்புகிறோம்.”
12
இதைக் கேட்டு அங்குத் திரண்டிருந்தோர் யாவரும் அமைதியாயினர். கடவுள் தங்கள் வழியாகப் பிற இனத்தவரிடம் அடையாளங்களும் அருஞ்செயல்களும் செய்தார் என்பதைப் பர்னபாவும் பவுலும் எடுத்துரைத்ததை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்னர்.
13
அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு அவர்களைப் பார்த்துக் கூறியது: “சகோதரரே, நான் கூறுவதைக் கேளுங்கள்.
14
கடவுள் பிற இனத்தாரிடமிருந்து தமக்கென மக்களைத் தேர்ந்துகொள்ள முதலில் அவர்களைத் தேடி வந்த செய்தியைச் சீமோன் எடுத்துரைக்கக் கேட்டீர்கள்.
15
இறைவாக்கினர் சொற்களும் இதற்கு ஒத்திருக்கின்றன. அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்:
16
16”இவற்றுக்குப்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் எழுப்புவேன்: அதிலுள்ள கிழிசல்களைப் பழுது பார்த்து அதைச் சீர்ப்படுத்துவேன்.
17
அப்பொழுது மக்களுள் எஞ்சியிருப்போரும் என் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் வேற்று இனத்தார் அனைவரும் ஆண்டவரைத் தேடுவர், என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.”
18
தொடக்கத்திலிருந்தே இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
19
எனவே என் முடிவு இதுவெ: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது.
20
ஆனால் சிலைகளுக்குப் படைக்கப்பட்டுத் தீட்டுப்பட்டவை, கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, இரத்தம் மற்றும் பரத்தைமை ஆகியவற்றைத் தவிர்க்குமாறு அவர்களுக்கு நாம் எழுதவேண்டும்.
21
மோசேயின் சட்டத்தை அறிவிப்போர் முற்காலத்திலிருந்தே எல்லா நகரங்களிலும் இருக்கின்றனர்: அதனை ஓய்வுநாள்தோறும் தொழுகைக் கூடங்களில் வாசித்தும் வருகின்றனர்.”