அப்போஸ்தலர் 12:5-16 - WCV
5
பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது.
6
ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்துகொண்டிருந்தார்கள்.
7
அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, “உடனே எழுந்திடும்” என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.
8
வானதூதர் அவரிடம், “இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக் கொள்ளும்” என்றார். தூதர் அவரிடம், “உமது மேலுடையை அணிந்து கொண்டு என்னைப் பின்தொடரும்” என்றார்.
9
பேதுரு வானதூதரைப் பின் தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதொ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார்.
10
அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரைவிட்டு அகன்றார்.
11
பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரொதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்” என்றார்.
12
அவர் யாவற்றையும் புரிந்துகொண்டவராய் மாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியாவின் வீட்டுக்குப் போனார். அங்கே பலர் ஒருங்கிணைந்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.
13
அவர் வெளிக் கதவைத் தட்டியபோது ரோதி என்னும் பெயருடைய பணிப்பெண், தட்டியது யாரெனப் பார்க்க வந்தார்.
14
அது பேதுருவின் குரல் என்பதை உணர்ந்ததும் மகிழ்ச்சியால் வாயிலைத் திறக்காமல் உள்ளே ஓடி, பேதுரு வாயில் அருகே நிற்கிறார் என்று அறிவித்தார்.
15
அவர்கள் அவரை நோக்கி, “உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா?” என்று கேட்டார்கள். ஆனால் அவர், “அது உண்மையே” என்று வலியுறுத்திக் கூறினார். அதற்கு அவர்கள், “அது அவருடைய வானதூதராய் இருக்கலாம்” என்றார்கள்.
16
பேதரு விடாமல் தட்டிக் கொண்டேயிருந்தார். கதவைத் திறந்தபோது, அவாகள் அவரைக் கண்டு மலைத்துப் போனார்கள்.